சிலிர்க்க வைக்கும் ஆன்மிகத் தொகுப்பு |
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவ ராத்திரி விரதம்.
என்று சிவபெருமான் சொன் னதாக சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கிறது. எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி... அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.
சிவராத்திரி என்றால், நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:
1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.
3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியில் இருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரி.
4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
மார்கழி மாத வளர்பிறை சதுர்த் தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்.
நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி: பெரும்பாலான சிவ ராத்திரிகள், அமா வாசை அல்லது சதுர்த்தசியை அனு சரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத் தின் மற்ற திதிகளிலும் வரும்.
மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர் பிறை திருதியை, சித்திரை மாதத் தேய் பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர் பிறை அஷ்டமி, ஆனி மாத வளர் பிறை சதுர்த்தசி, ஆடி மாதத் தேய் பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார் கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்தப் பதினான்கு நாட்களும் மாத சிவராத்திரி எனப்படும்.
சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் முறை!
சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும். கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. பிரசாதங்களான குங்குமம், விபூதி போன்றவற்றை இடக் கைக்கு மாற்றக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும். பிள்ளையார் முன்னால் பெண்கள் தோப்புக் கரணம் போடக் கூடாது.
முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.
முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை): ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந்தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது- பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.
இரவு முழுக்கத் தூங்காமல் இவ்வாறு பூஜை செய்து மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும். அதன் பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண் டும். சிவராத்திரி அன்று இரவு முழு வதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்க லாம்.
சிவராத்திரி வரலாறு!
பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது.
இது தவிர மற்றோர் அற்புதமான கதையும் உண்டு.
பிரளய காலம் முடிந்த அன்றைய இரவு நேரத்தில் அம்பிகை உமா தேவி, நான்கு ஜாமங்களிலும் சிவ பெருமானை ஆகம முறைப்படி பூஜை செய்தார்.
மறு நாள் பொழுது விடிந்தது. சிவபெருமானை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவை, எல்லோரும் சிவராத்திரி என உங்கள் பெய ரால் அழைக்க வேண்டும். அத்து டன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!’’ என வேண்டினார். பரமசிவனும், ‘‘அப்படியே!’’ என்று அருள் புரிந்தார். அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
நியதிப்படி பகல் பொழுது சிவபெருமானுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை, தனக்குரிய இரவுப் பொழுதை சிவபெருமான் பெயரால் வழங்கச் செய்தார்.
காசியில் சிவராத்திரி: சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும். காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜகஜ்ஜோதியாக இருக்கும்.
ராமேஸ்வரத்தில் சிவராத்திரி: இங்கு சிவராத்திரியன்று காலையில் திறக்கும் சந்நிதியை மறு நாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். அபிஷேகமும் வழிபாடுகளும் விமரிசையாக நடக்கும். தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம் ஆகியவை இரவு- பகலாக ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரங்கள் செய்வார்கள். ஒவ்வொரு ஜாமத்திலும் ஸ்வாமி மூன்று பிராகாரங்களிலும் உலா வந்து அருள் புரிவார். ஸ்வாமிக்கு ஆயிரம் குடங்களின் நீராலும் (சஹஸ்ர கலச), ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். மாலையில் வெள்ளி ரத உலாவும் காலையில் பெரிய ரத உலாவும் நடைபெறும்.
நேபாளத்தில் சிவராத்திரி: இங்கு பெரும் விழாவாகவே சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இங்குள்ள பசுபதி நாதர் கோயிலில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், நேபாளத்தின் பல பகுதிகளில் இருந்தும் துறவிகளும் பக்தர்களும் தரிசனம் செய்வதற்குக் குவிவார்கள்.
அன்று அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும். இதை நேபாள மன்னர், தனது சொந்தச் செலவில் செய்வார். கோயிலில் லட்ச தீபம் ஏற்றுவார்கள். எல்லோருமே புத்தாடை அணிவார்கள். பசுக்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோயில் மண்டபத்தை, விஜயநகர மன்னர் ஒருவர் சிவராத்திரியன்று வழங்கியதாகக் குறிப்பு உள்ளது.
திருச்சி கோயில் சிலா சாஸனம் ஒன்று, சிவராத்திரி விழாச் செலவுக்காகச் சோழ மன்னர், தனது செல்வத்தை தானம் செய்ததாகச் சொல்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரி விரதம் இருந்தவர்கள்:
மாசியில் பிரம்மா, பங்குனியில் மஹா விஷ்ணு, சித்திரையில் உமாதேவி, வைகாசி: சூரியன், ஆனி: ஈசான்யர், ஆடி: குகன், ஆவணி: சந்திரன், புரட்டாசி: ஆதிசேஷன், ஐப்பசி: இந்திரன், கார்த்திகை: சரஸ்வதி, மார்கழி: மனோன்மணி, தை: நந்திதேவர்.
சுகுமாரன் கண்ட சிவ தரிசனம்
சிந்து நதிக் கரையில் அமைந் திருந்த குஞ்சரபுரியின் மன்னர் புரஞ்சயன்.
அவர் நல்வழியில் நடந்து, குடிமக்களுக்கெல்லாம் ஓர் உதாரணமாகத் திகழ்ந்தார். மன்னர் போன வழியிலேயே மக்களும் தர்மத்தின்படி வாழ்க்கை நடத்தினர்.
மன்னரின் குரு _ விமலர். இவர், தேவ குருவான பிருகஸ்பதிக்குச் சமமான ஞானம் பெற்றவர். அமுத மயமான பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியதைப் போல, விமலருக்கு ஒரு பிள்ளை பிறந்தான். சுகுமாரன் என்று பெயர் வைத்தனர்.
பெயருக்குத் தகுந்தாற் போல, சுகுமாரனின் அழகு ஈடு இணை சொல்ல முடியாததாக இருந்தது. அவனைப் பார்த்தால் ‘ஓ... இவன்தான் மன்மதனோ!’ என்று எண்ணுவார்கள். மன்மதனைப் பார்த்தவர்களோ ‘மன்மதனை ஏற்கெனவே சிவபெருமான் எரித்து விட்டாரே... இருந்தும், இதோ மன்மதன் நம் எதிரில் நிற்கின்றானே!’ என்று ஆச்சரியப்படுவார்கள். அவ்...வளவு அழகு!
இப்படிப்பட்ட மகனுக்கு, உத்த ராயண புண்ணிய காலத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து சரஸ்வதி பூஜை செய்து, வேதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார் விமலர். இந்த இடத்தில், ‘ பாதகம் பயில் மகனுக்கு வேத பாடம் பயிற்றுவித்தார் ’ என்று ‘வரத பண்டிதம்’ கூறுகிறது. பிள்ளையான சுகுமாரன் பாதகம் செய்வதில் பயிற்சி பெறப் போகிறானே தவிர, வேதம் படிக்கப் போவதில்லை என்ப தைத் தெளிவாக உணர்த்தி விடுகிறது. ‘பளிச்’சென்று சொன் னால், வேத ஆகமம் படிக்க வேண்டிய வயதில் காம ஆகமம் படித்தான்.
பெரிய பெரிய மரங்களையும் அடியோடு பிடுங்கி எறியும் புயலைப் போல, காமம் அவனை ஆட்டிப் படைத்தது. காம வசப்பட்டவர்கள் கடவுளையே திட்டுவார்கள். சுகுமாரன் மட்டும் விதிவிலக்கா என்ன? சிந்தை போனபடி சிவபெருமானை இகழ்ந்தான். ‘‘அது கல்லு சிலை. அதைப் பார்க்காதே! மனிதனைப் பார்... என்னைப் பார். மன்மதனே என்னிடம் அழகில் தோற்றுப் போவான். உடம்பில் பலம் குறைவதற்குள் உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும். அதற்குத்தான் வாழ்க்கை. ஹஹ்ஹா..’’ என்று கூச்சல் போட்டான்.
வேதங்களில் பயிற்சி பெற வேண்டிய சுகுமாரன், வேத நாயகனான சிவபெருமானை இகழ்வதற்கு மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தான்.
பிள்ளையின் நடவடிக்கைகளைக் கேள்விப்பட்ட தந்தை, ‘‘மகனே! காமக் குளத்தில் குளித்துக் களிப்பதில் சந்தோஷம் கொள்ளாதே. காம வசப்பட்டவர்கள் பிழைக்க முடியாது.அழிவு தான். பழி சேரும்... பாவம் குவியும். பயம் அற்றுப் போகும். பகை வளரும். நரகத்தை அடைவாய். இவ்வளவு ஏன்? வாழ்க்கையே நரகமாகிப் போகும். சொன்னதைக் கேள். எரியும் நெருப்பை எண்ணெய் விட்டு அணைக்க முடியாது. வேண்டாம் விலைமாதர்கள் உறவு!’’ என்று பல வழிகளிலும் எடுத்துச் சொன்னார்.
அமிர்தமாகவே இருந்தாலும் ஓட்டைப் பாத்திரத்தில் அது தங்காது. அது போல, தந்தை சொன்ன நல்ல வார்த்தைகள் எதுவும் சுகுமாரனின் காதுகளில் விழவில்லை. என்ன தான் அறுசுவை உணவை அள்ளித் தந்தாலும் கோழி குப்பை மேட்டைத்தான் கிளறும். அதைப் போலக் காமக் கோழியான சுகு மாரனும் முன்னைவிடத் தீவிரமாகக் காமத்தில் மூழ்கினான்.
சுகுமாரனின் தீய நடத்தையால் அவன் தாய்- தந்தையுடன் உற்றார் உறவினர்களும் அவனை விட்டுப் பிரிந்தனர்.
‘இனிமேல் நம்மைத் தட்டிக்கேட்க யாருமில்லை!’ என்ற எண்ணத்தில் இருட்டு வேளையில் பலாத்காரமாகவும் காமத்தில் ஈடு பட்டான் சுகுமாரன்.
பாதிக்கப்பட்டவர்கள் மன்னன் புரஞ்சயனிடம் புகார் செய்தார்கள். ‘‘மன்னா! உங்கள் குருவின் பிள்ளை சுகுமாரன் முறை தவறி நடக்கிறான். அழகானவன் என்ற ஆணவத்தில் அவன் செய்யும் அட்டூழியங்கள், எல்லை மீறிவிட்டன. குடும்பத்தை எல்லாம் குலைத்து விடுகிறான். மன்னா! எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்!’’ என்று கண்ணீர் விட்டுக் கதறினார்கள்.
அருவருப்பின் உச்சத்தை அடைந்த மன்னர் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். அவரது கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. ‘‘சீக்கிரம் இழுத்து வாருங்கள் அந்த சுகுமாரனை!’’ என்று கர்ஜித்தார் மன்னர்.
எம தூதர்களைப் போலக் கொதித்துக் கிளம்பிய அரச தூதர்கள், அடுத்த கணமே சுகுமார னைப் பிடித்து வந்து மன்னன் முன்பாக நிறுத்தினார்கள்.
அவனைப் பார்த்ததும் கொதிப்பு அடைந்த மன்னன் சீற்றத்துடன், ‘‘எடுத்து விடுங்கள் இவன் தலையை!’’ என்று ஆணையிட்டார்.
அப்போது அவசர அவசரமாக எழுந்த அமைச்சர், ‘‘மன்னா! குருநாதரின் பிள்ளை இவன். இவனைக் கொல்வது உங்கள் மரபுக்கு அழகல்ல!’’ என்றார் பணிவாக.
மன்னனின் கோபத்தீ சற்று அடங்கியது. ‘‘காமத்தீயில் மூழ்கிக் கன்னியருக்குத் தீங்கு விளைவிக்கும் இந்தப் பாவி நமது எல்லைக்குள் இருக்கக் கூடாது. இவனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.
வேல் ஏந்திய வீரர்கள், சுகுமாரனை மரங்கள் சூழ்ந்த, அடர்ந்த இருண்ட காட்டில் விட்டனர்.
காட்டில் பற்பல அளவுகளில் சிறிதும் பெரிதுமாக இருந்த மரங்களும், காட்டு விலங்குகளும், கொடிய மிருகங்களின் உறுமல் ஓசையும் காட்டையே பயமுறுத்திக் கொண்டிருந்தன.
ஆனால், அவை எதுவும் சுகுமாரனை பாதிக்கவில்லை. ‘நாட்டில் நாம் பாட்டுக்கு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மைக் கொண்டு வந்து, இந்தக் காட்டில் தள்ளி விட்டார்களே!’ என்று பழைய நினைப்பிலேயே இருந்தான் அவன்.
காட்டில் சுற்றிக் கொண்டிருந்த சுகுமாரன் எதிரில் ஓர் ஓடை தென்பட்டது. மலர்ந்த பூக்களும் பச்சை இலைகளும் கொண்டு நீர் நிறைந்த அந்த ஓடை சுகுமாரன் உள்ளத்தைக் கவர்ந்தது.
அந்த அழகை மேலும் அதிகரிப்பது போல அங்கு அழகான பெண் ஒருத்தி வந்தாள். அப்புறம் என்ன? அவ்வளவுதான். அவளுடன் குடும்பம் நடத்தத் தொடங்கினான் சுகுமாரன். அவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து எம கிங்கரர்களைப் போல ஆனார்கள்.
குடும்பம் நடத்தப் பொருள் வேண்டுமே. பசிக்கு உணவு வேண்டுமே. காட்டு விலங்குகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கொன்று தின்றனர் சுகுமாரனும் அவன் பிள்ளைகளும். கொலையும் கொள்ளையும் சர்வ சாதாரணமாகிப் போனது அவர்களுக்கு. அதனால் அந்தக் காட்டின் வழியாக எந்தவொரு ஜீவராசியும் போக முடியவில்லை!
சுகுமாரனும் அவன் பிள்ளைகளும் செய்த அனைத்துத் தீமைகளும் சுகுமாரனின் மனைவி உடம்பில் நோய்களாகப் பரவின. நாய் படாத பாடுபட்ட அவள், நோயின் கொடுமை தாங்காது இறந்தாள். கொலையும் கொள்ளையுமாக இருந்தாலும் சுகுமாரன் இல்லறத்தில் புகுந்து விட்டான் அல்லவா? மனைவியின் பிரிவை அவனால் தாங்க முடியவில்லை. கதறினான். ‘‘ஐயோ! இனி உன்னை எப்போது பார்ப்பேன்?’’ என்று வாய்விட்டுக் கதறினான். புலம்பினான்.
மனைவியை இழந்த பிரிவுத் துயரிலேயே சுகுமாரன் வாழ்நாள் கழிந்து கொண்டிருந்தது. ஆனால், காலம்... நினைக்கவே கூசும்படியான ஒரு காரியத்தை அரங்கேற்றம் செய்ய நாள் குறித்தது.
சுகுமாரனின் பெண் குழந்தைகள் இருவரும் பருவமடைந்தார்கள். உண்மையான துறவிகளையும் காமத்துக்குத் திசை திருப்பும், கட்டழகுடன் விளங்கினார்கள். அவர்களின் அழகு, அப்பாவான சுகுமாரனையும் மயக்கியது. விளைவு?
ஏற்கெனவே காம வசப்பட்டுக் காட்டுக்கு வந்த சுகுமாரன், காமம் தலைக்கேற, தன் பெண்களையே திருமணம் புரிந்தான். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
ஒரு சிறு விளக்கம்: பெற்ற தகப்பனாக இருந்தாலும், மகளைக் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொட்டுப் பேசக் கூடாது. இதே போல்தான் தாயும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவள் தன் மகனைத் தொட்டுப் பேசக் கூடாது. விபரீதங்கள் விளையும் என நமது ஞான நூல்களும் சாஸ்திர நூல்களும் பல முறை சொல்லி இருக்கின்றன. அதே தகவல்களை அழுத்தம் திருத்தமாக நம் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக கதை வடிவங்களாகவும் கூறி இருக்கிறார்கள். அவற்றை மீறி நடந்தால் என்ன நடக்கும் என்பதை இந்தக் காலத்திலும் பார்க்கலாம். தந்தை தன் மகளிடமே முறைகேடாக நடந்ததால், அவரை அவர் மனைவியே வெட்டிக் கொன்ற சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன.
இனி, சுகுமாரன் தன் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சுவதைப் பார்க்கலாம். சுகுமாரனின் மகள்களுக்குப் பிறந்த குழந்தைகள்; அதனால் பேரக் குழந்தைகள். ஆனால், அவர்கள் சுகுமாரனுக்கே பிறந்தவர்கள். அந்த முறையில் குழப்பமான உறவு முறை. என்ன செய்வது? ‘தன் புதல்வியர்கள் தாம் ஈன்ற த(¬)னயர்’ என்று இரண்டையும் சேர்த்தே, ‘வரத பண்டிதம்’ விவரிப்பதால் நாமும் அந்தக் குழந்தைகளைப் பொதுவாகப் பிள்ளைகள் என்றே பார்ப்போம்.
பிள்ளைகளை எடுத்து மடியில் வைத்து அவர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்வதில் காலம் கழித் தான் சுகுமாரன்.
அந்த நாட்டு மன்னன் சூரிய கிரகணத்தை முன்னிட்டு யாகங்கள் செய்து வேத வல்லு நர்களுக்கெல்லாம் ஏராளமான பொன்னும் மணியும், பசு மாடுகளையும் தானமாக வழங் கிப் பணிவோடு அவர்களை வழி யனுப்பி வைத்தார்.
வேத வல்லுநர்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பொருட் குவியல்களைத் தலையில் சுமந்து கொண்டு, பசு மாடுகளை ஓட்டியபடி சுகுமாரன் இருக்கும் காட்டின் வழியாகப் போக வேண்டி இருந்தது. அவர்களைப் பார்த்ததும் சுகுமாரன், அவர்களை வழி மறித்துத் தாக்கினான். வேதியர்களுக்கு உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியது. பலர் பற்களை இழந்தார்கள். அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்ட சுகுமாரன் அவர்களை அடித்து விரட்டினான்!
அவ்வளவு அந்தணர்களும் போய் அரசனிடம் அழுதார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட, பற்களை இழந்த அவர்களைக் கண்டு பதறினார் மன்னர். சுகுமாரனது கொடுமைகள் அவருக்கு விளங்கின. ‘‘சேனாதிபதி! இன்று மாலைப் பொழுதுக்குள் கொடியவன் சுகுமாரனை என் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். ம்... உடனே செல்லுங்கள்!’’ என்று ஆணையிட்டார்.
சேனாதிபதி தலைமையில் வீரர்கள் பலர் ஏராளமான ஆயுதங்களோடு காட்டில் புகுந்து சுகுமாரனைத் தேடினார்கள்!
ஆனால், அதற்குள் நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்தோ என்னவோ, காட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் கடந்து, தன் குடும்பத்தோடு ஒரு மலைச் சாரலை அடைந்து வசிக்கத் துவங்கினான் சுகுமாரன். அவ்வப்போது ஏதாவது ஒரு விலங்கை வேட்டையாடி உண்பதும், தன் குடும்பத்தினருக்குக் கொடுப்பதும், ஒளிந்து வாழ்வதுமாக சுகுமாரன் வாழ்நாள் அங்கு போய்க் கொண்டிருந்தது.
சுகுமாரன் இருந்த இடத்துக்கு அருகில் நாக நகர் என்னும் நகரம் இருந்தது.
ஒரு நாள், நாக நகர் அரசரும் அவ்வூர் மக்கள் பலரும் ஒன்றாக நீராடி, விபூதி அணிந்து, அங்குள்ள நாகேஸ்வரரை வழிபடப் போனார்கள்.
கோயிலை அலங் கரித்து விளக்குகள் ஏற்றி அபிஷேக அர்ச்சனைகள் செய்து, தூப தீபம் காட்டினார்கள். அன்று சிவராத்திரி. அவ்வளவு பேரும் சிவ ராத்திரி விரதம் இருந்து வழிபாடு செய்தனர்.
அப்போது தன் மனைவிகளுக்குப் பூப்பறிப்பதற்காக அங்கு வந்த சுகுமாரன், சிவராத்திரி வழி பாட்டைக் கண்டான். அவனுக்கு அது புதுமையாக இருந்தது. என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. அப்போது சந்நிதியில் இருந்தவர்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி ‘ஹரஹர சங்கர... ஜயஜய சங்கர’ என்று கோஷமிட்டபடி நகர்ந்தார்கள்.
கர்ப்பக்கிரகத்தில் இருந்த ஸ்வாமியை நேருக்கு நேராக தரிசித்தான் சுகுமாரன். சற்று நேரம் கோயிலில் இருந்து விட்டுப் பின்னர் தனது இருப்பிடத்தை அடைந்தான். சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தான்.
எம தூதர்கள் அவனை(அவன் உயிரை)ப் பிடித்து இழுத்து, அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். கயிறுகளால் அழுத்திக் கட்டி, ‘‘பாவி! எத்தனை பாவங்கள் செய்தாய்... அனுபவி. உன்னை விடப் போவதில்லை. நரகத்தில் இருக்கும் அத்தனை தண்டனைகளும் உனக்குப் போதாது!’’ என்று கத்தினார்கள்.
அந்த வேளையில் சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, ‘‘நீ போய் சுகுமாரனுக்கு ஆறுதலும் ஆதரவும் சொல்லி, அவனை ஒரு தங்க விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டு வா!’’ என்றார்.
நந்தி சில சிவ கணங்களுடன் போய், சுகுமாரனைத் தண்டிக்கும் எம தூதர்கள் முன்பாக நின்று, ‘‘இவனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிரை இழப்பீர்கள்!’’ என்றார்.
அனைவருக்கும் பயத்தை உண்டாக்கும் தோற்றத்தைக் கொண்ட எம தூதர்கள், ‘‘யார் நீங்கள்? நெற்றி நிறைய விபூதி பூசி, சடைமுடியுடன் முனிவர்கள் போல இருக் கிறீர்கள். ஆனால், வம்பு செய் கிறீர்களே! உங்களுக்குக் கொஞ்சம் கூட நீதி தெரியாதா? எம தூதர்களான நாங்கள் கடமையைச் செய்யும்போது எங்களைத் தடுத்து வீம்பு பேசுகிறீர்களே?!’’ என்றார்கள்.
நந்தி தேவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘‘உங்கள் தலைவரான எமனை உதைத்துக் காலனுக்கும் காலன் என்று பெயர் பெற்ற சிவ பெருமானின் ஏவலால் வந்த நாங்கள் சிவ கணங்கள். இந்த சுகுமாரனை விட்டு விட்டுப் போய் விடுங்கள்!’’ என்றார் நந்திதேவர்.
எம தூதர்கள் மறுத்தார்கள். போர் மூண்டது. கை-கால்களை இழந்து உடம் பெல்லாம் புண் ணாக எம தூதர் கள் தோற்று ஓடினார்கள். சுகு மாரனை தங்க விமானத்தில் ஏற்றிய நந்தி தேவரும் மற்ற சிவ கணங்களும் கயிலைக்கு வந்து சேர்ந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய சுகுமாரன், அம்பிகையை இடப்பாகம் கொண்ட அரனை தரிசித்தான். கைகளைத் தலைக்கு மேல் கூப்பினான்.
‘‘சிவபெருமானே! பாவங்கள் எல்லாவற்றையும் செய்த பாவிக ளிலேயே முதல்வன் நான். நல்ல குணம் ஒன்றுகூட இல்லை. எனக் கும் இவ்வாறு அருள் புரிந்த தெய் வமே! பரம்பொருளே!’’ என்று பலவாறு சொல்லி கண்களில் நீர் வழிய வணங்கினான்.
‘‘என்னைப் போலவே வடி வம் பெற்று நீயும் இங்கேயே சிவ கணங்களுடன் இரு!’’ என்று அருள் செய்தார் சிவபெருமான். அதே விநாடியில் சுகுமாரன் சிவ பெருமானைப் போலவே வடிவம் பெற்றான்.
நந்திதேவருடன் போர்க்களத்தில் தோற்று ஓடிய எம தூதர்கள் எமனிடம், ‘‘தர்மராஜாவே! சுகுமாரனை நாங்கள் பிடித்து இழுத்து வரும்போது சில சிவ கணங்கள் வந்து எங்களை அடித்து, சுகுமாரனை கயிலைக்குக் கொண்டு போய் விட்டார்கள்!’’ என்றனர்.
எமதர்மன் கோபம் கொண் டான். கண்கள் சிவந்தன; தீப்பொறிகள் பறந்தன. கைகளைத் தட்டினான்.
‘‘சித்ரகுப்தா! சுகுமாரனிடம் ஏதாவது புண்ணியம் இருக்கிறதா? கணக்குப் பார்!’’ என்றான்.
கணக்குகளைச் சரிபார்த்த சித்ரகுப்தன் உதடுகளைப் பிதுக் கினான். ‘‘ஒன்றும் இல்லை தலைவா! அந்தப் பாவி பிறந்ததில் இருந்து சாகும் வரை ஒரு நல்லதும் செய்யவில்லை. குணம் கெட்ட அந்தக் குடிகேடனுக்கு இங்கு இருக் கும் நரக தண்டனைகள் எல்லாம் போதாது. புதிதாக ஏதாவது நரகத்தை சிருஷ்டி செய்துதான் தண்டனை தர வேண்டும். கிராதகன்; பாவங்களின் களஞ்சியமாகவே வாழ்ந்திருக்கிறான் சுகுமாரன்!’’ என்று விவரித்தான் சித்ர குப்தன்.
எமனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. ‘‘பிறகு ஏன் இப்படி நடந்தது? நரகத்துக்கு வரவேண்டிய சுகுமாரனை நந்திதேவர் ஏன் கயிலாயத்துக்குக் கொண்டு போனார்?’’ என்று முணுமுணுத்த எமன், ‘‘சரி! கயிலாயம் போய் ஸ்வாமியிடமே கேட்டு விடலாம்’’ என்று கிளம்பினான். சித்ரகுப்தனும் எம தூதர்களும் அவனைப் பின்தொடர்ந்தார் கள்.
கயிலையை அடைந்த கரியவ னான எமன், ‘‘கண்ணுதலோனே! கயிலாயநாதனே! தங்கள் அருளால் தங்கள் உத்தரவின் பேரில், அடியேன் கூற்றுவனாக இருந்து வருகிறேன். பிறந் ததில் இருந்து தீமை செய்வதையே தொழிலாகக் கொண்டவனும் முறை தவறிய காமக் கடலில் மூழ்கித் திளைத்தவனுமான சுகுமாரனை என் தூதர்களிடமிருந்து பிடித்துக் கொண்டு வந்து இங்கே கயிலையில் சேர்த்து விட்டார்கள். தங்கள் தூதர்கள் செய்த செயலைத் தங்களி டம் தெரிவிக்கவே அடியேன் வந்தேன்!’’ என்று பணிவோடு சொன்னான்.
கண்ணுதலோன் கருணை பொங்க எமனைப் பார்த்தார்.
‘‘காலனே! எம தர்மா! ஒருவன் செய்யும் தவறுகளைப் பார்த்து அவனைக் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அவனி டம் இருக்கும் நல்லதையும் பார்க்க வேண்டும். நீ சொன்ன சுகுமாரன் எதுவாக இருந்தாலும் சரி! அவன் சிவராத்திரி அன்று என்னை தரிசித்திருக்கிறான். சிவராத்திரி அன்று என்னை தரிசித்தவர், விரதம் இருந்தவர், என்னை பூஜை செய்தவர் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு நான் நற்கதி அளிப்பேன். சிவராத்திரி அவ்வளவு விசேஷமானது!’’ என்று விவரித்தார் சிவபெருமான்.
இந்த அமுத மொழி களைக் கேட்ட எம தர்மன் அவரைப் பணிந்து தனது உலகை அடைந்தான்.
வரத பண்டிதம் கூறும் இந்தக் கதை, ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந் தாலும் சிவராத்திரி அவனுக்குப் பாவங்களில் இருந்து விடுதலை அளித்து நற்கதி கொடுக்கும் என்பதை விளக்குவதற் காக ஏற்பட்டதே தவிர, சிவராத்திரி விரதம் இருந்தால் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை உண்டாக்குவதற்காக வந்ததல்ல. அந்த எண்ணம் வந்துவிட்டால் அப்புறம் விரதங்கள் மட்டுமல்ல; தெய்வங்களால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது!
மேற்குறிப்பிட்ட கதையைச் சொன்ன வரத பண்டிதம், அடுத்ததாக வேடன் ஒருவனின் கதையை விவரிக்கிறது.
அங்குலனின் அறியா பூஜை
அந்த வேடனின் பெயர் அங்குலன். அவன் கண் எதிரில் எந்தவொரு விலங்கும் நடமாட முடியாது.
சாதாரணமாக வேடர்கள் தரையில் வலை விரித்து, அதில் சிக்குபவற்றைப் பிடிப் பார்கள். ஆனால், அங்குலனோ, தரை யில் மட்டுமின்றி மரங் களிலும் சேர்த்தே வலை விரிப்பான். தரையில் உள்ள வலையில் இருந்து தப்பிக்கும் விலங்குகள், மரங்களில் இருக்கும் வலையில் மாட்டிக் கொள்வதற்காகவே அவன் அப்படிச் செய்தான்.
அங்குலனுக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். அமைதி யாகப் போய்க் கொண்டிருந்த அங்குலனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கி அவனுக்கு அருள் செய்ய, ஆண்டவன் நினைத் தார் போலும்.
ஒரு நாள்... அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்துவிட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை.
அங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான்.
‘‘ஹும்..! பகல் பொழுது முழுதும் வீணாகப் போய் விட்டது. எதுவும் கிடைக்கவில்லை. வயிற்றைப் பசிக்கிறது. என் நிலையே இப்படி யென்றால், வீட்டில் உள்ளவர்கள்...? வேறு வழியில்லை. இன்று வீட்டுக்குப் போகக் கூடாது. போனால் பசியுடன் இருக்கும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். ‘ஒன்றும் கொண்டு வரவில்லையா? பசிக்கிறதே!’ என்பார்கள். ‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்த அங்குலன், காட்டிலேயே ஒரு குளத்தங்கரையில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான்.
‘இரவு நேரத்தில் இங்கு ஏதாவது விலங்குகள், குளத்தில் தண்ணீர் குடிக்க வரும். எதற்கும் தயாராக இருப்போம். ஏதாவது வந்தால் அடித்து விடலாம்!’ என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் கீழே குளத்தைப் பார்த்தான். குளம் தெரியவில்லை. முன்னால் இருந்த வில்வக் கிளைகள் மறைத்திருந்தன.
அம்பை எடுத்த அங்குலன், அதைக் கையில் பிடித்து, வில்வ இலைகளை உதிர்த்து, குளம் தெரியும்படி செய்து கொண்டான். அங்குலன் மரத்தில் இருந்து உதிர்த்த வில்வ இலைகள் முழுவதும், அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
விலங்குகள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்த அங்குலன் முன்னால் விலங்குகள் எதுவும் வரவில்லை. ஆனால், அவனுக்குத் தூக்கம் வந்தது. கூடவே பயமும் வந்தது.
‘என்ன இது? பகல் பொழுது முழுவதும் அலைந்து திரிந்தது இப்படி அசத்து கிறதே! இங்கு தூங்கிக் கீழே விழுந்துவிட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடு வேனே. தூக் கத்தை விரட்ட வேண்டும். என்ன செய்யலாம்?’ என்று நினைத்த அங்குலன், மரத் தில் இருந்து வில்வ இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான். அவ்...வளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாகப் பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.
பொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்க வில்லை. மனம் வெறுத்துப் போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.
அங்கே _ அங்குலனின் மனைவி, ‘‘காட்டுக்குப் போனவரை இன் னும் காணோமே! இரவும் போய் விட்டது. என்ன நடந்ததோ? தெய் வமே! அவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டும்!’’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அங்குலன் வீடு திரும்பியதும் அவன் மனைவி நிம்ம திப் பெருமூச்சு விட் டாள். வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.
காரணம்? காட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது ஒரு சிவராத்திரி நாளின் போது.
இதை, சிவபெரு மான் தனக்குச் செய்த சிவராத்திரி விரத வழிபாடாக ஏற்றுக் கொண்டார். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது.
லிங்க-உற்பவம்?
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
சிவராத்திரி தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை. அதுபோல், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை அது அழகும் வாசனையும் நிறைந்ததாக இருந்தாலும் அதை சிவபெருமான் விலக்கி வைத்தார் என்பதும் தெரியும்.
ஆனால், ‘சிவ ராத்திரியன்று ஒரு நாள் மட்டும், அதுவும் இரவுப் பொழுதில் லிங்கோற்பவ காலத் தில் தாழம்பூவால் என்னை பூஜை செய்யலாம். அலங் கரிக்கலாம்!’ என்று சிவபெருமான் சொன்னார் என்று ஒரு தகவலும் உண்டு. அதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.
அடுத்து, லிங்க உற்பவம் மற்றும் லிங்கத்தைப் பற்றிய உண்மையைப் பார்க்கலாம்.
சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் - லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. சிவலிங்கம் பற்றிய உண்மையான விளக்கம், ஞான நூல்களில் தெளிவாக உள்ளது.
சம்ஸ்கிருத மொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தில் பார்வதி கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவல் இருக்கிறது. தமிழில் திரு மந்திரத்தில் சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவலைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருமூலர்.
அது, வழிபாட்டில் மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு.
இவற்றில் நாம் செய்து வருவது உருவ வழிபாடு.
அருவ வழிபாடு என்பது, உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கும். இதையே வேறு விதமாக பார்த்தால், ‘பார்க்கும் அனைத்தையும் பரம்பொருளாகவே பார்ப்பது’ என்பதே பொருள். ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறாரே, அந்த நிலை. மகான்கள் பலர் சொல்வதும் வேதங்கள் சொல்வதும் இந்த வழிபாட்டைத்தான்.
உருவ வழிபாட்டுக்கும், உருவ மில்லாத அருவ வழிபாட்டுக் கும் நடுவில் இருப்பது ‘அருஉருவ வழிபாடு’. உருவம் இருக்கும். ஆனால், கை-கால் முதலான அவயவங்களுடன் சேர்ந்த உருவத்தைப் போல இருக்காது; அருவமாக இருக்கும். இந்த அருஉருவ வழிபாட்டைக் குறிப்பதுதான் சிவலிங்க வழி பாடு!
சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு ‘ஆவுடையார்’ என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும். இதைக் கொஞ்சம் ஆராயலாம். ஆகாயம் என்பது கவிழ்த்து வைத்த மரக்கால் (தானியங்களை அளக்கப் பயன்படும்) போல இருக்கிறது. ஆகாயத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, அதன் வடிவம் புலப்படுவதில்லை. உருவமாகத் தெரிந்தும் உருவமில்லாமல் இருக்கும். இந்த ஆகாயத்தைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது. அசையும் பொருள்- அசையாப் பொருள் என (நாம் உட்பட) அனைத்துமே, ஆகாயம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன.
சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை ‘அண்ட லிங்கம்’ என்று மகான்கள் சொல்வார்கள்.
கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்துக் கொள்வோம். அதுபோல ஆகாய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது. ஆகாய லிங்கம் மிகப் பெரியது அல்லவா? அதனால்தான் அதற்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமும் அதிக அளவில் உள்ளது.
அபிஷேகம் முடிந்து விட்டது. அடுத்து அர்ச்சனை அல்லது பூக்களைச் சார்த்த வேண்டும். ஆகாய லிங்கத்துக்கு எந்தப் பூக்களைச் சார்த்துவது? ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான், ஆகாய லிங்கத்துக்குப் பூமாலை.
இவ்வளவு பார்த்த பிறகும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயில்களில் இருக்கும் ஸ்வாமிக்கு எல்லாம், ஏதாவது ஒரு முறையில் எப்படியாவது ஆடை சார்த்துகிறோம். மிகவும் உயரமான ஆஞ்சநேய வடிவங்களுக்கு எல்லாம் ஏணி வைத்தாவது ஆடை சார்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆகாய லிங்கத்துக்கு எப்படி அல்லது எதை ஆடையாகச் சார்த்துவது?
இந்த லிங்கத்துக்குத் திசைகளே ஆடையாக உள்ளன. இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம்.
இதை யாரோ, பக்குவப்படாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேர் தரிசித்த சித்த புருஷரான திருமூலர் சொன்ன தகவல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிற மகான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் ‘திருமந்திரம்’ நூலை எழுதியவர் திருமூலர். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தில் சிவலிங்கத்தின் உண்மை விளக்கத்தைத் திருமூலர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதோ அவர் சொல்லும் பாடல்:
இதன்படி நாம் அனை வருமே ஒரே கூரையின் கீழ் இருக்கிறோம். வேறுபாடும் வெறுப்புமின்றி இருக்க வேண்டியது நமது பொறுப்பு; கடமையும்கூட.
கௌதமர் சொன்ன சிவராத்திரி மகிமை!
‘‘ம ன்னா! சிவலோகம் போல விளங்கும் கோகர்ணத்தில் சிவராத்திரியன்று சிவபெருமானை தரிசித்து பூஜை செய்தபின், ஜனக மன்னன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டேன். அப்போது வழியில் ஓர் அதிசயம் கண்டேன்!’’ என்றார் கௌதமர்.
‘‘சொல்லுங்கள்! மாமுனிவரே!’’ - வேண் டினார் மன்னர் கன்மாட பாதன்.
‘‘வழியில் ஒரு குளத்திலிருந்து தண்ணீர் குடித்து விட்டு அதன் கரையில் உள்ள ஆல மர நிழலில் தங்கியிருந்தேன். அப்போது அங்கு வந்த விகார உருவம் கொண்ட கிழவி ஒருத்தி, பல விதமான நோய்களால் வருந்துபவளாகத் தென்பட்டாள். வெயிலின் கொடுமை தாங்காமல் கீழே விழுந்த அவள், என் கண் எதிரிலேயே இறந்தாள். அதே கணத்தில் ஆகாயத்தில் இருந்து தங்க விமானம் ஒன்று அங்கே இறங்கியது. அதில் இருந்து சிவ கணங்கள் இறங்கி வந்தனர். நான் அவர்களை வணங்கினேன். ‘நீங்கள் இங்கு வந்த காரணம் என்ன?’ என்று கேட்டேன். ‘இந்தப் பெண்மணியைக் கொண்டு வரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். அதற்காக வந்தோம்!’ என்றனர். ‘இவள் எந்த விதத்திலும் அதற்குத் தகுதி இல்லாதவளாகத் தெரிகிறாள். அப்படியும், இவளைச் சிவ லோகம் கொண்டுபோக நீங்கள் எதற்காக வந்தீர்கள்?’ என்று கேட்டேன். ‘முனிவரே! இவள் சரித்திரம் ஆச்சரியமானது!’ என்ற அவர்கள், அந்தக் கிழவியின் கதையை விவரித்தார்கள்’’ என்ற கௌதமர் அந்தக் கதையைச் சொன்னார்.
அதன் சாராம்சம்:
தேவர்களும் விரும்பும் கேகய தேசத்தில் வளமை அனைத்தும் நிறைந்திருந்தன. அவரவர் தங்கள் கடமையில் தவறாமல், தர்மத்தை வளர்த்தார்கள்; காப்பாற்றினார்கள்.
விளக்கின் அடியில் கொஞ்சம் இருட்டு இருப்பதைப் போல தர்மம் நிறைந்த அங்கும் சௌமினி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். செல்வ வசதியால் பேரழகியாகத் திகழ்ந்தாள். அவளுக்குத் திருமணமும் நடந்தது.
சௌமினியும் அவள் கணவனும் நல்ல முறையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் சௌமினியின் கணவன் எதிர்பாராமல் இறந்து போனான். சில நாட்கள் வருத்தத்தில் ஆழ்ந்தாள் சௌமினி. அதன் பிறகு சௌமினியின் அழகும் இளமையும் அவளைத் தவறு செய்யத் தூண்டின.
ஆம்! சௌமினி மனம் போனபடியெல்லாம் முறைகேடான வாழ்வு வாழ்ந்தாள். தட்டிக் கேட்க ஆளில்லை என்றதும் அவளது அக்கிரமம் எல்லை மீறியது.
இந்தச் செயல் ஊராரை உசுப்பியது. அனைவரும் கூடினார்கள். ‘தானும் கெட்டு அடுத்தவரையும் கெடுக்கும் இந்தத் தறுதலை, இனிமேல் இங்கு இருக்கக் கூடாது. இவளை ஊரைவிட்டு விரட்ட வேண்டும்’ என்று முடிவு எடுத்தார்கள்.
அதன்படி சௌமினி அங்கிருந்து விரட்டப்பட்டாள். அன்பு மயமான வாழ்க்கையை விட்டவள், அல்லல் மயமான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டாள். அழுகை வெடித்தது. கண்ணீரை வழியவிட்டவள் காட்டுக்குள் நுழைந்தாள். எதிர்ப்பட்டான் ஒருவன்.
‘‘பெண்ணே! யார் நீ? ஏன் அழுகிறாய்? எதற்காக இந்தக் காட்டுக்குள் வந்தாய்? நகரவாசி போல் இருக்கிறாயே?’’ என்று விசாரித்தான்.
நடந்ததைச் சொன்னாள் சௌமினி. வந்தவனின் கண்கள் விரிந்தன. ‘‘அழாதே! அழாதே! ஊரார் விரட்டினால் என்ன? உள்ளம் விரும்பி உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்றான்.
சௌமினி அழுகையை நிறுத்தினாள். ‘‘ஊராரால் விரட்டப்பட்டு ஆதரவு இல்லாமல் காட்டில் அலையும் நான் இதற்கு மறுப்பேனா?’’ என்று சம்மதம் தெரிவித்தாள் சௌமினி.
காட்டிலேயே அவர்கள் கடிமணம் புரிந்தார்கள். பரஸ்பரம் விரும்பிச் செய்து கொண்ட கல்யாணமானதால் வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒரு முறை சௌமினியின் கணவன் வெளியூர் போனான். நாட்டில் இருந்து விரட்டப்பட்ட சௌமினி, ஆதரவுடன் நல் வாழ்க்கையும் கிடைத்ததும், காட்டிலும் மனம் போன போக்கில் வாழத் தொடங்கினாள். ஆனால், இந்தத் தடவை புத்தி, குடிபோதையை நாடியது.
‘கணவனும் வெளியூர் போயிருக்கிறான். நாம் கள் குடிக்க இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. எனவே, உடனே குடிக்க வேண்டியதுதான்’ என்று தீர்மானித்த சௌமினி மனம் திருப்தி அடையும் வரை குடிபோதையில் ஆழ்ந்தாள். புத்தி தடுமாறியது. மாமிசம் உண்ண விரும்பினாள். மாட்டுத் தொழுவத்தின் உள்ளே புகுந்தாள். இருட்டு நேரம். சின்னஞ் சிறிய பசுங்கன்று ஒன்றைக் கொன்றாள். தான் கொன்றது பசுங்கன்று என்பது அவளுக்குத் தெரியாது.
அதை வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது தான், தான் கொன்றது பசுங்கன்று என்பது விளங்கியது. சௌமினி அதிர்ச்சி அடைந்தாள். ஏறிய போதை மொத்தமும் சட்டென்று இறங்கி விட்டது. இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) நேரம் ‘சிவ சிவா’ என்று பரிதவித்தவள், ‘‘கொன்னதோ கொன்னாச்சு. இனி இதத் தின்னு தீத்துட வேண்டியதுதான்!’’ என்று முணுமுணுத்தபடி பசுங்கன்றைச் சமைத்துச் சாப்பிட்டாள். எலும்புகள் மீந்து இறைந்து கிடந்தன.
அவ்வளவு எலும்புகளையும் எடுத்தாள் சௌமினி. யாரும் பார்க்காதபடி வீதியில் கொட்டினாள். ‘‘ஐயோ! பசுங்கன்றைப் புலி கொன்று தின்று விட்டது!’’ எனக் கூச்சலிட்டாள்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதை நம்பினர். வெளியூரில் இருந்து திரும்பி வந்த கணவனும், சௌமினியின் வார்த்தைகளை நம்பினான். அவன் நம்பினாலும் நம்பாவிட்டாலும் போகட்டும்... இந்தக் கதையைச் சொன்ன கௌதம முனிவர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம்.
தீயவற்றிலிருந்து நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ‘ஹ..! இந்த ஒரு தடவதான்! இந்த ஒரு தப்புதான்!’ என்று அலட்சியமாக இருந்தால், அந்த ஒரு தீமை நமது பற்பல தீமைகளுக்கு வழி வகுத்துவிடும். தூய்மையான ஆடையில் கொஞ்சம் அழுக்கு பட்டால் அது தெரியும். கண்ணை உறுத்தும். அதைத் தூய்மை செய்யாவிட்டால் நாளாவட்டத்தில் அது மேலும் மேலும் அழுக்கேறி சுருணையாகிக் குப்பைக்குப் போய்விடும். அதுபோலதான் நாமும். ‘அடப் போடா! ஆனது ஆகிப்போச்சு! சாண் போனா என்ன? மொழம் போனா என்ன?’ என்று இருந்தால், மீளவே முடியாத - அடுத்தவர்களாலும் மீட்க முடியாத நிலைக்குப் போய் விடுவோம். சௌமினியின் வாழ்க்கை மூலம் கௌதமர் நமக்கு உணர்த்தும் பாடம் இது.
சரி. கதைக்கு வருவோம்! தவறுக்கு மேல் தவறுகளாகச் செய்துகொண்டே போன சௌமினி, கள் குடித்து, கன்றைக் கொன்று தின்று, அதன் எலும்புகளை வீதியில் போட்டு புலியின் மேல் பழியைச் சுமத்தி, அனைவரையும் நம்ப வைத்தாள். அவள் கணவனும் நம்பினான். ‘‘விடு! இனிமேலயாவது நாம ஜாக்கிரதையா இருக்கணும்!’’ என்றான்.
கொஞ்ச காலம் கழித்து சௌமினி இறந்தாள். அவள் உயிரைக் கொண்டு போன எமதூதர்கள், எமன் எதிரில் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
‘‘அழகி என்ற கர்வத்தால் எந்த உடம்பை வைத்துக் கொண்டு பாவங்களைச் செய்தாளோ, அந்த உடம்பின் மூலமே பாவங்களுக்கு உண்டான கூலியையும் இவள் அனுபவிக்க வேண்டும். இவள் பூலோகத்தில் தரித்திரம் நிரம்பிய குடும்பத்தில் பிறக்கட்டும்!’’ என்றான் எமன்.
சௌமினி ஓர் ஏழைக் குடும்பத்தில் வந்து பிறந்தாள். சோற்றுக்கே வழியில்லாத நிலை. கொஞ்ச காலத்திலேயே பெற்றோரை இழந்தாள். ஆதரிக்க யாரும் இல்லை. அன்றாடம் அலைந்து திரிந்து பிச்சை எடுப்பதும் உண்பதுமாக சௌமினியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
அவள் வளர வளர வியாதிகளும் அவள் உடம்பில் வளர்ந்து தங்கள் இருப்பைக் காட்டின. வியாதிகளுடன் போட்டி போட்டு முதுமையும் சௌமினியைத் தாக்கியது. நடையில் தள்ளாட்டம்; கைகளில் நடுக்கம்; கண்களில் பார்வை மங்கல் என முதுமைக்கே உண்டான செயல்கள் தலைகாட்டின. ஆனால், எந்தக் காலத்திலும் வாட்டியெடுக்கும் பசி மட்டும் தணியாமல் சௌமினியை ஆட்டிப் படைத்தது.
அங்கங்கு கை நீட்டிக் கிடைத்ததை வாங்கி உண்ட சௌமினி, ஒரு முறை சிவராத்திரிக்காக கோகர்ணம் போகும் கும்பலுடன் சேர்ந்து பயணம் செய்தாள்.
கோகர்ணத்தை அடைந்த சௌமினி கோயிலின் எதிரில் நின்று, ‘‘ஐயா! பசிக்குது. கண் இல்லாதவளான எனக்கு சாப் பாடு குடுங்க!’’ என்று பிச்சை கேட் டாள். அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒருவன் கேலியாகச் சிரித்து,
‘‘இந்தா சாப்பாடு!’’ எனக் கூறி வில்வ இலையை சௌமினியின் கைகளில் போட் டான்.
வாங்கிப் பார்த்த சௌமினி அது சோறு அல்ல என்பதை உணர்ந்ததும் அதைத் தூர வீசி எறிந்தாள். அந்த வில்வ இலை அங்கிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது போய் விழுந்தது.
சிவராத்திரி அன்று சௌமினி எறிந்த அந்த வில்வம் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய் தது போல் ஆயிற்று. அந்தப் புண்ணியத்தின் காரணமாகவே சிவபெருமான் விமானத்தை அனுப்பி அவளை கயிலாயத்துக்கு அழைத்து வரச் சொன்னார்.
இந்தத் தகவல்களை சிவ கணங் கள் கௌதமருக்குச் சொல்ல, கௌதமர் கன்மாடபாதனுக்குச் சொன்னார். அறியாமலே செய் யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன் தரும் என்பதை விளக்கும் ‘சௌமினியின் வரலாறு’ பிரம்மோத்திர காண்டத்திலும் வரதபண்டிதத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.
ஆக, அறியாமலே செய்த பூஜைக்கே பலன் உண்டு என்றால், சிவராத்திரியில் அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும் ஆலயம் செல்பவர்களுக்கும் எத்தனை புண் ணியம் வந்து சேரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!
சிவனைத் தொழுது சிந்தை குளிர்வோம்!
|
நன்றி விகடன்