சக்தி சங்கமம்
தாமரையாக மலருங்கள்!
வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சத்குரு
கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலையின் அடிவாரம். அங்கே பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஈஷா யோகா மையம். மென்மையாக நம் உடலைத் தழுவியபடி வீசுகிறது இதமான காற்று.
ஆங்கங்கே தென்படுகிற மனிதர்களின் முகமும் மொழியும், அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கின்றன.
தியான லிங்கத்துக்கு எதிரில் உள்ள வித்தியாசமான நந்திக்கு அருகில் நின்றுகொண்டிருந்த வேளையில், வேகமாக வந்து நம் அருகில் சரட்டென்று நின்றது ஜிப்ஸி ஜீப் ஒன்று. அதிலிருந்து குதித்து இறங்கி, நம்மை நோக்கி விரைந்து வந்தார் சத்குரு.
'அடேடே... சக்திவிகடன் வாசகர்களா? வாங்க, வாங்க! வாசிக்கற பழக்கம் மிக நல்ல விஷயம். நிறைய படிங்க!' என்று அன்போடு வரவேற்றார்.
நமது வாசகர்கள் அனைவரும் சத்குருவின் சந்திப்பை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்தான். ஆனால், அங்கே அப்படியொரு இன்ப அதிர்ச்சியாக அவரின் சந்திப்பு நிகழும் என யாரும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கிருஷ்ணகுமார், நந்தினி, கீதா, ஸ்யாம் பிரசாத், குமார், ராசு, பவானி, சாருமதி, சுப்ரமணியன், சண்முகம், விஜயகுமார், அம்ருதா என ஒவ்வொருவராக சத்குருவிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். பின்பு உரையாடலின்போது அவர்கள் ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எளிமையாகவும் குறும்பாகவும் ஜாலியாகவும் சத்குரு சொன்ன பதில்களும்... சக்திவிகடன் வாசகர்களுக்கு இன்னொரு தித்திப்பு தீபாவளி!
முதல் கேள்வியைக் கேட்டு உரையாடலைத் தொடங்கி வைத்தார் வாசகி கீதா... ''முதன்முதலாக இப்போதுதான் இங்கே ஈஷா யோகா மையத்துக்கு வருகிறேன். இங்கே திரும்பின பக்கமெல்லாம் பாம்பின் சிலைகளையும் உருவங்களையும் பார்க்க முடிகிறது. ஈஷா மையத்தில் உள்ள அன்பர்கள் பலரும் நாகர் உருவம் பொறித்த மோதிரம் அணிந்திருப்பதைக் கவனித்தேன். பாம்புக்கும் ஆன்மிகத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இது குறித்து விளக்குங்களேன்!''
''ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கை என்று எதைத் தீர்மானித்திருக்கிறாரோ, எதை அறிந்திருக்கிறாரோ... அதன் உச்சத்தை அடையவேண்டும் எனும் ஆவல் இயல்பாகவே அவருக்குள் இருக்கும். உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில், இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாகச் சித்திரித்திருக் கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்துக் காட்சியளிப்பதை, விழிப்பு உணர்வின் உச்சநிலைக் குறியீடாகத்தான் நான் பார்க்கிறேன்.
நம் கையில் உள்ள மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாகத் தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின்மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது விஞ்ஞான உண்மை. அதேபோல, ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது, அது அவரின் உடலை ஒருநிலைப்படுத்துகிறது; அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது. சரியான ஆன்மிகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது, ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் திகழ்கிறது. இந்தச் செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதை அணிவதற்கு வயதோ, பாலினமோ ஒரு தடையில்லை. இதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இந்த பாம்பு மோதிரத்தை இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது' என்று விளக்கம் அளித்தார் சத்குரு.
அடுத்த கேள்வியும் பாம்பு பற்றியதாகவே இருந்தது. கேட்டவர் வாசகர் சுப்ரமணியன். ''பாம்பைப் பார்த்தாலே பயம் வருகிறதே! அவை நம்மைக் கொத்தினால், உயிர் போய் விடும். ஆனால், யோக மரபில் பாம்பை குண்டலினிக்கு அறிகுறியாக வைத்துள் ளனர். இதேபோல் உலகின் பல புராதன கலாசாரங்களிலும் பாம்புக்கு முக்கிய இடம் தரப்பட்டிருக் கிறது. பாம்புக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்?'
''மத, கலாசார வேறுபாடின்றி ஆன்மிக அனுபவங்கள் மற்றும் செயல்முறைகள் எங்கு அதிகமாக இருந்தா லும், அங்கே பாம்புகளின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும். அது பாம்புகள் புழங்கும் இடமில்லை எனில், குறைந்தபட்சம் அவற்றின் ஆதிக்கம் குறியீட்டிலேனும் இருக்கும். ஆன்மிகம், மறைஞானம் செழித்து ஓங்கிய புராதன கலாசாரங்களான மெசபடோமியா, கிரீஸ், எகிப்து, கம்போடியா, வியட்நாம்... ஏன் நம் இந்தியாவிலும் கூட பாம்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். மறைஞானமும் பாம்புகளும் பிரிக்க முடியாதவை.
யோகத்தில் குண்டலினியை சுருண்டு படுத்திருக்கும் பாம்பாக உருவகப்படுத்தி யிருக்கிறார்கள். இந்த மரியாதை பாம்புகளுக்குக் கிடைக்கக் காரணம், மனிதனைவிட அதிக விழிப்பு உணர்வும், திறனும் கொண்ட, தெய்விகத் தன்மை நிறைந்த உயிர்கள் அவை, இந்த உலகில் ஓர் உயிரினமாய் தோன்ற நினைத்தால், ஞானிகளும் யோகி களும் பாம்பாகத்தான் தோன்றியிருக் கிறார்கள். பூமியின் எல்லாப் பகுதி களிலும் சொல்லப்படுகிற புராணக் கதைகளில் எல்லாம் இந்த அனுபவம் தோய்ந்திருப்பதைக் காணலாம்.
உலகின் எந்த தேசத்திலும், பெண் தெய்வங்கள் எப்போதுமே பாம்பு களுடன் சேர்த்துதான் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், மனிதர்களிடம்கூடக் காணப்படாத அளவுக்கு உள்வாங்கும் நுண்ணுணர்வு பாம்புகளுக்கு உண்டு.
ஒருவர் தியானநிலையை ஆழமாக உணரும்போது, முதன்முதலில் அவரிடம் ஈர்க்கப்படும் உயிரினம் பாம்புதான். இதனால்தான் புற்றுகள் சூழும் அளவுக்குத் தியானநிலையில் ஆழ்ந்திட்ட ஞானிகள், யோகிகளை வரையும்போது, அப்படத்தில் எப்போதும் பாம்புகளும் இடம்பெறும். மனிதர்கள் உணரத் தவிக்கும் ஒருசில குறிப்பிட்ட பரிமாணங்களைத் தன் இயல்பிலேயே உணரும் நுண்ணுணர்வு மிக்க இந்த உயிரினத்துக்கு நாம் செலுத்தும் மரியாதை இது.
ஒலியைக் கேட்பதற்கென பாம்புகளுக்குத் தனியே காதுகள் கிடையாது. அது தன் முழு உடலையுமே காதாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதன் முழு உடலும் எப்போதும் தரையைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. அத்தோடு, பூமியில் நிகழும் சிறு அசைவையும்கூட உணர்ந்திடும் அளவுக்கு அதன் உள்வாங்கும் திறன் நுணுக்கமாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. இதனால் புவியில் நிகழும் மிகச் சிறிய மாற்றங்களையும் அது அறிந்திடும்.
நாகலோக ரகசியம் என்பார்கள். இந்தியப் புராணங்கள், ஏன் உலகின் புராணங்கள் எதுவாகிலும், அதில் பாதாள உலகத்தை நாகலோகம் என்றும், அங்கு பாம்புகள் மட்டுமல்லாமல், 'நாகா’ என்று வழங்கப்படும் மனிதர்களும் வசிப்பதாகக் குறிப்பிடுவார்கள். இந்த நாகர்கள், பாம்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் மட்டுமன்றி, உலகின் எல்லா கலாசாரத்திலும் மனித விழிப்பு உணர்வை மேம்படுத்துவதில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர். இன்றும்கூட கம்போடிய நாட்டில் மிகப் பிரசித்தமாக இருக்கும் அங்கோர், அங்கோர்தோம், அங்கோர்வாட் ஆகிய கோயில்கள், 'நாகா’ வம்சத்தவர் கட்டியவைதான். இந்த நாகர்கள் இந்தியாவிலிருந்து அங்கு சென்று, அந்த நாட்டவரை மணந்து, அவர்களுடன் வாழ்ந்து, ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார்கள்.
நுண்ணுணர்வின் உச்சத்தை, ஆழமான புரிதலைக் குறிக்கும் சிவனாரின் நெற்றிக் கண்ணுக்கு மேலே, அவரின் சிரசில் பாம்பை பிரதானமாகச் சித்திரித்துள்ளார்கள். பாம்பு தரையில் ஊர்ந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு ஜந்து. ஆனால், அதற்கு சிவன் கொடுத்த இடமோ, தன் தலை! அதாவது, தன்னை விடவும் பாம்பு ஒரு சில வழிகளில் உயர்ந்தது என்று அவர் குறிக்கிறார்'' என்று நாகங்கள் குறித்த சத்குருவின் நீண்ட விளக்கத்தாலும் தகவல்களாலும் அசந்துபோனார்கள் வாசகர்கள். அந்த பிரமிப்பிலிருந்து வெளிவரவே சற்று நேரம் பிடித்தது அவர்களுக்கு.
அவர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்பு வதாக, அடுத்த கேள்வி வந்து விழுந்தது வாசகர் சுப்ரமணியத்திடமிருந்து.''சாமியார்களுக்கு அரசியல் தேவையா?'
இந்தக் கேள்விக்குச் சிறு புன்னகையுடன் பதில் சொன்னார் சத்குரு... ''இந்த உலகத்தில்தான் எல்லோருமே பிறந்திருக்கிறோம். ஒருவர் பத்திரிகையாளராக இருக்கிறார். இன்னொரு பெண்மணி இல்லத்தரசியாகவும், மற்றவர் மருத்துவராகவும் இருக்கிறார். இன்னும்... ஆசிரியராக, பொறியாளராக, வாகன ஓட்டுநராகவெல்லாம் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆன்மிகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமகன்கள்தானே? ஒவ்வொரு சிட்டிசனுக்கும் ஓட்டு இருக்க வேண்டும்தானே? ஆன்மிகத்தில் இருக்கிறவர்களுக்கும் ஓட்டு உரிமை வேண்டுமா, வேண்டாமா... சொல்லுங்கள்.
ஒரு ஓட்டு போட்டாலும் சரி, ஒரு லட்சம் ஓட்டு கேட்டு மக்களிடம் போனாலும் சரி... அரசியல்தானே! எப்போது நீங்கள் ஜனநாயகம் என்று சொல்கிறீர்களோ, அப்போது எல்லோருமே அரசியலில் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நாடே அரசியலில் இருக்கவேண்டும். அதுதான் சரி; அதுதான் முறை. ஆனால் நிறைய சதவிகிதம் பேர் ஓட்டே போடுவதில்லை. அது வேறு விஷயம். ஆக, உங்கள் கேள்வியே தவறு. ஆன்மிகத்தின் வழியில் இருக்கிறவர்களும் அரசியலில் இருப்பதில் தவறேதும் இல்லை. அரசியலை எடுத்துக்கொண்டு செயல்படுகிற சதவிகிதம் ஒவ்வொரு ஆன்மிகவாதிக்கும் மாறுபடலாம். ஆனால், அரசியலில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். சொல்லப்போனால், எல்லோரும் இருக்கவேண்டும்.
இதில் சாமியார்கள் விதிவிலக்குஅல்ல!'' என்றார் சத்குரு.
'போலிச் சாமியார்கள் அதிகரித்துவிட்டார்களே... இதனால் ஆன்மிகத்தில் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கை குறைந்துவிடாதா?' இது வாசகி சாருமதியின் கேள்வி.
''போலி மருத்துவர் இருக்கிறார்; போலி வக்கீல் இருக்கிறார்; போலி போலீஸ் என்று இருக்கிறார்; போலி அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் 'போலி’ வந்துவிட்டது. நேர்மையாக இருப்பது எப்படி என்பதை மக்களே மறந்துவிட்டார்கள்.
டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும்கூட நிற்காமல் செல்கிற மனோபாவம் பலரிடம் இருக்கிறது. பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்களை கோபமாக, 'அதான் போலீஸ் இல்லையே... எதுக்கு வழியை மறிச்சிக்கிட்டு நிக்கிறான்’ என்று கடிந்துகொள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் முதல்வராகவோ, பிரதமராகவோ... அவ்வளவு ஏன்... கவுன்சிலராகவோ ஆகிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.
போலிகள் உருவாவதும், அதைச் சகித்துக் கொள்வதும் இப்போது நம் கலாசாரத்திலேயே ஊறிப்போய்விட்டது. வீடு, பள்ளி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் நேர்மை் குணம் அவசியம். தங்கமே கிடைத்தால்கூட, தவற்றின் பக்கம் தலை வைத்தும் படுக்கக்கூடாது என்கிற உறுதி முக்கியம். யாரும் பார்க்கவில்லை, கவனிக்கவில்லை என்பதாலேயே தவறெல்லாம் சரியானதாகிவிடுமா? ஆனால், அப்படியொரு மோசமான போக்குதான் மனிதர்களிடத்தில் இருக்கிறது. ஊழல் என்பது ஒரு தொற்றுநோயைப் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. ஆண் குழந்தையை ஒருவிதமாகவும் பெண் குழந்தையை ஒருவிதமாகவும் பார்க்கிற மனநிலைகூட, ஒருவித ஊழல்தானே? சாதி, ஆண் பெண் என பாகுபாடுகள் பார்ப்பதுகூட ஊழல்தனம்தான்! ஆன்மிகவாதிகள் சிலரிடம்கூட இந்த ஊழலும் போலித்தனமும் இருக்கத்தான் செய்கிறது. நம் நாட்டுக்கு இப்போதைய அவசர, அவசிய தேவை, நேர்மையான கலாசாரம்.
ஈஷாவை ஆரம்பித்ததன் நோக்கமே, நேர்மையையும் தூய்மையையும் ஒழுக்கத்தையும் அனைவரிடமும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுதான்! நேர்மையின் மேன்மையைப் புரிந்துகொண்டு செயல்படத் துவங்கிவிட்டால், ஊழலற்ற, போலிகள் இல்லாத ஒரு சமூகமாக நம் தேசம் நிச்சயம் விளங்கும்.
அதேநேரம், நல்ல விஷயங்களும் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதைப் பதிவதும் பகிர்வதும் மீடியாக் களின் கடமை. அப்படி நல்ல விஷயங்களைப் பதிவு செய்யாமல் போனால், 'நல்லதே நடப்பதில்லை; நல்லதே செய்யக்கூடாதோ? நல்லது செய்தால் ஏமாளிப் பட்டம் கிடைத்துவிடுமோ?’ எனும் தவறான முடிவுக்கு அடுத்த தலைமுறையினர் வந்துவிடுவார்கள். மனித நேயமே இல்லாமல் போய்விடும். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடவுளே நம் அருகில் வந்து உட்கார்ந்தால்கூட அவரை கடவுளாக நாம் எண்ண மாட்டோம். ஏதேனும் ஷூட்டிங்கில் இருந்து மேக்கப்பைக் கலைக்காமல் வந்தவர் என்றுதான் எண்ணுவோம். சொல்லப்போனால், கடவுள் மீதே நமக்குச் சந்தேகம் வந்துவிட்டது!'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார் சத்குரு.
'நமக்குக் கெடுதல் செய்பவர்கள் இவர்கள்தான் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது. அவர்களை என்ன செய்வது?' என்று கேட்டார் வாசகர் குமார்.
''எல்லோருக்கும் இங்கே வேலை இருக்கிறது. அதனால் ஒவ்வொருவரின் பின்னே அலைவதற்கு யாருக்கும் இங்கே நேரமில்லை. ஆனால், நீங்கள் சொல்லுவது போல், அடுத்தவருக்கு கெடுதல் செய்வதையே வேலையாகக் கொண்டு செயல்படுபவர்களும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எல்லாவிதமான மனிதர்களும் கலந்த உலகம் இது. நல்லவர்களும் உண்டு; கெட்டவர்களும் உண்டு. வளர்த்துவிடுபவர்களும் வீழ்த்த நினைப்பவர்களும் கலந்ததுதான் உலகம். எல்லோருடனும் சேர்ந்து வாழத்தான் வேண்டும். அதுதான் வாழ்க்கை. எல்லார் கூடவும் இருந்தாலும் எதிலும் சிக்கிக் கொள்ளாமல், எவரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வாழ்கிற வாழ்க்கை உசத்தியானது.
அங்கே, ஒரு குளத்தைப் பார்த்தோம். அங்கே நிறைய புகைப் படங்கள் எடுத்துக்கொண்டோம். குளத்தில் தண்ணீரைப் பார்த்தோம். தண்ணீருக்குக் கீழே முழுவதும் சேறாகத்தான் இருக்கிறது. ஆனாலும், குளத்தில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்து ரசித்தீர்கள்தானே! சேற்றிலிருந்து வந்ததால் தாமரையும் சேறாக, அசிங்கமாக, அழுக்காகவா இருக்கிறது? அந்தத் தாமரை மாதிரி நாம் இருக்கமுடியாதா, என்ன?
நிறையப் பேர் என்னிடம் வந்து, 'வீட்ல இப்படி, ஆபீஸ்ல அப்படி. வாழவே முடியலை’ என்று புலம்புகிறார்கள். 'இவர் சரியில்லை, அவர் சரியில்லை’ என்று எங்கே ஓடினாலும், அங்கேயும் இதுபோன்ற குணங்களைக் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அப்போது என்ன செய்வீர்கள்? மலையில் போய் உட்கார்ந்துகொண்டாலும், அங்கே புழு பூச்சிகள் கடிக்குமே! எங்கே போனாலும் யாராவது இப்படி கடிக்கத்தான் செய்வார்கள். பல் இருக்கிறது. கடிக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நாம் நம்முடைய தன்மையை இழக்காமல் வாழ்வதில்தான் நமது திறமையே இருக்கிறது.
பிரயோசனம் இல்லாததை மண் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் பார்த்தால், இங்கே எல்லாமே மண்ணில் இருந்துதான் வருகின்றன. எல்லா உயிர்களும் மண்ணிலிருந்துதானே வந்திருக்கின்றன? நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மனிதர் மாதிரி நடந்து கொள்கிறார்களா, அல்லது விலங்கைப் போல் செயல்படுகிறார்களா... ஏன், நாமே எப்படி நடந்துகொள்கிறோம்? எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்ட பிறகுதான் யோகா மாதிரியான பயிற்சிக்கே செல்ல முடியும்' என்கிறார் சத்குரு.
'நாம் நாமாகவே இல்லாதபோது, நமக்குள் இருக்கிற 'நான்’ என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இந்த உலகம், நம்மை நாமாகவே இருக்க விடமாட்டேன் என்கிறதே...?' என்று வாசகர் கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பினார்.
''நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு இன்னொருவரின் அனுமதி எதற்கு? அதை ஏன், எதற்காக எதிர்பார்க்கிறீர்கள்? அப்படியெனில், உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ, அதையெல்லாம் அவர்கள் மீது திணிக்கிறீர்கள், திணிக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதற்கு ஒருபோதும் யாரும் அனுமதி தரமாட்டார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். அதேபோல், நீங்கள் நீங்களாகவே இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பத்துக்கு வேறு எவரும் குறுக்கே நிற்க முடியாது. சொல்லப்போனால், இதைக் கடவுளால்கூடத் தடுக்கமுடியாது. ஆகவே, உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள். பயந்துகொண்டே இருக்காதீர்கள். பயம்தான் மற்றவர் மீது பழி போடச் சொல்லும். அது தவறும் கூட!''
அடுத்த கேள்வி குழந்தைகள் பற்றித் திரும்பியது.
'இந்த உலகம் படுவேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இதில், குழந்தைகளை எப்படி வளர்த்தால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?' இது வாசகி பவானியின் கேள்வி.
''முதலில் ஒரு விஷயம்... குழந்தைகளை தயவுசெய்து உருவாக்காதீர்கள். ஜனத்தொகை அளவில்லாமல் போய்விட்டது. இந்த நூறு வருடத்தில், ஐந்து மடங்கு அளவுக்கு ஜனத்தொகை பெருகிவிட்டது.
விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்றால், முழுக்க முழுக்க விவசாயம் தெரிந்திருக்க வேண்டும்தானே! இதில், குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்று தெரியாமலே குழந்தைகளை உருவாக்குவது எப்படிச் சரியாகும்? சொல்லப்போனால், நம்மை வளர்த்துக்கொள்ளவே நமக்குத் தெரியவில்லை. பிறகு நாம் எப்படி இன்னொருவரை வளர்க்கவோ உருவாக்கவோ முடியும்? முதலில் இந்தத் தலைமுறை பற்றியும், அடுத்த தலைமுறை பற்றியும் நமக்கு விழிப்பு உணர்வு தேவை. அது இருந்தால்தான், தலைமுறைமீது அக்கறை இருந்தால்தான், நம் கடமையை நம்மால் செவ்வனே செய்ய முடியும். குழந்தையை நாம் பெற்றுக்கொண்டு, எப்படி வளர்ப்பது என்று அடுத்தவரிடம் ஆலோசனை கேட்கிற நிலை, அபத்தமானது.
சாப்பாடு, தூக்கம், பழக்க வழக்கம் எல்லா வற்றிலும் விழிப்பு உணர்வு தேவை. இவைதான் நம் அன்றாடச் செயல்களைத் தீர்மானிக்கின்றன. குழந்தைகளை வளர்ப்பதிலும் விழிப்பு நிலையுடன் செயல்பட்டாலே போதும்... அடுத்த தலைமுறை நம்மைவிட திறமையுடனும் ஞானத்துடனும் மிளிரும்' என்கிறார் சத்குரு உறுதிபட!
தொடர்ந்து அடுத்த கேள்வியைக் கேட்டார் வாசகி அம்ருதா. 'ஆசையே அழிவுக்குக் காரணம் என்கிறார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறீர்கள் நீங்கள். இதில் எதைப் பின்பற்றுவது?'
இதுமட்டுமல்ல,
? 'தங்களின் பசுமைக் கரங்கள் திட்டம் குறித்துச் சொல்லுங்களேன்?’
? 'சித்தர் மரபின் தொடர்ச்சிதான் உங்கள் ஆன்மிகப் பயணமா?’
- என வாசகர்களின் இன்னும் பல கேள்விகளும், அவற்றுக்கு சத்குரு அளித்த சுவாரஸ்ய பதில்களும் அடுத்த இதழிலும்!
படங்கள்: க.தனசேகரன்
'பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கு என்று இருக்கிறதா என்ன?'
- எஸ்.வி.ராஜசேகரன், திருச்சி-2.
'மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பாவ புண்ணியக் கணக்கை மெயின்டெயின் செய்ய வேண்டும். அது ரொம்பவே அவசியம். நேற்று என்ன செய்தேன், அந்தக் காரியத்தால் யாருக்குப் பலன் கிடைத்தது, எவர் காயப்பட்டார், யாரெல்லாம் சந்தோஷப்பட்டார்கள் என்கிற கணக்குப் பட்டியல் ரொம்பவே முக்கியம். நேற்று என்ன செய்தேன், இன்று என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால்தானே நாளைய விஷயத்தை மிகச் சரியாகச் செய்யமுடியும்? இதைத்தான் கர்மா என்கிறோம். எல்லா செயல்களுக்கும் ஒரு ரசாயன மாற்றம் இருக்கிறது. கோபம், பயம், காமம், வெறுப்பு என்கிற நம் எண்ணங்கள் அனைத்துக்குமே ஒரு கணக்கு இருக்கிறது.
'ஏன் இப்படிக் கோபப்படுகிறாய்?’ என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் கோபமாகக் கேட்கிறார்கள். நமக்குள் இருக்கிற ரசாயனத்தைச் சரிவர உருவாக்கிக் கொள்ளவே இல்லை. ஆனந்தமான ரசாயனம் உள்ளே அதிகரித்தால், வாழ்க்கை இனிக்கும். அதற்கு இந்தக் கணக்குகள் ரொம்பவே அவசியம். உங்களுக்கு பாங்க் அக்கவுன்ட் இருக்கிறதோ இல்லையோ, பாவ புண்ணிய அக்கவுன்ட்டை உடனே ஓபன் செய்துகொள்ளுங்கள்!'
'அரசியல், சினிமா, வணிகம் என எல்லா இடங்களிலும் வாரிசு கலாசாரம் வந்துவிட்டதுபோல், ஆன்மிகத்திலும் வாரிசு கலாசாரம் வந்துவிட்டதே?'
- ஆர்.ராஜாராமன், மதுரை- 16
'அரசியலில், கடந்த ஆறேழு மாதங்களில் இது கொஞ்சம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. இரண்டு மூன்று இடங்களில் ஆன்மிகத்திலும் வாரிசு வந்துவிட்டது. ஆனால், அதையெல்லாம் தொழிலாக, வியாபாரமாகச் செய்கிறார்கள். ஆனால் ஒன்று... அவரும் சக மனிதர்தானே! அவருக்குள்ளேயும் ஆன்மிகத் தெளிவு வந்திருந்தால், அவரும் தனிமனிதனாகத் திகழ்ந்தால், தாராளமாக ஆன்மிக வாரிசாகலாம். தப்பே இல்லை. மற்றபடி, 'இவருடைய மகன் இவர்... அதுதான் ஆன்மிக சிந்தனை இவருக்குள்ளும் வந்துடுச்சு’ என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது.
இது இன்றைக்கு நேற்றைக்கு இல்லை. திருதராஷ்டிரன் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவருக்கு நூறு மகன்கள். அவருக்கு கண் பார்வை கிடையாது. ஆனாலும், ராஜ்ஜியம் அவர் கையில்தான் இருந்தது. மகாபாரதம் பல கதைகளை, வாழ்க்கை முறைகளை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் மகாபாரதத்தை, காலகாலமாகச் சொல்லிக்கொண்டே வந்தோம். இப்போதும் சொல்லி வருகிறோம். ஆனால், அதில் இருந்து என்ன எடுத்துக்கொள்ள வேண்டுமோ அதை மக்கள் எடுத்துக் கொண்டார்களா என்பது சந்தேகம்தான்!'
அடுத்த சங்கமம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக