ஒரே சிற்பி செய்த ஐந்து நடராஜர் திருமேனிகள் அபூர்வ தரிசனம்!
திருவாதிரை- நடராஜரை தரிசிக்க உகந்த திருநாள்! நடராஜர் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம்தான். பன்னிரு திருமுறை களும், நால்வர் பெருமக்களும், ஞானநூல்கள் பலவும் போற்றும் புண்ணிய பூமி இது. அற்புதமான இந்தத் தலத்துடன் தொடர்புடைய வேறு நான்கு தலங்கள் உண்டு. அவை: செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கட்டாரி மங்கலம், கரிவேல மங்கலம். சிதம்பரத்தையும் சேர்த்து ஐந்து தலங்களையும் பஞ்ச நடராஜ க்ஷேத்திரம் எனப் போற்றுவர்.
இந்த ஐந்து தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் நடராஜ மூர்த்தங்கள், நமசிவாய முத்து என்ற ஒரே ஸ்தபதியால் வடிக்கப்பட்டவை என்பது விசேஷம். இவற்றை `பஞ்ச நடராஜ க்ஷேத்திரங்கள்’ என்று அடியார்கள் போற்றுவர். இந்தத் தலங்களில் ஆடல்வல்லான் எழுந்தருளிய திருக்கதையை நாம் அறிவது அவசியம். இந்தக் கதை தில்லையில் தொடங்குகிறது.
சிவனார் அளித்த செப்புக் காசு!
அந்தக் காலத்தில் தில்லையை ஆண்ட சிங்கவர்மன் எனும் மன்னன், தனது தோல் நோய் நீங்குவதற்காக இறைவனை பிரார்த் தித்து, காட்டில் தவம் இயற்றி வந்தான்.
ஒரு நாள், தாகம் மேலிட்டதால் நீர் அருந்துவதற்காக ஒரு குளத்துக்கு வந்தான். குளத்தின் அருகே புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் இருப்பதைக் கண்டு, அவர்களை வணங்கி ஆசி பெற்றான். பிறகு குளத்தில் இறங்கி நீராடினான். மறு கணம், அவனது தோல் நோய் நீங்கியது. மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்தான்.
அப்போது அவனிடம், ‘`மன்னா! இதுதான் தில்லை வனம். இந்தப் பொய்கையின் பெயர் சிவகங்கை. ஆடற்பெருமானின் ஆனந்த தாண்டவம் எங்களை மகிழ்விக்கிறது’’ என்று விளக்கினர். பின்னர், முனிவர்களது ஆசியுடன் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றான் சிங்கவர்மன். இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக, நடராஜப் பெருமானுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தான்.
அதன்படி, சிற்பிகளை வரவழைத்த மன்னன், இறைவனது திருமேனியைப் பேரழகுடன் அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அவர்களிடம் தாமிரம் தந்து, செப்புத் திருமேனியை உருவாக்கப் பணித்தான். விரைவில், செப்புத் திருமேனி உருவானது. அதன் அழகைக் கண்டு வியந்தான் சிங்கவர்மன். ‘தாமிரத் திருமேனியே இந்த அளவுக்கு மிளிர்கிறது என்றால், பொன்னால் சிலை வடித்தால் எப்படி இக்கும்?’என்று எண்ணியவன், சிற்பிகளிடம் பொன் தந்து, பொன்னாலான சிலை செய்ய உத்தரவிட்டான்.
இந்த நிலையில் சிவனாரின் திருவிளையாடல் தொடங்கியது!
எவ்வளவும் முயன்று திருவிக்கிரக படிமம் சரியே அமையாமல் போனது. தலைமை சிற்பியான நமசிவாய முத்து மிகவும் கலங்கினார். அப்போது அந்த இடத்துக்கு முதியவராக வந்த இறைவன் சில செப்புக் காசுகளைக் கொடுத்து, தங்கத் துடன் இதையும் சேர்த்து சிலை வடிக்கும்படி கூறினார்.
முதலில் ‘மன்னனின் விருப்பம் இதுவல்லவே...’ என்று சிற்பிகள் குழம்பினர். ஆனால், இறைவனாரின் பேச்சுக்கு மயங்கிய சிற்பிகள் ஒரேயொரு செப்புக் காசை மட்டும் தங்கத்துடன் கலந்தனர். இதனால், தங்கத் திருமேனிக்கு பதில் மீண்டும் செப்புத் திருமேனியே உருவானது. அதைக் கண்ட மன்னன் கோபம் அடைந்தான். தங்கத்தைக் கவர்ந்து கொண்டு செப்பினால் சிலை செய்திருக்கிறார்கள் சிற்பிகள் என்று கருதி அவர்களைச் சிறையிலிட்டான்.
அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைக் கூறி, ‘`உன் கண்களுக்கு மட்டும் நான் பொன்மேனியாகக் காட்சி தருவேன். இந்த விக்கிரகத்தை எனது தில்லை அம்பலத்தில் நிறுவி வழிபடுவாய்’’ என அருளி மறைந்தார். அதன்படி இரண்டாவதாகச் செய்யப்பட்ட திருமேனி தில்லையில் எழுந்தருளியது.
இந்த நிலையில் முதலில் உருவான செப்புத் திருமேனியை எங்கே நிறுவுவது என்று மன்னனும் சிற்பிகளும் யோசனையில் ஆழ்ந்தனர். அன்று தலைமை சிற்பியின் கனவில் இறைவன் தோன்றினார்.
“சிற்பியே! நான் தென்னாட்டில் எழுந்தருள ஆசைப்படுகிறேன். இந்த விவரம் கூறித்து அரசனுக்கும் ஆணையிட்டிருக்கிறேன். ஆகவே நீ தாமிரச் சிலை வடிவில் உள்ள என்னைத் தலையில் சுமந்தபடி தென்பாண்டி நாட்டுக்குச் செல்வாயாக. அங்கே எந்த இடத்தில் சிலை பாரமாகத் தோன்றுகிறதோ, அங்கேயே எம்மை இறக்கி வைத்து விடு’’ என்று ஆணையிட்டு மறைந்தார்.
ஈசனின் ஆணைப்படி முதலில் உருவான நடராஜரின் செப்புத் திருமேனியைத் தலையில் சுமந்தபடி தென்னகம் நோக்கிப் புறப்பட்டார் நமசிவாயமுத்து. அவரின் சீடர்களும் உடன் சென்றனர்.
கனவில் கிடைத்த உத்தரவு!
மணப்படை எனும் நகரை மையமாகக் கொண்டு தாமிரபரணி தீரத்தை அப்போது ஆண்டு வந்தவன் முழுதுங்கண்ட ராம பாண்டியன். இவன் சிறந்த சிவபக்தன்; தினமும் நெல்லைக்குச் சென்று நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வழிபட்ட பின்னரே உணவு உட்கொள்வது வழக்கம்.
ஒருநாள்... இவனது பக்தியைச் சோதிக்க எண்ணினார் இறைவன். அதன் விளைவால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது; மன்னனால் நெல்லையப்பரை தரிசிக்க செல்ல முடியவில்லை. கலங்கித் தவித்தவன், உறங்கிப் போனான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ‘வனத்துக்குப் போ. ஓரிடத்தில் காற் சிலம்பொலி கேட்கும்; எறும்புகள் சாரை சாரையாகத் திரியும். அங்கே... என் வடிவைக் காண்பாய். எறும்பு காட்டுகிற இடத்தில் கோயில் எழுப்பு. இனி நீ அங்கேயே எம்மை வழிபடலாம்’ என்று அருளி மறைந்தார்.
இந்த நிலையில்தான் தில்லைச் சிற்பிகள் தாமிரபரணி நதிக்கரையை அடைந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் சிலையின் கனம் அதிகரித்தது போல் உணர்ந்தார் நமசிவாயமுத்து. ஆகவே, அங்கேயே சிலை இறக்கிவைக்கப்பட்டது. பின்னர், களைப்பு மிகுதியால் உறங்கிப் போனார்கள் சிற்பிகள். அவர்கள் கண்விழித்தபோது சிலையைக் காணவில்லை! தவித்துப் போனவர்கள், மன்னன் முழுதுங்கண்ட ராம பாண்டியனிடம் வந்து முறையிட்டனர். அவன் காவலர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிப் புறப்பட்டான்.
ஓரிடத்தில் தாரை- தப்பட்டை, சங்கு, சேண்டி மற்றும் தேவதுந்துபி முழக்கத்துடன் சிலம்பொலியும் கேட்டது. எங்கிருந்து வருகிறது ஒலி? எனும் திகைப்புடன் நின்ற மன்னன், சாரை சாரையாக எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டான். அவற்றைப் பின்தொடர்ந்தான். குறிப்பிட்ட ஓரிடத்தில் ஆனந்தக் கூத்தாடும் இறைவனின் திருமேனியை தரிசித்தான். ஆம் சிற்பிகள் வடித்த முதல் திருமேனி அங்கு இருந்தது. அந்த இடத்திலேயே கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில்!
இங்ஙனம் ஓரிடத்தில் உருவான இரண்டு சிலைகளில் இரண்டாவது தில்லையிலும் முதலாவது செப்பறையிலும் எழுந்தருளியது.இவை போக இன்னும் மூன்று தலங்கள் உண்டு என்று பார்த்தோம் அல்லவா? அதுபற்றிய விவரத்தை இனி காண்போம்.
கரத்தை இழந்த சிற்பி!
நமசிவாயமுத்து உருவாக்கிய திருமேனி செப்பறையில் எழுந்தருளிய அந்தக் காலத்தில் கட்டாரிமங்கலம் எனும் பகுதியை வீரபாண்டியன் எனும் மன்னன் ஆண்டுவந்தான். இவன், முழுதுங்கண்ட ராம பாண்டியனின் உறவினன். ஒருமுறை ராமபாண்டியனைக் காண வந்தவன், செப்பறை நடராஜரை தரிசித்தான்.
அந்த நடராஜப் பெருமானின் திருமேனி அழகைக் கண்டு வியந்து தனக்கும் இதுபோன்று ஒரு திருமேனி வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். சிற்பம் செய்ய தனக்கு அமைதியான ஓர் இடம் வேண்டும் எனக் கேட்டார் ஸ்தபதி. அதன்படி தாமிரபரணியின் தென் கரையில் மூங்கில் நிறைந்த ஓரிடம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கே இரண்டு சிலைகள் செய்துதரும்படி வீரபாண்டியன் கேட்டுக்கொண்டான். அவற்றில் ஒன்றை கட்டாரிமங்கலத்திலும் மற்றொன்றை நெல்லையப்பர் கோயிலிலும் எழுந்தருளச் செய்ய விரும்பினான்.
குறிப்பிட்ட நாட்களில் இரண்டு திருமேனிகள் தயாராயின. மன்னன் சிலைகளைக் காண வந்தான். அவற்றின் அழகில் மெய்ம்மறந்தான். விதியின் விளையாட்டு அவன் மூளை வேறுவிதமாக சிந்தித்தது. இப்படியான அழகுச் சிற்பம் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதினான். விளைவு... ஸ்தபதி உயிரோடு இருந்தால்தானே இப்படி வேறொரு சிற்பத்தை உருவாக்க முடியும். அவரைக் கொன்று விட முடிவுசெய்தான். வீரர்களை ஏவினான்.
சிற்பி இருக்கும் இடத்துக்கு வீரர்கள் விரைந் தனர். அவர், தான் உருவாகிய நடராஜரின் பாதங் களைப் பற்றியபடி உறங்கிக் கொண்டிருந்தார். `ஆண்டவ னிடம் அடைக்கலமாகி இருக்கும் இந்த நல்ல உள்ளத்தினரை நாம் ஏன் கொல்லவேண்டும்’ என்று வீரர்கள் சிந்தித்தனர். ஆகவே, அவர் வேறொரு சிற்பத்தைச் செய்ய முடியாதபடி வலக்கையை மட்டும் துண்டித்துவிட்டார்கள்.
ஸ்தபதி அங்கிருந்து தப்பித்து ஓடினார். வீரர்களோ புதிய விக்கிரகங்கள் இரண்டையும் தூக்கிச் சென்றனர். அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. திக்கு தெரியாத வீரர்களின் கூட்டம் ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்து விலகியது. ஒருசாரார், தங்களிடம் இருந்த விக்கிரகத்தை மன்னன் வீரபாண்டியனிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு பிரிவினர் ஆற்றின் கரையோரமாகப் பயணித்தனர். திடுமென ஆற்றில் வெள்ளம் சூழ்ந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்று விக்கிரகத்தை ஆற்று நீரில் போட்டுவிட்டு ஊர்போய்ச் சேர்ந்தனர். சில நாள்கள் கழித்து தாமிரபரணி தென்கரையில் உள்ள கரிசூழந்த மங்கலம் எனும் ஊர்க்காரர்கள், ஆற்றில் போடப்பட்ட விக்கிரகத்தைக் கண்டெடுத்து, மேடான ஓரிடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர்.
இந்த விவரங்களை அறிந்த முழுதும்கண்ட ராம பாண்டியன், மனம் வருந்தினார் அவர். வீரபாண்டியன் மீது கோபம் கொண்டு படையெடுத்துச் சென்று, அவனைத் தண்டித்தார். பிறகு வீரபாண்டியன் மன்னிப்பு கோரினான். அவன் மன்னிக்கப்பட்டான். கட்டாரி மங்கலத்திலும் கரிசூழந்த மங்கலத்திலும் அற்புதமாய் ஆலயங்கள் எழும்பின. இனி ஐந்தாவது விக்கிரகம் உருவான திருக்கதையை அறிவோம்.
ஐந்தாவது நடராஜர்!
வலக்கரத்தை இழந்த ஸ்தபதி, தன் உறவினர்களுடன் களக்காடு அருகே உள்ள கருவேலங்குளம் பகுதிக்கு வந்தார். அந்தப் பகுதியை செளந்திரபாண்டியன் எனும் மன்னன் ஆண்டுவந்தான்.
அவனுடைய மகள் மனநலம் குன்றித் திகழ்ந்தாள். எவ்வளவோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. தன் மகள் குணமாக வேண்டும் என்று களக்காடு தலத்தில் அருளும் சத்தியவாகீசரை வணங்கி வந்தான். மகளைக் குணப்படுத்தும் நபருக்கு அவளை மணம் முடித்து வைப்பதாகவும் நாட்டைப் பரிசளிப்பதாகவும் பறை சாற்றியிருந்தான்.
ஒரு நாள் வயதுமுதிர்ந்த அந்தணர் ஒருவர் மன்னனைக் காண வந்தார். ``ஊரின் எல்லையில் வனப்பகுதியில், வலக்கரத்தை இழந்த ஸ்தபதி ஒருவன் இருக்கிறான். அவன் ஒரு கரத்தால் குளத்து நீரை எடுத்து மகளுக்கு மூன்று முறை கொடுக்கச் சொல். உன் மகள் குணம் அடைவாள்’’ என்றார். அதன்படியே மன்னன் மகள் குணம் அடைந்தாள்.
மன்னன் மகிழ்ந்தான். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ``இந்தக் குளத்தின் அருகில் ஓர் ஆலயம் எழுப்பு’’ என்று இறைவனின் குரல் கட்டளையிட்டது. விரைவில் ஆலயம் எழும்பியது. சிற்பியின் கதையை அறிந்த செளந்திர பாண்டியன் தனக்காகவும் ஒரு நடராஜர் விக்கிரகம் செய்துதரும்படி வேண்டினான். வலக்கரத்தை இழந்தும் மனம் தளராமல் வைத்தியர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு பணியில் இறங்கினார். மிக அற்புதமான விக்கிரகம் உருவானது. அதன் அழகில் சிற்பியே சொக்கிப்போனார். ஆனந்த மிகுதியில், தன் இடக் கரத்தால் அந்த நடராஜரின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தாராம். நடராஜரும் அற்புதமாய் கோயிலில் எழுந்தருளினார்.
மன்னன் மகிழ்ந்து சிற்பிக்கு பொன்னால் கரம் செய்து கொடுத்தான். அதனால் அவருக்குப் `பொன்னம்பல ஸ்தபதி’ என்ற பெயர் ஏற்பட்டது.
கருவேலங்குளத்தில் 5-வது நடராஜர் அருளும் கோயில் உள்ள இடம் மேலகருவேலங்குளம் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள நடராஜர் படிமத்தில் ஸ்தபதியின் கைபட்ட வடு உள்ளதை தரிசிக்கலாம். வரும் திருவாதிரைத் திருநாளில் அன்பர்கள் இந்த நடராஜ திருத்தலங்களை தரிசித்து வரம் பெற்று வரலாம்.
செப்பறை
திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது செப்பறை. இத்தலத்துக்கு இராஜவல்லிபுரம் என்ற பெயரும் உண்டு. இறைவன் ஶ்ரீநெல்லையப்பர் என்ற செப்பறை நாதர்; இறைவி ஶ்ரீகாந்திமதியம்மன்.
சிற்பி செய்த திருமேனிகளில் முதலாவது நடராஜர் விக்கிரகம் எழுந்தருளியது இங்குதான். அடியார்கள் இவ்வூரை தென் தில்லை என்று சிறப்பிக்கிறார்கள். கோயில் முகப்பில் காளியின் ஆலயம் உள்ளது. இதை அன்னபூரணி ஆலயம் என்பர். சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போலவே இங்கும் கோயில் கொண்டிருக்கிறாள் காளி. கருவறையில் அழகியக் கூத்தர். மூன்று கண்கள், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் இறைவன். பிறை சூடிய ஜடாமுடியும், கங்கா தேவியும், மேனியில் தவழும் நாகங்களும்... ஆஹா தெய்வீக தரிசனம்.
திருவாதிரை போன்ற சிறப்பு தினங்களில் செப்பறை பெருமானைத் தரிசித்து வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி வாழ்வில் வெற்றி பெறலாம். காலை 6 முதல் 10 மணி வரையிலும்; மாலை 4 முதல் 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கரிசூழ்ந்த மங்கலம்!
திருநெல்வேலி - சேரன்மகாதேவி சாலையில், பத்தமடை என்ற இடத்திலிருந்து தாமிரபரணிக் கரையை நோக்கிச் சென்றால், சுமார் 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. ஐந்து நடராஜ தலங்களில் இதுவும் ஒன்று. `கரி’ என்றால் யானை என்று பொருள். யானைகள் நிறைந்த இடம் எனும் பொருளில் கரிசூழ்ந்த மங்கலம் எனும் பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.
கலி செய மங்கலம், கலிசிய மங்கலம் ஆகிய சரித்திரப் பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு. புராணங்கள் துர்வாச க்ஷேத்திரம் எனப் போற்றுகின்றன. இவ்வூரின் கனகசபாபதி கோயிலில் இறைவன் சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி சுந்தராம்பிகை என்றும் திருப்பெயர் கொண்டுள்ளார்கள்.
நடராஜப் பெருமான் கனகசபாபதியாக அருள்கிறார். சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய காலங்களில் இந்த ஆலயத்துக்கு வந்து வில்வம் சமர்ப்பித்து இறைவனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் காலை 6 முதல் 8 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கட்டாரிமங்கலம்
நெல்லையிலிருந்து (முனைஞ்சிப்பட்டி, பேய்குளம் வழியில்) சுமார் 35 கி.மீ. தொலைவிலுள்ளது கட்டாரி மங்கலம். ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து பேய்குளம் செல்லும் வழியாகவும் இந்த கோயிலை அடையலாம். இவ்வூர் பஞ்ச நடராஜ ஸ்தலங்களில் நான்காவது தலம். இறைவனின் திருப்பெயர் வீரபாண்டிஸ்வரர்; இறைவியின் திருநாமம் சிவகாமியம்மை.
இங்குள்ள அம்மையும் அப்பனும் கல்யாண வரம் தரும் தெய்வங்கள். இந்தக் கோயிலை மூன்று முறை வலம் வந்து வணங் கினால் திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மனக்கவலை, தீராத நோய், பிதுர் தோஷம், நவகிரக தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தில் அருள்புரியும் அழகிய கூத்தரை வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். இந்தக் கோயில் காலை 6 முதல் 8 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.
கரிவேலங்குளம்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில், களக்காட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மேல கருவேலங்குளம் எனும் இடத்தில் இக்கோயில் உள்ளது.
இந்த ஊரிலுள்ள குளத்தை யானைகள் வலம் வந்ததால் இவ்வூர் கரிவலங்குளம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அது மருவி கருவேலங்குளம் என்றானதாம். இங்கே கோயிலின் தலைவாசல் தெற்கு நோக்கி இருப்பது சிறப்புமிக்கது. இறைவனின் திருப்பெயர் சௌந்திரபாண்டீஸ்வரர் இறைவி கோமதியம்மை. ஆடல்வல்லான் அருள்மிகு ஆனந்த நடராஜராக அருள்கிறார்.
இந்தக் கோயிலில் இறைவனுக்குச் இவருக்கு சீனிப்புட்டு சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். மன்னன் மகளின் மனநிலை பாதிப்பு நீங்கிய தலம் இது. ஆகவே, மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் நலம்பெற வேண்டி இங்கு வழிபடலாம். மட்டுமன்றி மனக் கஷ்டம் - மனச் சஞ்சலம் நீங்கிட இவ்வூர் இறைவனையும் நடராஜரையும் தரிசித்து அருள்பெறலாம்
இந்தக் கோயில் காலை மாலை இருவேளையும் 6 முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக