வியாழன், 16 ஜூலை, 2015

"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும்.  சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.

மூளை - வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
 

 
கண்கள் - கேரட், பாதாம்

ண்களை ஆன்மாவின் ஜன்னல் என்பார்கள். கண்களைப் பாதுகாக்க  சன் கிளாஸ், கண்ணுக்கான பயிற்சிகள், அடிக்கடி கண்களைக் கழுவுதல், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது நல்லது.
பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.

காது - காளான்
காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2  சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.
உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது.  மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.

நுரையீரல் - திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.
திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

மார்பகம் - ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது. சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும். சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இதயம் - தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

கணையம்   - சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்)  குறைவு. சர்க்கரை நோயாளிகள் இதை  அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.

வயிறு - இஞ்சி

யிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.' மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும். 
 
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

சிறுநீரகம் - கிட்னி பீன்ஸ்
யர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது. சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.

கருமுட்டை (ஓவரி) - ஆலிவ்

ருமுட்டையின் வடிவத்தில் ஆலிவ் காய்கள் இருக்கின்றன. ஆலிவ்வில் உள்ள சத்துக்கள் எள், மஞ்சள் போன்ற நம் ஊர் உணவுகளிலும் நிறைந்துள்ளன. ஓலிக் (Olic) ஆசிட் நிறைந்தது ஆலிவ். நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், முட்டை, நட்ஸ், மீன் போன்றவற்றிலும் ஓலிக் ஆசிட் கிடைப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஓவரியன் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை அடிப்படையாக மாற்றிக்கொண்டாலே, கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

கர்ப்பப்பை  - அவகேடோ

வகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன.  இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.

செல்கள் - வெங்காயம்

டல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் தேவையற்ற கழிவுகள் படிந்திருக்கலாம். செல்களின் ஆரோக்கியத்தை, வலுவைக் கெடுக்கும் கழிவுகளை, நச்சுக்களை நீக்கும் சக்தி, வெங்காயத்துக்கு உண்டு.
கழிவுகளை வெளியே தள்ளி, டீடாக்சிஃபையிங் ஏஜென்டாக (Detoxifying agent) வெங்காயம் செயல்படுகிறது.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

எலும்பு - கொத்தமல்லி
கொத்தமல்லியின் தண்டுகள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் எனக் கிளைபிரியும் மனித எலும்புகளைப் போன்றவை. கொத்தமல்லியில் சிலிக்கான், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது வைட்டமின் டி, கால்சியம் சத்துக்கள்தான். மேலும், சிலிக்கானும் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவை. கொத்தமல்லியின் இலைகளில், குறிப்பாக இலையின் மையப்பகுதியில் அதிக அளவில் கால்சியம் உள்ளது.  எலும்புகளின்  நெகிழ்வுத்தன்மைக்கும், உடைந்த எலும்புகள் மீண்டும் வளரவும், நீண்ட நாட்கள் வலுவாக இருக்கவும், எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்கவும், தினமும் 30 கிராம் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தம் - பீட்ரூட்


ன்று பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதின் பருவப் பெண்களுக்கு வரும் தலையாய பிரச்னை ரத்தசோகை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதால், ரத்தசோகை ஏற்படுகிறது. பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகளைப் பின்பற்றாததால், கருவுறும்போது ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்தத்தின் நிறத்தில் இருக்கும் பீட்ரூட், ஒரு வகையில் ரத்த உற்பத்தித் தொழிற்சாலை.
பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான நைட்ரேட், ஆக்சிஜன் போன்றவற்றை பீட்ரூட் சாறு கொடுக்கும்.
தினமும் பீட்ரூட் சாறு குடித்தால், மலம், சிறுநீர் ஆகியவை ரத்தம் போல சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை. பீட்ரூட் சாறு, உடலுக்குள் சென்று சரியாக வேலை செய்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி இது.

புற்றுநோய் செல்கள் - புரோகோலி

ம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவு பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. பைடோகெமிக்கல்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. `அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம்' புரோகோலியில் புற்றுநோயை அழிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன   எனக்கண்டறிந்திருக்கிறது.
புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், கந்தகம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும். கணையம், பிராஸ்டேட், மார்பகம், வயிறு, நுரையீரல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.
வாரத்தில் மூன்று நாட்கள், 100 கிராம் அளவுக்கு புரோகோலியைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் திறன் மேம்படும். ஆரோக்கியம் பெருகும்.



 கல்லீரல் பலப்பட

குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகள் கிரீன் ஆப்பிள், முட்டைகோஸ், அஸ்வகந்தா, அக்ரூட், சாமை, குதிரைவாலி, முள்ளங்கி, கீழாநெல்லி, நெல்லி. இந்த உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பற்களின் நண்பன்
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள், ஆப்பிள், கேரட், கீரைகள் ஆகியவை பற்களைப் பாதுகாக்கும். ஊறுகாய், சோடா, குளிர் பானங்கள், மது, சிகரெட், காபி ஆகியவை பற்களுக்கு எதிரி.

ஆரோக்கியமான தசைக்கு

சைகளை ஆரோக்கியமாக்குவதில் ஒமேகா3 ஃபேட்டி அமிலங்களின் சத்து முக்கியமானது. மீன், ஃப்ளக்ஸ் விதைகள், அக்ரூட், புரோகோலி, பால் பொருட்கள், நல்லெண்ணெய், இஞ்சி, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களைச்சாப்பிடலாம்.

தசைநார்கள் வலுவாக

சைநார்களை உறுதிப்படுத்தும் உணவுகளான புரத உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடமிளகாய், மீன், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுகுடல், பெருங்குடலுக்கு

பெருங்குடல் மற்றும் சிறுகுடலை ஆரோக்கியமாக்கும் உணவுகளான ப்ரோபயாடிக் உணவுகள் (தயிர், மோர், யோகர்ட், இட்லி மாவு), மீன், கீரைகள், அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பித்தப்பைக்கு

பித்தப்பைக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு, பயறு வகைகள், மீன், ஆடை நீக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானி
யங்கள், சிறுதானியங்கள் ஆகியவை நன்மை தரக்கூடியவை. 

அழகிய கூந்தலுக்கு

கூந்தல் வளர புரதமும் வைட்டமின்களும் அவசியம். மீன், கீரைகள், பாதாம், அக்ரூட், சிவப்பு கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை நிறக் காய்கறிகள், முட்டை, சோயா, முழு தானியங்கள், கறிவேப்பிலை, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நகங்கள் நலம்பெற

கங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காண்பிக்கும் கண்ணாடி. நகங்கள் பலவீனமாகி உடைந்தாலே ஆரோக்கியமின்மையை உணர்த்துகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இதற்கு, முந்திரி, வாழை, முட்டை, ஆரஞ்சு, பாதாம், தோல் நீக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

நோய்களை எதிர்க்கும் ரெயின்போ காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தை அளிப்பவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு  போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்த உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தைப் பளபளபாக்கும். உட்புறத்தை வலுவாக்கும்.
உணவுகள்எலுமிச்சை, மாம்பழம், அன்னாசி, ஆரஞ்சு, கேரட், பப்பாளி, பரங்கிக்காய், உருளை, சர்க்கரைவள்ளிக்  கிழங்கு, வாழை, மக்காசோளம், கருணைக் கிழங்கு.
கறுப்பு, கருநீல நிறம் கொண்ட உணவுகளில் ஃபிளேவனாய்ட்ஸ், ஆந்தோசைனின் மற்றும் ஐசோஃப்ளேவன்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை, நினைவாற்றல் குறைவு முதல் புற்றுநோய் வரை, பல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
உணவுகள்: கறுப்பு உளுந்து, பீட்ரூட், திராட்சை, கருஞ்சீரகம், கறுப்பு எள், கறுப்பு அரிசி, கத்தரிக்காய், மிளகு, பிளாக் டீ, நாவல் பழம், கறுப்பு உப்பு, பேரீச்சை.
சிவப்பு மற்றும் அடர்சிவப்பு நிறக் காய்கறி பழங்களில் ஆந்தோசைனின், லைகோபீன்  ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக, லைகோபீன் சத்து, பிராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதனால், இந்தக் காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்ளும்படி, அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆந்தோசைனின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உணவுகள்: மாதுளை, தக்காளி, சிவப்பு மிளகாய், ஆப்பிள், தர்பூசணி, சிவப்பு கொய்யா, ஸ்ட்ராபெர்ரி
அன்றாட உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றைத் தயக்கமின்றிச் சாப்பிடலாம். செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக்கூடியவை. வெள்ளை உணவுகளில் இதயத்துக்கு நன்மைகளைச் செய்யும் சத்துக்கள் இருக்கின்றன. மேலும், பூண்டு, வெங்காயம் போன்றவை புற்றுநோயைக்கூட தடுக்கும் என்கிறது தேசிய புற்றுநோய் நிறுவனம்.
உணவுகள்: முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், காளான், தேங்காய், முட்டைகோஸ்.
உடலில் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் இம்யூன் செல்கள் பச்சை நிறக் காய்கறிகளில் நிறைந்துள்ளன. இவை, கெட்ட பாக்டீரியாக்களை குடலிருந்து நீக்குகிறது. உடல் எடையைக் குறைக்கும் சக்தி பச்சை நிற உணவுகளுக்கு உண்டு. வயிறு தொடர்பான புற்றுநோய்களை அழிக்கவல்லது. செரிமானச் சக்தியை மேம்படுத்தும். அதிகமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்திருக்கும்.
 
உணவுகள்: வெள்ளரி, அவரை, கொத்தமல்லி, குடமிளகாய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், கீரைகள், கறிவேப்பிலை, நூல்கோல், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பச்சை மிளகாய்.