சிறுநீரகம் காப்போம்!
நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. ரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தின் செயல்பாடுமனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும்.
சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.
பயன்கள்
கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.
சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.
எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன.
வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.
உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
செயல்பாடு பாதிக்கப்படுவதால்...
சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.
சிறுநீரகத்தைப் பாதிக்கும் விஷயங்கள்
சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.
உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்
1 சிறுநீரகத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் தடைப்படுதல்.
2 சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.
3 சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.
காரணங்கள்
1 விபத்து காரணமாக ரத்த இழப்பு.
2 உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.
3 செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.
4 சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.
5 பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு `அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, `மயோகுளோபின்’ (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
நாட்பட்ட சிறுநீரக நோய்
சிறுநீரகம் மூன்று மாதங்களுக்கு மேல் சரியாகச் செயல்படவில்லை எனில், அதை நாட்பட்ட சிறுநீரக நோய் என்கிறோம். இது மிகவும் ஆபத்தானது. நிலைமை மோசம் ஆகும் வரை இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. அறிகுறிகள் தெரியும்போது, சிறுநீரகப் பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றிருக்கும்.
நாட்பட்ட கால சிறுநீரக நோய் ஏற்படக் காரணங்கள்
1.சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2)
2. உயர் ரத்த அழுத்தம்
3. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
4. சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று
5. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
6. சில மருந்துகள் மற்றும் நச்சுக்கள்
7. க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)
8. சிறுநீர்ப்பாதை அடைப்பு
சர்க்கரைநோய்
நாம் உட்கொண்ட உணவை செல்கள் பயன்படுத்த இன்சுலின் சுரக்கிறது. போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைவாக இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நம் சிறுநீரகங்கள், குறிப்பிட்ட அளவு மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்க அனுமதிக்கும். அளவு மீறும்போது, அதை வெளியேற்றும் பணியையும் செய்யும்.
வேலைப்பளு தொடரும்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் உள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தைக்கூட வெளியேற்றிவிடுகின்றன.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. சிறுநீரகத்தின் உள்ளே பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் சரியாகச் செய்ய முடிவது இல்லை. இதனால், உடலில் அதிக அளவில் நீர் தங்குகிறது. நச்சுக்கள் வெளியேறாமல் ரத்தத்தில் தங்குகின்றன.
சர்க்கரை நோய், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேற்றும் சிக்னல் உத்தரவு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, சிறுநீர்ப்பையின் அழுத்தம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.
டைப் 1, டைப் 2 என எல்லா வகை சர்க்கரை நோய்களும் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால், கவனம் தேவை.
இதைத் தவிர்க்க, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக மாவுச்சத்து உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம்
இயல்புநிலையில் ரத்த அழுத்தமானது 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது, இதயம் சுருங்கும்போது 120-ம், இதயம் விரிவடையும்போது 80-ம் இருக்க வேண்டும். இதயம் விரிவடையும்போது 120 முதல் 139-க்கு உள்ளும், இதயம் விரிவடையும்போது 80-89 வரை இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதுவே, இதயம் சுருங்கும்போது 140-க்கு மேலும், இதயம் விரிவடையும்போது 90-க்கு மேலும் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம்.
மேலே சொன்னதுபோல, சிறுநீரகம் என்பது மிகப்பெரிய வடிகட்டி அல்ல. மிக நுண்ணிய அளவில்தான் இதன் செயல்பாடு இருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயின் சுவர் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய் என்பது, சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்களையும் சேர்த்துதான். மிகச்சிறிய ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தில் ரத்தம் செலுத்தப்படும்போது, ரத்தக் குழாய் தளர்வுற்று, குறுகி, இறுக்கம் அடைகிறது. பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் போதுமான அளவு ரத்தத்தைச் சிறுநீரகத்துக்கு அளிக்க முடியாமல்போகிறது.
சிறுநீரகத்தினுள் உள்ள நெஃப்ரானில் முடியின் தடிமனைவிட சிறிய ரத்தக் குழாய்கள் உள்ளன. ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால், செயல்திறன் பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கலாம்.
டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்று
சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection (UTI)) என்கிறோம். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து மேல் சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, யுரித்ரா எனப்படும் கீழ் சிறுநீர் குழாயில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பெரும்பாலும், கீழ்நிலை சிறுநீரக மண்டலத்தில்தான் நோய்த்தொற்று ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் உடலியல் அமைப்பு கிருமி பரவ ஏற்றதாக இருக்கிறது.
நோய்த்தொற்று கீழ்நிலையில் இருக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும். தொற்றானது சிறுநீரகம் வரை பரவினால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
பொதுவாக, பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பாதையில் நுழையும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பாதையை அடையும் கிருமியானது, சிறுநீர்ப் பையை அடைந்து மிக வேகமாகப் பெருக்கம் அடையும். பொதுவாக, நம்முடைய சிறுநீரக மண்டலமே இத்தகைய கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.
நம்முடைய செரிமான மண்டலப் பாதையில் காணப்படும் இ-கோலை பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது.
பொதுவான அறிகுறிகள்
சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.
மிகச் சிறிய அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
சிறுநீர் கலங்கலாக இருத்தல்.
சிறுநீரில் ரத்தம் கலந்து, கோலா நிறத்தில் இருப்பது.
சிறுநீரில் நாற்றம்.
இடுப்புப் பகுதியில் வலி.
நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அறிகுறிகள் மாறுபடும்.
சிறுநீரகம்: மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஆகியவை.
சிறுநீர்ப்பை: இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.
கீழ் சிறுநீர் குழாய்: சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.
பரிசோதனை
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பது கண்டறியப்படும்.
சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித் தொற்று எனக் கண்டறியப்படும்.
அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், சிறுநீர்ப்பாதை சி.டி., எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து பார்க்கப்படும்.
சிஸ்டோஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து பரிசோதனை செய்யப்படும்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்க...
தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும்.
மலம் கழித்துவிட்டு ஆசனவாயைக் கழுவும்போது கவனத்துடன் செய்ய வேண்டும். மேல் இருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதவகையில் கவனமாக இருக்க வேண்டும்.
உடலுறவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இது, விரைவில் சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வெளியேற்றப்படும்.
சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic kidney disease )
சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கிறோம். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.
மரபியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.
இதில், ஒரு வகையான `ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal dominant polycystic kidney disease (ADPKD)) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது.
ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal recessive polycystic kidney disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம்.
இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவது.
கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பெண்களுக்கு இது கர்ப்ப காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
சுயமருத்துவம்
டாக்டர் பரிந்துரை இன்றி, உடல் வலி, தலைவலிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும்.
எல்லோருக்கும் எல்லா வகையான மருந்துகளும் ஏற்றுக்கொள்வது இல்லை. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
ஆன்டிபயாட்டிக், நெஞ்சு எரிச்சல் மருந்துகள், ஆன்டிவைரல், உயர் ரத்த அழுத்தம் என எந்த ஒரு மருந்தும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.
எனவே, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உடல்பருமன்
உடல்பருமனால் இதய நோய்கள், மூட்டுவலி வரும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர்... அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
உடல்பருமனாக உள்ளவர்களுக்கு அதிகப்படியான கொழுப்பு அவர்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிகிறது. ரத்தத்தில், டிரைகிளசரைட் என்ற கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு குறைகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை.
இவர்கள் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரலாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.
உடல் எடை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டயட் திட்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, அதிக அளவில் புரதச் சத்துள்ள உணவை எடுக்கின்றனர்.
அதிகப் புரதச்சத்து சிறுநீரகத்தின் வேலைப் பளுவை அதிகரிக்கிறது.
கார்போஹைட்ரேடுக்குப் பதிலாக, கொழுப்பை எரித்து அதிகப்படியான ஆற்றலைப் பெறும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனம்கூட சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்யலாம்.
எனவே, டாக்டரின் ஆலோசனை பெற்று சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
புகையிலை, மதுப் பழக்கம்
முன்கூட்டியே மரணம் நிகழ முக்கியமான காரணியாக இருப்பது புகையிலை. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள், கணையப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வர முக்கியக் காரணியாக சிகரெட் புகைத்தல் இருக்கிறது.
சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றன.
சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டத்தைக் குறைத்து பாதிப்படையச் செய்கிறது.
சிகரெட் நச்சுக்கள் ரத்தக் குழாய் சுவரை பாதிப்படையச் செய்து, குறுகலாக்குகிறது.
ஒருவருக்கு ஏற்கெனவே, உயர் ரத்த அழுத்தம் இருந்து, அதற்கான மருந்து எடுக்கிறார் என்றாலும், சிகரெட் புகைக்கும்போது, அது அந்த மருந்தின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
க்ளோமெருலோநெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)
சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய முடிச்சு, போன்ற வடிகட்டிகளில் (Glomeruli), நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதன் மூலம், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.
இதுவும் உடனடி மற்றும் நாட்பட்ட சிறுநீரக பிரச்னையாக வெளிப்படலாம்.
முகத்தில் நீர் கோத்தல் (எடிமா), சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் இதன் முக்கிய அறிகுறிகள்.
சிறுநீரகப் பாதையில் தடை
சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கற்கள் உருவாவதால் இந்த அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு ப்ராஸ்டேட் அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகத்தில் படியும் சிறிய அளவிலான கடினமான தாதுஉப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வலுவானவை. இந்தப் படிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. இந்தக் கற்கள், தாதுஉப்புகள் அல்லது அமில உப்புக்களால் ஆனதாக இருக்கலாம்.
சிறுநீரகக் கற்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அது, சிறுநீரகம் முதல் சிறுநீர்ப்பை வரை எங்கும் அடைப்பை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கற்கள் உருவாக முக்கியக் காரணம், சிறுநீர் மிகவும் கடினமானதாக இருப்பதுதான். இதனால், அதில் உள்ள தாதுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்கின்றன அல்லது ஒட்டிக்கொண்டு கற்களாக உருவெடுக்கின்றன.
சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். இந்தக் கற்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும்.
சிறிய கற்களாக இருந்தால், அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் வெளியேற்ற முயற்சிக்கலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
காரணம்
சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
பெரும்பாலும் இந்தக் கற்களை நாம் கண்டறிவது இல்லை. அது அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், கற்கள் உருவானது நமக்குத் தெரிகிறது.
அறிகுறிகள்
சிறுநீரகக் கல், உருவான இடத்தில் இருக்கும் வரை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அது அங்கிருந்து நகரும்போது அல்லது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையும்போது அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
முதுகு மற்றும் பக்கவாட்டில் தாங்க முடியாத வலி. குறிப்பாக, விலா எலும்புக்குக் கீழ்.
கீழ் வயிற்றில் தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு நோக்கிப் பரவும்.
வலி அலை அலையாக வரும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி அதிகமாக இருக்கும்.
பிங்க், சிவப்பு அல்லது பிரெளன் நிறத்தில் சிறுநீர் வெளிப்படும்.
கலங்கலாகவும் நாற்றத்துடனும் சிறுநீர் இருக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
மிகக் குறைவாகவே சிறுநீர் வெளியேறுதல்.
வழக்கத்தைவிட அதிகமாகச் சிறுநீர் கழித்தல்,காய்ச்சல்.
நோய்த்தொற்றும் இருந்தால் உடல் சில்லிட்டுப்போதல்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
சிறுநீரகக் கற்களின் வகைகள்
எந்த மாதிரியான கல் வரலாம், எப்படி உருவாகலாம் எனத் தெரிந்துகொண்டோம் என்றால், கற்கள் உருவாவதை நம்மால் தவிர்க்க முடியும்.
கால்சிய கற்கள்
சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சிய கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. தவிர, நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக, சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால், கால்சிய கற்கள் உருவாகின்றன.
ஸ்ட்ருவைட் கற்கள் (Struvite stones)
நோய்த்தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும்.
யூரிக் அமிலக் கற்கள்
எக்ஸ்ரேவில் இது தெரியாது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம்.
சிஸ்டின் கற்கள்
மிகவும் அரிதாக ஏற்படக்கூடியது. சிறுநீரகம் அதிகப்படியாக குறிப்பிட்ட வகை அமினோ அமிலத்தைப் பிரிக்கும் மரபியல்ரீதியான நோயால் தோன்றக்கூடியது. மிக அரிதாக வேறு சிலவகைக் கற்களும் உருவாகின்றன.
எப்படிக் கண்டறியலாம்?
அறிகுறிகளைப் பொறுத்து, சில எளிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ரத்தப் பரிசோதனை
ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் அல்லது யூரிக் அமிலம் உள்ளதா எனக் கண்டறியலாம்.
எக்ஸ்ரே பரிசோதனை
பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால், எக்ஸ்ரே கதிர்வீச்சை செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம்.
அல்ட்ரா சவுண்டு
அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதை கண்டறியலாம்.
25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம்.
இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி)
ரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி, சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது.
சி.டி ஸ்கேன்: வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம்.
சிறிய கற்கள்
மிகச்சிறிய கல் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய சிகிச்சை தேவைப்படாது. வலி நிவாரண மாத்திரை எடுத்துக்கொண்டு, அதிக அளவில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டாலே, சிறிய கற்கள் வெளியேறிவிடும்.
ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறிய கற்களை வெளியேற்ற உதவும். பழச்சாறு அருந்துவதற்குப் பதில், தண்ணீர் அருந்துவது நல்லது.
கற்கள் நகரும்போது, சிறுநீர்ப் பாதைக் குழாயில் பயணிக்கும்போது அதிகப்படியான வலி இருக்கும். இதைத் தாங்கிக்கொள்ள வலி நிவாரணிகளை டாக்டர் பரிந்துரைப்பார். அவர் பரிந்துரைத்த மாத்திரையைப் பரிந்துரைத்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு, கற்கள் கரைந்து வெளியேற மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். சிறுநீர்ப்பாதையில் உள்ள தசைகளை தளர்வுறச் செய்து, கற்கள் எளிதில் வெளியேறவும் மருந்து பரிந்துரைக்கப்படும்.
பெரிய கற்கள்
சிறுநீரகக் கற்கள் வெளியேற முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தால் அதற்குத் தண்ணீர் அருந்துவது, மருந்து எடுத்துக்கொள்வது பலன் அளிக்காது. ஏனெனில், இப்படிச் செய்தால், அது சிறுநீர்ப் பாதையில் பாதிப்பு, அடைப்பு, நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். எனவே, இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.
எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோடிரிப்ஸி (ESWL)
வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலையைச் செலுத்தி கல் உடைக்கப்படுகிறது. 1 முதல் 1 1/2 செ.மீ அளவுக்கு மேல் கல் இருந்தால், இந்த முறையைப் பயன்படுத்தி கல் உடைக்கப்படும். ஒலி அலையானது சிறுநீரகக் கல்லின் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தி, சிறுசிறு துண்டுகளாக உடைக்கும். இப்படிச் செய்யும்போது தாங்க முடியாத வலிகூட ஏற்படலாம். எனவே, அந்த நேரத்தில் மயக்க மருந்து எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். கல் உடைந்து வெளியேறுவதால், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம்.
பெர்கியூட்டேனியஸ் நெஃப்ரோலித்தோட்டமி (பி.சி.என்.எல்.)
இந்த முறையில் 2.5 செ.மீ அளவு உள்ள கல்லைக்கூட உடைத்து வெளியே எடுக்கலாம். இந்த முறையில், விலா எலும்புப் பகுதியில் சிறிய துளை இட்டு நெப்ரோஸ்கோப்பி கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி சிறுநீரகத்தில் துளையிட்டு கல்லை அடையும். இந்தக் கருவியுடன் உள்ளே செலுத்தப்படும் கேமரா இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் வெளியே காண்பிக்கும். கல்லை நெருங்கியதும் அது லேசர் கதிர்வீச்சால் உடைக்கப்பட்டு வெளியே உறிஞ்சப்படும். முந்தைய அறுவைசிகிச்சை முறைகளைக் காட்டிலும் மேலானது; வெற்றிகரமானது; பாதுகாப்பானது. இந்த முறையில் ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு இல்லை. இந்த சிகிச்சைக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கவேண்டும்.
யூரிட்டரோஸ்கோப்பி (யு.ஆர்.எஸ்)
உறுதியான வளைந்துகொடுக்கக்கூடிய ஸ்கோப்பி யானது, சிறுநீர் வெளியேறும் வழியாக உள்ளே செலுத்தப்பட்டு, கல் இருக்கும் இடத்தை அடையும். கல்லை அடைந்ததும் லேசர் கதிர்வீச்சைச் செலுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு செ.மீ அளவு உள்ள கல்லைக்கூட எடுக்க முடியும். ஆனால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் கல் இருந்தால் மட்டுமே இந்த முறையில் கல் எடுக்க முடியும். சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை இந்த முறையால் எடுக்க முடியாது.
ரிட்ரோகிரேடு இன்டர்னல் ரிஸ்ட்ரோஸ்கோப்பி (ஆர்.ஐ.ஆர்.எஸ்.)
வளையக்கூடிய யு.ஆர்.எஸ் என்ற ஃபைபரால் ஆன மெல்லிய டெலஸ்கோப் பைப், பிறப்புறுப்பு வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த பைப் சிறுநீர்ப் பையைத் தாண்டி சிறுநீரகம் வரை செல்லும். இதன், உள் முனையில் வெளிச்சத்துக்கு சிறிய லைட் பொருத்தப்பட்டிருக்கும். அதை வெளியே இருந்து இயக்கும்போது, உள்ளே சிறுநீரகத்தில் உள்ள காட்சிகள் வெளியே திரையில் தெரியும்.
அதைக்கொண்டு கல் எங்கே உள்ளது எனத் தெரிந்துகொள்ள முடியும். சிறிய கல்லாக இருப்பின், இந்த மெல்லியக் குழாயில் இருக்கும் கூடையை வைத்து வெளியே எடுத்து வந்துவிடலாம். பெரிய கல்லாக இருந்தால், அதை லேசர்கொண்டுதான் உடைத்து வெளியே எடுக்க முடியும்.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க!
ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டும் அல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால், உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இறைச்சி, உப்பு, சாக்லேட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)
சிறுநீரகம் திடீரெனக் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
சிறுநீரக செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
எதிர்பாராதவிதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’ என்கின்றனர்.
நாட்பட்ட, திடீர் செயலிழப்பு பாதிப்பு என எதுவாக இருந்தாலும், அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தாக வேண்டும்.
சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் அக்யூட் கிட்னி ஃபெயிலியர் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகம் தன்னுடைய செயல்பாட்டைச் செய்யும் வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்
சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்; எப்போதாவது சிறுநீர் இயல்பாக வெளியேறும்.
உடலில் நீர் தேங்குவதால் கால், பாதங்களில் வீக்கம்.
தூக்க உணர்வு.
மூச்சுத் திணறல் அல்லது சுவாசித்தலில் சிரமம்.
சோர்வு.
குழப்பம்.
குமட்டல்.
நெஞ்சு வலி, அழுத்தம்.
வலிப்பு.
மிக மோசமான நிலையில் கோமாவுக்குக்கூட செல்லலாம்.
சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கும். வேறு பிரச்னைக்கு பரிசோதனை செய்யும்போது இதைக் கண்டறிவதும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு... மூன்று காரணங்கள்!
1)சிறுநீரகத்துக்குக் குறைவான அளவில் ரத்த ஓட்டம்.
2)விபத்து உள்ளிட்ட காரணங்களில் சிறுநீரகங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவது.
3)சிறுநீரகத்தில் இருந்து வெளிப்படும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது.
சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறையக் காரணங்கள்
ரத்த இழப்பு அல்லது நீர் இழப்பு.
உயர் ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து.
மாரடைப்பு.
கல்லீரல் செயலிழப்பு.
இதய நோய்கள்.
மோசமான தீக்காயம்.
சிறுநீரகப் பாதிப்பு
சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து கட்டிப்போதல்.
கொழுப்பு படிந்து, சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வது தடைப்படுதல்.
சிறுநீரக நுண் வடிகட்டிகளில் வீக்கம் (Glomerulonephritis).
கீமோதெரப்பி சிகிச்சை, ஆன்டிபயாடிக் மருந்து, டை மருந்து செலுத்துதல், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்.
மது, கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்.
சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுதல்
சிறுநீர்ப்பை புற்றுநோய்.
சிறுநீர்ப்பாதையில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்துதல்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய்.
பெருங்குடல் புற்றுநோய்.
ப்ராஸ்டேட் பெரிதாவது.
சிறுநீரகக் கற்கள்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்
பரிசோதனை
சிறுநீர் வெளியேறாமை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மருத்துவமனையில் சிறுநீர் வெளியேறும் அளவு பரிசோதிக்கப்படும்.
சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
ரத்தப் பரிசோதனையின் மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.
இமேஜிங் பரிசோதனை: அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி பரிசோதனை பரிந்துரைக்கப்படும். இதில், சிறுநீரகத்தின் அளவு எப்படி உள்ளது எனக் கண்டறியப்படும்.
புற்றுநோய் மாதிரியான பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டால், சிறுநீரக பயாப்சி பரிந்துரைக்கப்படும்.
சிகிச்சை
சிறுநீரகச் செயலிழப்பு பிரச்னை உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சையின்போது, உடலில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற்றப்படும்.
பொட்டாசியம், கால்சியம் அளவு கட்டுக்குள் இருக்க மருந்து அளிக்கப்படும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற டயாலிசிஸ் செய்யப்படும்.
டயாலிசிஸில் இரண்டு வகை உள்ளன. ஹீமோடயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ் என்று இரண்டு வகை உள்ளது.
ஹீமோடயாலிசிஸ் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இதில், கையில், இரண்டு குழாய்கள் பொருத்தப்படும். ஒரு குழாய் வழியே கெட்ட ரத்தம் இயந்திரத்தினுள் செல்லும். அங்கு அது சுத்தம் செய்யப்பட்டு, மற்றொரு குழாய் வழியே உடலுக்குள் செல்லும். இந்த இயந்திரத்தை செயற்கை சிறுநீரகம் என்று சொல்லலாம்.
வாரத்துக்கு 12 மணி நேரத்துக்கு டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கப்படும்.
பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது வீட்டில் செய்யப்படுகிறது. வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து குழாய் பொருத்தப்படுகிறது. இந்த குழாய் வழியே திரவம் செலுத்தப்படும். சுத்தீகரிப்பு முடிந்ததும் இந்த குழாய் வழியே திரவம் வெளியேறிவிடும்.
சிறுநீரக செயல்இழப்பு அடைந்தவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு அளிக்கும்.
உறவினர்களிடமிருந்து சிறுநீரகம் தானமாகப் பெறுவது, விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாகப் பெற்று பொருத்துவதன் மூலம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
சிறுநீரகம் காக்க ஏழு பொன் விதிகள்
1) ஃபிட்டாக, துடிப்பாக இருக்க வேண்டும்
உடல் ஃபிட்டாக இருக்க தொடர் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். எப்போதும் துடிப்புடன் இருக்க, குறைந்த தூரத்துக்குச் செல்லும்போது, நடந்து செல்ல வேண்டும். தினமும் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரன்னிங், டென்னிஸ் போன்றவற்றை விளையாடலாம்.
2) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்
சிறுநீரக நோய்கள் வர முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான பரிசோதனைகளுடன், தங்கள் சிறுநீரக செயல்திறன் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தோம் என்றால், சர்க்கரையால் ஏற்படக்கூடிய பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் அல்லது தவிர்க்க முடியும். இது தொடர்பான சந்தேகம் இருந்தால், தயங்காமல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3) ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க வேண்டும்
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணமாக இருப்பதுபோல, சிறுநீரகச் செயலிழப்புக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் இயல்புநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
4) ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்
ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை மட்டும் பாதுகாப்பது இல்லை, இதயம், மூளை என ஒவ்வோர் உறுப்புக்கும் நல்லது. உணவில், உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மிகாமல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
5) போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் அருந்தும்போது, அது ரத்தத்தில் சோடியம், யூரியா மற்றும் நச்சுக்களின் அளவைக் குறைத்து. சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆனால், மிக அதிக அளவில் தண்ணீர் அருந்துதலும் கூடாது.
தண்ணீருக்கு பதில் குளிர்பானங்கள் அருந்துவது மிகத் தவறு. கோலா, கார்பனேட்டட் பானங்கள்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
6) புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். மேலும், புகைப் பழக்கம் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
7) வேண்டாமே சுய மருத்துவம்!
தலைவலி, மூட்டுவலி, முதுகுவலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகுவலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும்.
சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் உணவுகள்
க்ரேன்பெர்ரி ஜூஸ்
சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையாமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட் படிமத்தை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நம் ஊரில் க்ரேன்பெர்ரி பழங்கள் கிடைப்பது இல்லை. ஆனால், ஜூஸ் கிடைக்கிறது. அதிகப்படியான சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாத ஆர்கானிக் ஜூஸாகப் பார்த்து வாங்கிப் பருகலாம்.
எலுமிச்சை ஜூஸ்
இயற்கையான அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சைச் சாறானது சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதைத் தயாரிப்பதும் மிக எளிது. தினமும் கால் லிட்டர் வெந்நீரில், அரை எலுமிச்சைப்பழத்தை சாறு எடுத்து கலந்து பருகிவந்தால், சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும். தவிர, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, ஆப்பிள் சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள். உணவில், இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.
அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி எடுத்துக்கொள்வதும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதிகப்படியான வைட்டமின் சி, ஆக்சலேட்டாக மாறி, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே, எதையும் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரெட் மீட் எனப்படும் மாடு மற்றும் ஆட்டு இறைச்சியை அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம். எனவே, இத்தகைய இறைச்சி உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
குளிர்பானங்களில், செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை போன்றவை அதிகப்படியாக சேர்க்கப்படுகின்றன. இதுவும் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. குளிர்பானம் எடுத்துக்கொள்வதற்கு பதில் பழச்சாறு அருந்தலாம். இல்லை எனில், தண்ணீர் எடுத்துக்கொண்டாலே, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
ரீஃபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் மைதா, சர்க்கரை, வெள்ளை அரிசி போன்றவையும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இதைத் தவிர்த்தால் அல்லது எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்தாலே போதும்.
- பா.பிரவீன்குமார்