எண்ணெய் vs சர்க்கரை! அம்பலமான உணவு அரசியல்
எண்னெய் அதிகம் சேர்த்தா, கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு வழிவகுக்கும்' என்று மருத்துவ உலகம் அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி வருகிறது. இந்நிலையில், 'உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். ஆனால், உலகளாவிய சர்க்கரைச் சந்தையும் அரசியலும் அந்த உண்மையை மறைக்க, 1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவப் பத்திரிகையில் 'இதய நோய்க்குக் காரணம் எண்ணையே' என்று பெரிய தொகையை 'செலவழித்து' எழுதவைத்து, பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது' என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது, அமெரிக்க மருத்துவ இதழானா ஜாமா (JAMA Journal of American Medical Association).
'ஜாமா' கூறுவது என்ன?
'1960-களில் 'Internal Sugar Industry - Sugar Research Foundation (இன்று இது 'சுகர் அசோஸியேஷன்' என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் (CVD Cardio Vascular Disease) ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான்' என்ற உண்மை, மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால், இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். மேலும், சர்க்கரை மீதான குற்றச்சாட்டை எண்ணெயின் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழில், ஆய்வின் உண்மையான முடிவுகள் மாற்றப்பட்டு, 'உடல் பருமனுக்கும் அது சம்பந்த்மான நோய்களுக்கும் பெரிதும் காரணம், எண்ணெய் பொருட்களே' என்று எழுதவைத்தனர். மேலும், இவ்வாறு முடிவுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியான ஊழலைத்தான் சமீபத்தில் அம்பலமாக்கியிருக்கிறது 'ஜாமா' இதழ். வேதியலாளர் மற்றும் 'ஜாமா'வின் சர்க்கரை குறித்த அறிவியல் ஆலோசகர் க்ரிஸ் கெரன் என்ற பெண் அந்த இதழில் எழுதியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'சர்வதேச மக்கள் அமெரிக்க ஆய்வு முடிவுகளைச் சார்ந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, பணம் கொடுத்து, சர்க்கரையில் பொதிந்துள்ள ஆபத்தை உலகின் கவனத்துக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின் அன்றாட, தவிர்க்கமுடியாத உணவாக வளர்த்துவிட்டிருக்கிறது 'சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 சதவிகித சர்க்கரையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது. சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்?' என்று கேட்கிறார், கட்டுரையாளர் க்ரிஸ் கெரன்.
மருத்துவர்களின் சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்லும்போது, 'சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுக்கோஸ் (GLUCOSE) சமபங்கு கலவை. இதில் குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும். ஆனால், ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும். இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது.
மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய் (NON ALCHOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படுகிறது.
சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.
சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.
சர்வதேச உணவுச் சந்தை, தனிமனிதப் பேராசை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை... இவர்கள் அனைவரும் மக்களைவைத்து ஆடும் ஆடு புலி ஆட்டத்தில், சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும் ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா எனற கேள்வி, தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது!