அவன் பெயரும் கோபால் தான். ஆனால் இன்னொரு கோபால். சரியாகச் சொன்னால் கோபாலிகா-வாம். முப்பது வயது. இந்திய ஐஐடியில் என்னவெல்லாமோ மிகப் பெரிய டிகிரி படிப்புகளெல்லாம் படித்து முடித்து விட்டு பிழைப்புத் தேடி அமெரிக்கா வந்தவன். இணையத்தில் சாட் செய்வதென்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதிலும் முகமறியாத அனானிகளிடம் சாட் செய்வது என்றால் இன்னும் இஷ்டம். அப்படித்தான் அந்த பதிமூன்று வயது அமெரிக்க பெண்ணும் அவனுக்கு அறிமுகம் ஆனாள். நிறைய சாட்டியிருக்கின்றார்கள். ஆனாலும் நேருக்கு நேர் பார்த்ததில்லை. அரசியல் முதல் அந்தரங்கங்கள் வரை அநேகம் பேசியிருக்கின்றார்கள். படங்களும் பரிமாறப்பட்டன. எத்தனை நாட்கள் தான் பேசிக் கொண்டிருப்பதாம். நேரில் சந்திக்கலாமே என முடிவெடுத்தார்கள். அதீத எதிர்பார்ப்புகளோடு இந்த கோபாலும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த மீட்டிங் பிளேசுக்கு போனால் அங்கே இவனை வரவேற்றது ஒரு under cover agent from Chid Predator Unit. அவன் கையும் களவுமாக பிடிபட்டதாகவும் அவனை ஜாமீனில் எடுக்கவே $15000 ஆகுமென சொல்லுகின்றார்கள். எல்லாம் நிரூபிக்கப்பட்டால் இது பெரும் குற்றமாக (First degree felony) கருதப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் $25000 அபாராதமும் கிடைக்குமாம். பொழுதுபோகாமல் இணையத்தில் விளையாடி அந்த விளையாட்டு இப்போது இவனுக்கு வினையாகியிருக்கின்றது.
மைனர்களிடம் சீண்டுவது இங்கு பெருங்குற்றம். பள்ளிப் பேருந்துகளை நடுச்சாலையில் நிறுத்தும் போது அதில் மின்னும் சிவப்பு ஒளியைக்கண்டு மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து நின்று சிறார்களுக்கு சாலையைக் கடக்க வழிவிடும். சிறுவர்களை அடித்தாலோ அல்லது திட்டி அது அழுதாலோ Child Abuse என யார் வேண்டுமானாலும் 911 அழைக்கலாம். எல்லாம் டீனேஜ் முடியும் வரை தான். பள்ளி முடிந்து கல்லூரி போனதும் பொத்தி பொத்தி வளர்த்ததெல்லாம் பூ...ம். கோபாலுக்கு இதுவெல்லாம் தெரியாதிருந்ததா? அல்லது தெரிந்திருந்தும் இது ஒரு வெர்சுவல் உலகம் தானே எப்போது வேண்டுமானாலும் Undo செய்துகொள்ளலாம் என நினைத்திருந்தானா? அல்லது அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமென ஆழம் தெரியாமல் காலையிட்டு பார்த்தானா தெரியவில்லை. இணையத்தின் இன்றைய மெகா பரிமாணம் நம் ஊரில் வருமுன்னேயே இது குறித்துச் சொன்ன "காதலர் தினம்” கூடவா இவன் பார்த்ததில்லை?
இனி சாலையில் போவோறெல்லாரும் இவனுக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிவார்கள் .இவன் மட்டும் தனக்கு படுபாவியாகத் தெரிவான். http://locator.thevision2020.com ல் Sex Offenders அல்லது Child Predators வரிசையில் இவன் பெயரையும் போட்டாலும் போட்டு விடுவார்கள். உருப்படியாய் எதாவது செய்கின்ற நேரத்தில் சும்மா வம்புக்கு சாட் செய்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டான். பாவம் அந்த கோபால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக