நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தன்னுடைய பட்ஜெட் உரையில், தான் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்த முயற்சி செய்யவில்லை – அதாவது வரி உயர்வும், வரி குறைப்பும் சமமாகி விட்டது – என்பதை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். இந்த பட்ஜெட்டை படிப்பவர்கள், நிதியமைச்சர் எந்தவிதமான புது வரியையும் விதிக்கவில்லை என்று நினைப்பார்கள் என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் அப்படி கூறியது பெரிய பெரிய கம்பெனிகளை நடத்துபவர்கள், பெரிய வியாபாரம் செய்பவர்களுக்குத்தான். அவர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்தது போல் ஆகும். அது என்ன விருந்து?
2008-ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், அவசர அவசரமாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், பெரிய அளவில் பெரிய கம்பெனிகளுக்கும் வியாபாரிகளுக்கும், வரிவிலக்கு அறிவித்தார். அது அன்றைய தேவை.
அதன் காரணமாக, 2007-08-ல் ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்த எக்சைஸ் வருமானம், ஆண்டுக்காண்டு சாதாரணமாக உயருவதற்கு மாறாக, 2008-09-ல் ரூ.1.08 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதுபோலவே, சுங்க வரி 2007-08-ல் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. அதுவும் ஆண்டுக்காண்டு உயருவது போல் உயராமல், 2008-09-ல் ரூ.1.00 லட்சம் கோடியாகக் குறைந்தது. வரி வருமானம் என்பது, வரிகளை உயர்த்தாமலேயே, பொது உற்பத்தி (ஜி.டி.பி.) உயர்வதன் காரணமாகவும், விலைவாசி உயர்வதன் காரணமாகவும், தானே அதிகமாகும்.
உதாரணமாக, சென்ற ஆண்டு சோப் விலை ரூ.10 என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டு அதன் விலை ரூ.12 என்று உயர்ந்தால், சோப்பின் மேல் 10 சதவிகிதம் வரி என்கிற அடிப்படையில், சென்ற ஆண்டு வரி ரூ.1, என்பது இந்த ஆண்டு, ரூ.1.20 என்று தானாகவே உயரும். அதுபோல சோப்பு உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்தால், வரி அதன் அடிப்படையில் மேலும் 10 சதவிகிதம் உயரும். ஆகவே, சோப்பின் மீது வரியை உயர்த்தாமலேயே, சோப்பின் மூலமாகக் கிடைக்கும் வரி 20 சதவிகிதம் உயரும். அப்படி எல்லா பொருள்களின் மூலம் கிடைக்கும் வரிகளும் உற்பத்தி உயர்வதன் மூல மாகவும், விலைவாசி உயர்வதன் காரணமாகவும், வரிகளை உயர்த்தாமலேயே உயரும். இந்த விதி, மறைமுக வரிகளான எக்சைஸ், மற்றும் சுங்க வரிகளுக்கு நிச்சயம் பொருந்தும். இந்த அடிப்படையில் 2008-09-ல் உயர வேண்டிய வரி வருமானம், மாறாகக் குறைந்தது. காரணம், வரிகளைக் குறைத்ததுதான்.
இப்படி 2008-09-ல் வரிகளைக் குறைத்ததால், 2008-09-ல் எக்சைஸ், சுங்க வரி வருமானம், மேலே கூறியபடி குறைந்தது. அடுத்த 2009-10-ஆம் ஆண்டிலும் எக்சைஸ் வருமானம் ரூ.1.04 லட்சம் கோடி என்றும்; சுங்க வரி ரூ.0.83 லட்சம் கோடி என்றும் குறைந்தே இருந்தன. அதாவது 2007-08-லிருந்து, 2009-10 வரை, எக்சைஸ் மற்றும் சுங்க வரி வருமானம் உயரவில்லை. மாறாக குறைந்தன. 2007-08-ல் இரண்டும் சேர்ந்து ரூ.2.28 லட்சம் கோடியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-10-ல் அது ரூ.1.87 லட்சம் கோடி என்று குறைந்தே இருந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளில் நடப்பு விலைவாசியின் அடிப்படையில் 2007-08-ல் ரூ.48.86 லட்சம் கோடி என்றிருந்த நாட்டின் உற்பத்தி (ஜி.டி.பி.), 2009-10-ல் ரூ.65.50 லட்சம் கோடி என்று 34 சதவிகிதம் உயர்ந்தது. அப்படி விலைவாசியும், உற்பத்தியும் சேர்ந்து 34 சதவிகிதம் உயர்ந்தாலும், மறைமுக வரிகள், உயருவதற்கு மாறாக, 18 சதவிகிதம் குறைந்தது. நியாயமாகப் பார்த்தால், விலைவாசி உற்பத்தியின் அடிப்படையில் எக்சைஸ், சுங்க வரிகள் 2009-10-ல் ரூ.3.05 லட்சம் கோடியாக உயர்ந்திருக்க வேண்டும்.
இந்தக் கணக்குப்படி, வரி விலக்கின் மூலமாக பெரிய பெரிய கம்பெனிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் 2009-10-ல் ரூ.1.28 லட்சம் கோடி (ரூ.3.05 லட்சம் கோடி – ரூ.1.87 லட்சம் கோடி) வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரி விலக்குத் தொகை, அந்தப் பெரிய கம்பெனிகள் லாபம் பெறுவதற்காக கொடுக்கப்பட்டது அல்ல. இந்த வரி விலக்கு, அந்தக் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட நஷ்டஈடு. அப்படி ஏற்படும் நஷ்டத்தால் அவர்களின் வியாபாரம் குறையக் கூடாது. அதன் காரணமாக நாட்டின் உற்பத்திக் குறையக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட தொகை. ஆனால், நடந்தது என்ன? பெரிய பெரிய கம்பெனிகள் இந்தத் தொகையைக் கபளீகரம் செய்து பெரும் லாபம் ஈட்டின.
பட்ஜெட் ஆவணங்களில் கொடுக்கப்படாத நிதி விவரங்களே கிடையாது என்று பலமுறை துக்ளக்கில் எழுதியிருக்கிறேன். பட்ஜெட் ஆவணங்கள் மிகவும் நாணயமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பட்ஜெட் உரை உண்மைகளை மறைத்து பொய்களைக் கலந்து தயாரிக்கப்படுகின்றது என்றும், இந்த பகுதியில் படித்திருப்போம். அப்படி விவரமாக இருக்கும் பட்ஜெட் ஆவணங்களில், கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகள், எப்படி ஆண்டுக்காண்டு லாபம் சம்பாதிக்கின்றன, எவ்வளவு வருமான வரி கட்டுகின்றன என்பது பற்றிய விவரங்களை நாணயமான முறையில் சேகரித்து 2007-08-ஆம் ஆண்டு தவிர, மற்ற எல்லா ஆண்டுகளிலும் பட்ஜெட் ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி கம்பெனிகளின் லாபம் 2008-09-ல் குறைந்தது உண்மை. ஆனால், 2009-10-ல் கம்பெனிகளின் லாபம் அதிரடியாக உயர்ந்தது. 2006-07-ல் கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகளின் லாபம் ரூ.7.12 லட்சம் கோடியாக இருந்தது. 2008-09-ல் இது ரூ.6.68 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆனால் 2009-10-ல் ரூ.8.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது பொருளாதார நெருக்கடிக்கும் முன்னால், கம்பெனிகள் ஈட்டிய லாபத்தை விட 16 சதவிகிதம் அதிகம். ஆகவே, கம்பெனிகள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட வரிவிலக்கு 2009-10-ல் தொடர எந்த விதமான நியாயமும் இல்லை. அது 2009-10-ல் மட்டுமல்லாமல், நடப்பு ஆண்டிலும் (2010-11) – அதாவது தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டிலும், இந்த வரி விலக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருப்பதில் நியாயமே இல்லை. இந்த வரிவிலக்கை நடப்பு (2010-11) ஆண்டிலேயே விலக்கி இருக்க வேண்டும். கம்பெனிகளின் லாபம் 2007-08 - ஐ விட, 2009-10-ல் உயர்ந்திருக்கிறது என்று இப்போது தெரிந்தும் கூட, 2008-09-ல் அளிக்கப்பட்ட வரி விலக்கை, இந்த பட்ஜெட்டில் வாபஸ் பெறாதது அநியாயம் என்று கூடச் சொல்லலாம்.
அப்படி 2008-09-ல் கம்பெனிகள் உற்பத்தியைக் குறைக்கக் கூடாது, நஷ்டம் அடையக் கூடாது, அதனால் நாட்டின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக அளிக்கப்பட்ட வரி விலக்கை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நியாயமாக விலக்கி இருந்தால், எவ்வளவு வரி வருமானம் அடுத்த ஆண்டு கூடும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா? ரூ.1 லட்சம் கோடி. இப்படி ரூ.1 லட்சம் கோடி வரியை அநியாயமாக தத்தம் செய்ய முடிவு செய்ததைத்தான் நிதியமைச்சர் நாசூக்காக, “நான் வரி வருமானத்தை அதிகரிக்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.
அதன் அர்த்தத்தை பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் புரிந்து கொள்ளவில்லை. பட்ஜெட்டை விமர்சனம் செய்த அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளவில்லை. இதைப் புரிந்து கொண்டு தீபாவளி கொண்டாடியவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளும், அதை நடத்துபவர்களும்தான். அதனால்தான் பட்ஜெட் சமர்ப்பிக்கப் பட்டதிலிருந்து, பங்கு மார்க்கெட் ஆகாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், அழகாக ஜோடிக்கப்பட்ட பட்ஜெட் உரையில், ‘ஆம் ஆத்மி’க்கு வழக்கம் போல நிதியமைச்சர் ‘சாக்லெட்’ கொடுத்திருப்பதால், பட்ஜெட் ஆவணங்களையே படிக்காமல், பட்ஜெட் உரையின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவிக்கும் பத்திரிகைகளும், இந்த பட்ஜெட்டை ‘ஆம் ஆத்மி பட்ஜெட்’ என்று கொண்டாடின.
இந்த வரி விலக்கு தொடரும் என்று கம்பெனி வட்டாரங்களில் கூட சிலர் நினைக்கவில்லை. ஆனாலும், அது தொடர்ந்திருக்கிறது. இப்படி அநியாயமான வரி விலக்கு தொடர்ந்து வருவதால், நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் விளைவுகளைப் பற்றி விவரமாக மேலும் பார்க்கலாம்.
பெரிய தொழில்களுக்கும், கம்பெனிகளுக்கும் 2008-09-லிருந்து ஆண்டுக்காண்டு, பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து வரி விலக்கு அளித்ததால், இந்த பட்ஜெட்டில் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் எப்படி குறைந்திருக்கிறது என்று பார்த்தோம். அப்படி வரி விலக்கு என்கிற நன்கொடையைப் பெற்ற கம்பெனிகளின் லாபம் எப்படி ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது என்றும் பார்த்தோம்.
2008-09-ல் ரூ.6.68 லட்சம் கோடி லாபம் சம்பாதித்த கம்பெனிகள், 2009-10-ல் ரூ.8.24 லட்சம் கோடி லாபம் சம்பாதித்தன என்பதையும் பார்த்தோம். இதன் அர்த்தம் என்ன? எவ்வளவு வரி விலக்கு அளிக்கப்பட்டதோ, அந்த அளவுக்கும் மேல் லாபத்தை அந்த கம்பெனிகள் சம்பாதித்திருக்கின்றன. அரசு அளித்த வரி விலக்கு, அந்தக் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தக் கம்பெனிகள் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வியாபாரம் குறைந்து, நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக.
எந்த அளவுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பொருள்களின் விலையைக் கம்பெனிகள் குறைக்க வேண்டும். அப்படி விலையைக் குறைத்து, வியாபாரத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ விபரீதம். வரி விலக்கு காரணமாக பொருள்களின் விலை குறையாமல் (அதாவது பொருள்களின் விலையைக் குறைக்காததால்) கம்பெனிகளின் லாபம் பெருகியது.
இப்படி நடந்தது ஏதோ அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடந்த விஷயம் அல்ல. 2008-09-ல் வரி விலக்கு அளித்ததன் காரணமாக, 2009-10-ல் கம்பெனிகளுக்கு பெரும் லாபம் கிடைத்தது என்பது அரசாங்கத்துக்குத் தெரியாத விஷயம் அல்ல. தனக்கு இது தெரியும் என்று அரசாங்கமே பறை சாற்றியது போல, 2011-12-ல் பட்ஜெட் ஆவணங்களிலேயே கம்பெனிகள் பெற்ற லாப கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்காண்டு பட்ஜெட் ஆவணங்களில் இந்தக் கணக்கு கொடுக்கப்படுகிறது. ஆக, அரசு இதை வேண்டுமென்றேதான் செய்திருக்கிறது. பெரிய தொழிலதிபர்களையும், பெரும் வியாபாரிகளையும் திருப்திப்படுத்தவேதான், அரசு இப்படி செய்திருக்கிறது என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை.
பட்ஜெட் ஆவணங்களை அலசினால், 2008-09-ல் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வரி விலக்கு அளிப்பதற்கு முன்னாலேயே, அரசாங்கம் பெரிய தொழில்களுக்கு வரி குறைப்புச் செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது விளங்கும். அதாவது, 2008-09-ல் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு முன்னமேயே, பெரிய தொழில்களுக்கு ஆதாயம் காட்ட வரிக் குறைப்பு துவங்கி விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடனேயே, மிகப் பெரிய பலனைப் பெற்றது ஆம் ஆத்மி அல்ல. பெரிய தொழில்களும், கம்பெனிகளும்தான் அப்படி லாபம் பெற்றன. அப்படி 2005-06-ல் துவங்கிய வரிக் குறைப்பு பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
2005-06-ஆம் ஆண்டு கணக்குப்படி, நாட்டின் மொத்த உற்பத்தியில் எக்சைஸ் வருமானம் 3 சதவிகிதம்; சுங்கவரி 1.8 சதவிகிதம் என்றிருந்தது. அப்போது இருந்த எக்சைஸ் மற்றும் சுங்க வரி விகிதம் குறைவு என்று சிலர் சொன்னாலும், அதிகம் என்று பெரிய பெரிய கம்பெனிகள் உள்பட யாரும் சொல்லவில்லை. ஆகவே, அப்போது அமலில் இருந்த வரி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என்று யாரும் வாதிடவில்லை. அதனால் எந்த அளவுக்கு 2005-06-ல் வரி விதிக்கப்பட்டதோ, அந்த வரியைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டே, அதாவது 2006-07-ல் எக்சைஸ் வரி குறைய ஆரம்பித்தது. இதற்கு என்ன அர்த்தம்? எக்சைஸ் வரியை எந்தவிதக் காரணமும் இல்லாமல், எந்தக் காரணமும் கூறாமல், வெளிப்படையாக யாருக்கும் தெரியாமல், அரசாங்கம் ஏன் குறைக்க ஆரம்பித்தது என்பதுதான்.
2005-06-ன் வரி விகிதப்படி, 2006-07-ல் எக்சைஸ் வரி விதிக்கப்பட்டிருந்தால், எக்சைஸ் வருமானம் ரூ.15,000 கோடி அதிகரித்திருக்கும். அதாவது, 2005-06-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 2007-08-ல் ரூ.32,000 கோடி குறைந்தது. ஆகவே பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, 2008-09-ல் வரி விலக்கு அளிப்பதற்கு முன்னாலேயே வரி குறைப்பு துவங்கி விட்டது. இரண்டே ஆண்டுகளில் பெரிய தொழில்களுக்கு ரூ.47,000 கோடி தானமாக வழங்கப்பட்டது.
ஆனால், பட்ஜெட் ஆவணங்களில் இதுபற்றி அரசு மூச்சே விடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மொத்த உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்த பிறகு, அவற்றை அலசிப் பார்த்த போதுதான், இப்படி அரசு வரிக் குறைப்பு செய்தது புரிய ஆரம்பித்தது. இதற்கு மேல் 2008-09-ல் பொருளாதார நெருக்கடி காரணமாக, வரி விலக்கு என்கிற பெயரில் வரிக் குறைப்பு வேறு நடந்தது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக அளித்த வரி விலக்கு தவிர, அதற்கு முன்னாலேயே வரிக் குறைப்புச் செய்ததன் விளைவாக, 2008-09-ல் வரி வருமானம் ரூ.25,000 கோடி குறைந்தது. 2009-10-ல் வரி வருமானம் மறுபடியும் ரூ.25,000 கோடி குறைந்தது. 2010-11-ல் ரூ.37,000 கோடி குறைந்தது. இப்படி வரிக் குறைப்பின் காரணமாக 2005-06-லிருந்து 2010-11 வரை, ரூ.1,34,000 கோடி பெரிய தொழிலதிபர்களுக்குத் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, 2008-09-லிருந்து 2010-11 வரை பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.3,36,000 கோடி வரி விலக்கு தானம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு தொகைகளையும் சேர்த்துப் பார்த்தால், 2005-06-லிருந்து 2010-11 வரை, வரிக் குறைப்பின் மூலமாகவும், வரி விலக்கின் மூலமாகவும், பெரிய தொழில்களுக்கு 4,70,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
வரி தானம் இத்தோடு நிற்கவில்லை. பட்ஜெட் ஆவணங்களில் மேலும் இன்னும் இரண்டு விவரங்கள் இருக்கின்றன. ஒன்று – போட்ட வரியை, வரி விலக்கின் மூலமாக இழந்தது. இதில், மேலே கூறிய பொருளாதார வீழ்ச்சியின்போது அளிக்கப்பட்ட தொகைகள் அடங்காது. அது தவிர, ஆண்டுக்காண்டு விதித்த வரியைக் குறைக்க சட்டத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வரி விலக்குகள். இவற்றால், எவ்வளவு வருவாய் நஷ்டம் என்பதையும் விளக்குகிறது பட்ஜெட் ஆவணங்களில் ஒன்று.
இதை ‘கைவிடப்பட்ட வரிப் பட்டியல்’ (Statement of revenue foregone) என்று குறிப்பிடுகிறது பட்ஜெட் ஆவணங்கள். இதன்படி, பல வகையான வரி விலக்குகளின் காரணமாக, விதிக்கப்பட்ட எக்சைஸ், சுங்க, வருமான வரி வசூல்கள் குறைந்திருக்கின்றன. ஆண்டுக்காண்டு குறைந்தும் வருகின்றன. இந்தப் போக்கு ‘ஆம் ஆத்மி’யை ஜெபம் செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு குறையவில்லை. ஆச்சரியப்படாதீர்கள். அதிகமாகி இருக்கிறது. விவரங்கள் இதோ:
இப்படி வரி விலக்கால் 2005-06-ஆம் ஆண்டு குறைந்த ஒட்டு மொத்த வரி வருமானத் தொகை ரூ.2.43 லட்சம் கோடி; 2006-07-ஆம் ஆண்டு ரூ.2.89 லட்சம் கோடி; 2007-08-ஆம் ஆண்டு ரூ.3.06 லட்சம் கோடி; 2008-09-ஆம் ஆண்டு ரூ.4.61 லட்சம் கோடி; 2009-10 -ஆம் ஆண்டு ரூ.4.82 லட்சம் கோடி; 2010-11-ஆம் ஆண்டு ரூ.5.12 லட்சம் கோடி. 2005-06-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில் 50 சதவிகிதமாக இருந்தது. 2010-11-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில் 72 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில், கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு.
2005-06-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், 2010-11-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை கிட்டத்தட்ட 44 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இப்படி வரி விலக்கல் தொகைகள் ஆண்டுக்காண்டு விஷம் ஏறுவது போல் ஏறி வருகின்றன. இதைப் பற்றி கவலை தெரிவிக்கிறது, பட்ஜெட் ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள ‘கைவிடப்பட்ட வரிப் பட்டியல்’.
ஆனால், இதைப் பற்றி நிதி அமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பத்திரிகைகளோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்படி கைவிடப்பட்ட வரிகளில் மிகவும் அதிகமானவை எக்சைஸ் மற்றும் சுங்க வரிகள். கைவிடப்பட்ட சுங்க, எக்சைஸ் வரிகள், மொத்த கைவிடப்பட்ட வரித் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு.
இப்படி கைவிடப்பட்ட வரித் தொகையில், 2008-09-ஆம் ஆண்டு தவிர, மற்ற ஆண்டுகளில் மேலே கூறிய வரி விலக்கல்கள் அடங்காது. அவை தனி. இந்த கணக்குப்படி 2010-11-ஆம் ஆண்டில் மட்டும் வரி விலக்கு, வரிக் குறைப்பு ஆகிய தொகைகளைக் கூட்டினால், மொத்தம் ரூ.6.60 லட்சம் கோடி வரி வருமானம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையில் பாதியை வசூல் செய்தால்கூட, அரசின் இன்றைய ஆண்டு துண்டுத் தொகையில் 90 சதவிகிதம் சரியாகி விடும். மேலும் அரசாங்கம் இந்த ஆண்டு துண்டை ஈடு கட்ட, வாங்க வேண்டிய கடன் தொகையை முழுவதுமாகத் தவிர்த்திருக்கலாம்.
இப்படி கணக்கு எடுத்துப் பார்த்தால், முதலாளிகளுக்காக வரிகள் எப்படி திரைக்குப் பின்னால் குறைக்கப்பட்டு வருகின்றன என்பது விளங்கும். நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் இவை எல்லாம் வெளிவருமா? எப்படி வரும். அதுதான் ‘ஆம் ஆத்மி’யை அர்ச்சனை செய்து பூஜிக்க தயாரிக்கப்பட்ட சஹஸ்ர நாமம் அல்லவா? நிதி அமைச்சர் அப்படிச் செய்வதில் அர்த்தம் இருக்கிறது.
அவருக்கும் அவருடைய கட்சிக்கும் ஓட்டுக்கள் தேவை என்பதும், ‘ஆம் ஆத்மி’க்கள் கையில் இருக்கும் ஓட்டுக்களை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்கிற ஆதங்கம் ஆளும் கட்சிக்கு இருக்கும் என்பதும் சரி. ஆனால் பத்திரிகைகளும், ஊடகமும் பட்ஜெட் பற்றி நிதி அமைச்சர் கூறுவதையே, ஏன் கிளிப் பிள்ளை போல எதிரொலிக்கின்றன?
காரணங்கள் மூன்று :
ஒன்று – மற்றவர்களுக்கு முன்னால் பட்ஜெட் பற்றி நம்முடைய கருத்தைக் கூறிவிட வேண்டும் என்கிற அவசரம். அதனால், பட்ஜெட் ஆவணங்களைப் படிக்காமலேயே நுனிப் புல்லை மேய்ந்து, தங்கள் கருத்தை வெளியிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது. இது டி.வி. சேனல்கள் வந்த பிறகு அதிகமாகி விட்ட வக்கிரம். அது போல், பத்திரிகைகளும், பட்ஜெட் பற்றி முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எழுதுவது பொதுவாக அரசாங்கத்தின் கருத்துக்களே. அப்படி மாற்றி எழுதினாலும், அதுவும் அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தினால் மட்டுமே.
இரண்டாவது – பட்ஜெட் ஆவணங்களைப் படிக்க 24 மணிநேரமாவது தேவை. அப்படியென்றால், 28 பிப்ரவரி காலை சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் பற்றி, மார்ச் 1-ஆம் தேதி பிற்பகல்தான் கருத்து சொல்ல முடியும். அதற்குள் கருத்து கூறுபவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் தலை வெடித்து விடுமே. அதனால்தான் ‘சுடச்சுட’ அரைகுறை கருத்துக்கள் வெளிவந்து, பட்ஜெட்டிலிருந்து வாசகர்களுக்குள்ள சுவாரஸ்யம் குறைந்து போன பின்புதான் உண்மை வெளிவருகிறது.
மூன்றாவது – இப்போது இந்தப் பகுதியில் நாம் பார்ப்பது போல, பெரிய பெரிய பத்திரிகைகள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை – லஞ்சம் உட்பட – பல வகையிலும் ஊக்குவித்து, தங்களுக்கு எப்படி பட்ஜெட் பற்றிய விமர்சனம் வர வேண்டுமோ, அப்படிப்பட்ட விமர்சனம் மட்டுமே வரும்படி செய்வது. இதனால் பட்ஜெட் பற்றிய உண்மை விவரம் முதலில் மட்டுமல்ல, எப்போதுமே கூட வெளிவராத ஒரு நிலை உருவாகி வருகிறது.
இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் பற்றி, அரசாங்கத்தின் பட்ஜெட் விளக்கத்திலோ அல்லது பத்திரிகைகளின் ‘ஆழ்ந்த’ அலசலிலோ ஒரு வார்த்தைக் கேட்டிருப்போமா? உண்மை நிலை இப்படியிருக்க, இந்த பட்ஜெட்களுக்கு ‘ஆம் ஆத்மி’ பட்ஜெட்கள் என்ற மவுசு வேறு. அப்படி அதற்கு மவுசு சேர்க்க, ‘ஆமாம் சாமி’ போடும் பத்திரிகைகள் வேறு.
இப்படி ஒருபுறம், பெரிய தொழில்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் தானம்; இன்னொரு புறம், யாருமே கண்டுகொள்ளாத கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்கள். அவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டின் ஜனத்தொகையில் 58 சதவிகிதம். அவர்களுக்கு பத்திரிகைகள், ஊடகங்களின் ஆதரவு இல்லை. காரணம், அவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வகையில்லை. பத்திரிகையாளர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளிக்க அவர்களிடம் பணம் கிடையாது. பத்திரிகைகளும், ஊடகமும் அவர்களை ஏன் கண்டுகொள்ளப் போகிறார்கள்? அவர்களுடைய நிலை, அவர்களுக்கு! 1991-92-லிருந்து பல அரசாங்கங்களும், பட்ஜெட்களும் என்ன செய்திருக்கின்றன ? ( தொடர்ச்சி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை போடுகிறேன் )
( நன்றி: துக்ளக், மார்ச் மாத இதழ் ) (idly vadai)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக