புதன், 4 பிப்ரவரி, 2015

மறக்க முடியாத மக்கள் கலெக்டர்

மறக்க முடியாத மக்கள் கலெக்டர்
மேற்கு வங்கத்தைக் கலக்கிய ஸ்ரீபிரியா
பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினம். பிப்ரவரி முதல் தேதி, எளியவர்​களுக்காகப் போராடிய ஸ்ரீபிரியாவைப் புற்றுநோய் பலிவாங்கிவிட்டது.
 2004-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற இவர், மதுரை சட்டக் கல்லூரியில் படித்தவர். சட்டக் கல்லூரியில் பல்வேறு போராட்டங்களுக்குத்  தலைமை​தாங்கியவர். போராட்ட குணமிக்கவர். சட்டக் கல்லூரிகளில் இருந்த ப்ரேக்கிங் சிஸ்டத்தை அகற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வு ஆகாமல் போனால், அந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியாது என்ற அந்த சிஸ்டத்தை உடைக்க உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தமிழ் மொழி மீது ஆர்வம் மிக்கவராக இருந்தார். முதுகலை சட்டப் படிப்பை முடித்ததும் டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் தொழிலை நடத்தி, அங்கு நடைபெறும் அதிகாரப் போக்கை பார்த்து ஐ.ஏ.எஸ் படிப்புக்கு மாறினார்.
தனது கல்லூரி நண்பரான லஜபதிராயை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னும் தொடர்ந்து படித்தார். சட்டப் பாடத்தை முதன்மையாகவும் தமிழை விருப்பப் பாடமாகவும் படித்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று, மேற்கு வங்க மாநிலத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியில் அமர்ந்தார்.
அப்போது அங்கே நானோ கார் தொழிற்​சாலைக்காக நிலம் ஆக்கிரமிப்பு செய்த  விவ​காரம் பரபரப்பாக இருந்தது. நானோ கார் தொழிற்சாலையை சிங்கூர், நந்தி கிராமத்தில் தொடங்க, அங்கு இருந்த ஏழை விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பிடுங்கி கையகப்படுத்தி வந்தபோது ஸ்ரீபிரியா அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை துணிச்சலாகச் செய்தார். விவசாயிகளின் பக்கம் நின்று பேசியதால், போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுகிறார் கலெக்டர் என்று டாடா நிறுவனம் புகார் சொன்னது. இருந்தாலும் அதிகார மையத்துக்கு வளைந்து கொடுக்காமல் மக்களின் பக்கம் நின்றார். உயிருடன் போகமாட்டாய் என்று பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளது.  ஸ்ரீபிரியா மிரளவில்லை.
மேதா பட்கர் அங்கு உள்ள மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை முடக்கச் சொல்லி ஸ்ரீபிரியாவுக்கு குடைச்சல் கொடுத்தனர். 'மக்களின் உரிமைகளை நிலை நாட்ட போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உரிமை இருக்கிறது’ என்று சொல்லிவிட்டார். மாவோயிஸ்ட்களுக்கு சப்போர்ட் பண்ணும்விதமாக கலெக்டர் நடந்துகொள்கிறார் என்று பிரச்னை செய்தனர். எல்லா எதிர்ப்புகளையும் துணிச்சலாக சமாளித்தார்.
ஒரு கட்டத்தில் முதல்வரான மம்தா பானர்ஜியே ஸ்ரீபிரியாவை அழைத்து, 'எப்படியாவது நிலத்தைமீட்க வேண்டும். அது மக்களின் சொத்து’ என்று கட்டளை போட்டதும் போலீஸ் பரிவாரங்களுடன் போய் நிலத்தை மீட்கும் பணியில் இறங்கினார்.
'மிகவும் பழைய பேருந்துகளைத் தூக்கிப் போடுங்கள். அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பேருந்துக் கட்டணங்கள் தாறுமாறாக இருக்கின்றன. மக்களின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கிறது’ என்று முதல்வரான மம்தாவிடம் ஸ்ரீபிரியா துணிச்சலாகப் பேசியதை மேற்கு வங்கப் பத்திரிக்கள் புகழ்ந்து எழுதின.
ஒருமுறை ராமேஸ்வரத்துக்கு வங்காளத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பேருந்து ஒன்று மதுரை அருகே விபத்தில் சிக்கியது. அதில் ஆறு பேர் பலியாகி, பலர் படுகாயம் அடைந்தனர். அப்போது மதுரையில் சிகிச்சை பெற்று வந்த  பிரியா உடனடியாக களத்தில் இறங்கி, காயம்பட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தார். காயம்பட்ட ஒரு நபரின் உடைகள் அழுக்காக இருந்த காரணத்தினால் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அந்த நபரை விமானம் புறப்படும் முன்பு இறக்கிவிட்டது. கோபம் அடைந்த ஸ்ரீபிரியா கடும் வாக்குவாதம் செய்து அவருக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஸ்ரீபிரியாவுக்குப் புற்றுநோய் தாக்கியதைக் கேள்விப்பட்டு மம்தா ஆறுதல் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் சென்றும் பயனில்லாமல் ஸ்ரீபிரியாவின் உயிர் பிரிந்தது.
 ஸ்ரீபிரியாவின் மரணம் அவரது குடும்பத்துக்கு மட்டும் இழப்பு இல்லை.  எளியோர் அனைவருக்கும்தான்!

கருத்துகள் இல்லை: