புதன், 4 மார்ச், 2015

ஈஷா சிவராத்திரி - விகடன்

ஈஷா சிவராத்திரியில்... லட்சம் பக்தர்கள்!
'சிவா என்றால் 'எது இல்லையோ அது’ என்று பொருள். பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய இருப்பு எதுவென்றால், அது எங்கும் காணப்படும் பிரமாண்டமான வெற்றிடம்தான்! இந்த வெறுமையில் எல்லாம் ஒடுங்குகின்றன. இதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது'' என்று சத்குரு அந்த நள்ளிரவில் பேசிய உரையை, கிடுகிடுக்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்தனர் லட்சக்கணக்கான மக்கள். ஆம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷாவின் மகா சிவராத்திரி வைபவம் அது! 
திருவையாறு ஆராதனைபோல தினமும் இசைக் கச்சேரி. பரதம் (கீதா சந்திரன்), ஹிந்துஸ்தானி (தேஜேந்திர நாராயண மஜும்தார்), வாய்ப்பாட்டு (டி.வி.சங்கர நாராயணன் மற்றும் ராஜன்  சாஜன் மிஸ்ரா), வயலின் (கணேஷ்  குமரேஷ்) மற்றும் பாம்பே ஜெயயின் வாய்ப்பாட்டுக் கச்சேரி என தினமும் இசை ராஜாங்கம்.
மகா சிவராத்திரியான பிப்ரவரி 17ம் தேதி, பாடகி ஜிலாகான், பாடகர் பார்த்திவ் கோஹிலின் இசை, கூடி நின்ற கூட்டத்தை ஆட்டம் போட வைத்தது. விக்கு விநாயக் ராமின் கச்சேரி முடிந்தும், கைத்தட்டலும் ஆரவாரமும் அடங்க நேரம் பிடித்தது, அந்த மகா கலைஞனுக்குக் கிடைத்த மெகா பாராட்டு!
பொதிகை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு. தமிழகம் முழுவதும் 104 இடங்களில், பெரிய திரையில்... என  அன்பர்கள் சத்குருவின் சத்சங்கத்துக்காகக் காத்திருந்தனர். மலையடிவாரத்தில் கூடியவர்களோ ஒன்றரை லட்சத்துக்கும் மேலே!
ஏழு மணிக்கு மேடைக்கு வந்த சத்குரு, அவ்வப்போது சொன்ன கதைகள், பாமரனுக்கும் புரியும் ஆன்மிக விதைகள். நள்ளிரவு 12 மணியளவில், அவர் உள்ளங்கைகளை உரசியபடி, சட்டென்று கை தட்டி உச்சரிக்க... அந்த மந்திரச் சொல்லை லட்சக்கணக்கான அன்பர்கள் மீண்டும் சொல்ல... வெள்ளியங்கிரியின் உச்சியை உரசிவிட்டு வந்தது நமசிவாய கோஷம்!
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

கருத்துகள் இல்லை: