வறுமை நீக்கி வளம் சேர்க்கும் காசி அன்னபூரணி
காஷ்யபன்
"தீபாவளித் திருநாளன்று இந்தத் தெய்வத்தை தரிசித்து வணங்கி யாசித்தால், இன்னல்கள் விளைவிக்கும் இடர்கள் தீரும்; அல்லல்கள் தரும் அமங்கலங்கள் அகலும்; பஞ்சம் பறந்தோடும்; வாழ்வு வளம் பெறும். ஈசனே கையேந்தி யாசகம் கேட்ட அந்த தெய்வம் வேறு யாருமில்லை; புனித காசியில் கோலோச்சும் அன்னபூரணியேதான் அவள்!
இந்த அன்னைக்கு மட்டும் எப்படி வந்தது இப்படி ஒரு மகத்துவம்? அன்னை ஆதிசக்தி, அன்னபூரணி வடிவெடுத்ததற்குப் பின்னால் அருள்திறம் பொங்கும் திருக்கதை ஒன்று இருக்கிறது.
பிரம்மனின் தருக்கை அறுக்க, அவன் தலைகளில் ஒன்றை அரிந்தான் ஆதிசிவன். அதனால், பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான் ஐயன். அந்தத் தோஷம் அரனின் அடிவயிற்றில் பசிப் பிணியாகப் பற்றிக் கொண்டது. பசிப்பிணி அகல வேண்டுமெனில், பரமசிவன் கையில் கபாலம் தாங்கிப் பிச்சை புக வேண்டும்; அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் ஆதிசக்தி அன்னம் அளித்து அது நிறைய வேண்டும் என்பது விதி.
ஆதிசக்தி அன்னபூரணி அவதாரம் எடுத்தாள். ஆண்டவன் ஏந்திய கபாலத்தை அன்னமிட்டு நிரப்பினாள். பரமேஸ்வரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பின்வாங்கியது.
ஆண்டவனுக்கே படியளந்த அன்னை அன்னபூரணிக்கு காசி மாநகரில் ஆலயம் அமைந்ததற்குப் பின்னணி யிலும் அற்புதமானதொரு வரலாறு உள்ளது.
காசியில் தேவதத்தன், தனஞ்செயன் எனும் சகோதரர்கள் இருவர் இருந்தனர். தேவதத்தன் செல்வந்தன்; தனஞ்செயன் தரித்திரன்.
ஒருநாள், மணிகர்ணிகைத் துறையில் முக்குளித்து, விஸ்வேஸ்வரனைத் தரிசித்து விட்டு, புசிப்பதற்கு ஏதுமின்றி, காசியின் முக்தி மண்டபத்தில் பசியுடன் அமர்ந்திருந்தான் தனஞ்செயன்.
'இப்படி அன்னதோஷம் என்னைப் பீடிக்க என்ன காரணம்? எந்தப் பிறவியில், எவருக்கு, என்ன கெடுதல் செய்தேன்?’ எனப் பலவாறாக யோசித்துப் பசி மயக்கத்தில் ஆழ்ந்தான்.
அப்போது, கனவொன்று கண்டான். கனவில் கருணை முகத்துடன் ஒரு சந்நியாசி காட்சி தந்து, 'தனஞ்செயா! முன்னொரு காலத்தில் காஞ்சியில் சத்ருமர்தன் எனும் ராஜகுமாரன் இருந்தான். அவனும் அவன் தோழனான ஹேரம்பனும் வேட்டைக்காகக் காட்டுக்குச் சென்று, வழிதவறி நிலை தடுமாறினர். பசியால் பரிதவித்தனர். ஆதவன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் ஒரு முனிவர் கண்டார். தமது ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று தாகம் தணித்ததுடன், பசியை அடக்கப் பாலில் வேகவைத்த அரிசி மாவை அளித்தார். ராஜகுமாரன் சத்ருமர்தன் அதை ஆவலுடன் உண்டான். அவன் தோழன் ஹேரம்பனுக்கோ அந்த அரிசி மாவுக் கஞ்சி அற்பமாகத் தோன்றியது. கொஞ்சம் உண்டுவிட்டு, மிச்சத்தை எறிந்தான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதால்தான், அப்பிறவியில் ஹேரம்பனாக இருந்த நீ, இப்பிறவியில் தனஞ் செயனாகத் தரித்திரத்தைத் தழுவியிருக்கிறாய். அரச குமாரனோ உன் சகோதரன் தேவதத்தனாகப் பிறந்து, திரளான செல்வத்தையும், குன்றாத அன்னத்தையும் கொண்டிருக்கிறான்.
அன்னத்தை அவமானப்படுத்தியதால், அன்னதோஷத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். இந்த நிலை மாறவேண்டுமானால், அன்னபூரணியைச் சரண் அடை. விரதம் இருந்து அன்னபூரணியை ஆராதித் தால், அவள் அருளைப் பெறலாம். உன் தரித்திரத்தை ஒழித்துக் கட்டலாம்...' என்று கூறினார்.
கனவு கலைந்தது. தனஞ்செயன் துள்ளி எழுந்தான். அன்னபூரணி விரதம் இருக்க விழைந்தான். அஸ்ஸாமில் உள்ள காமரூபம் எனும் இடத்தில், மலையடிவாரத்தில் உள்ள ஏரிக்கரையில் தேவி பூஜையில் ஈடுபட்டிருந்த தேவகன்னியரிடம் அன்னபூரணி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்த தனஞ்செயன், காசியை நோக்கிக் கடுகி வந்தான். நியமங்களைக் கடைப்பிடித்து, அன்னபூரணி ஆராதனையைப் பங்கம் எதுவுமின்றிப் பண்ணி முடித்தான். இருந்தும், அவனால் அன்னபூரணியின் அருளைப் பெறமுடியவில்லை.
'இனி நான் எங்கே போவேன்? யாரைக் கேட்பேன்?’ என்றெல்லாம் ஓலமிட்டபடி, காமரூபத்தை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி, நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது. எந்த இடத்தில் அன்னையின் அம்சம் கொண்ட ஆரணங்குகள் அவனுக்கு அன்னபூரணியைப் பூஜிக்கும் முறைகளைப் போதித்தார்களோ, அந்த இடத்தில் ஓர் இருட்டுக் கிணறுதான் இடம் பிடித்திருந்தது. வாழ்க்கையை ெவறுத்த தனஞ்செயன் அந்த இருட்டுக் கிணற்றில் குதித்தான்.
ஆனால், அவன் இறக்கவில்லை. அந்தக் கிணற்றில் கண்களைக் கூச வைக்கும் ஓர் ஒளிப்பிரதேசம் தெரிந்தது. தனஞ்செயன் அந்த இடம் நாடிச் சென்றான்.அங்கே ஓர் அற்புதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. ஓர் அழகான ஏரி. அதன் கரையில் தெய்வ பூஜையில் ஈடுபட்டிருந்த தேவ கன்னிகைகள், வேத முழக்கம், இனிய சங்கீதம்.
அந்தச் சூழ்நிலையில், ஸ்படிக உடலுடன் ஓர் ஆண்மகன் ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் சடையில் பிறை. முகத்தில் ஒளிர்ந்த மூன்று கண்கள். அவன் உடல் முழுவதையும் ஆபரணங்களாக அலங்கரித்திருந்த நாகங்கள்.
அவனுக்கு அருகில், ரத்தினப் பல்லக்கு ஒன்றில் அலங்கார ரூபிணியாக ஓர் அன்னை அமர்ந்து, அந்த ஆனந்த நடனத்தை ஆர்வம் பொங்க ரசித்துக்கொண்டிருந்தாள்.
அந்தப்புரத்தில் நுழைந்து தன்வசமிழந்து நின்ற தனஞ்செயனை, பல்லக்கு நாயகி தன்னருகே வருமாறு கண்களால் கட்டளையிட்டாள். தனஞ்செயன் அந்த அம்பிகையின் காலடியில் வீழ்ந்தான்.
'தனஞ்செயா! எந்த அன்னபூரணியைத் தேடி அலைந்தாயோ, அந்த அன்னபூரணியே நான். ஈசனின் ருத்ரதாண்டவத்தைக் கண்டுகளிக்க, சக்தியாக இங்கே வீற்றிருக்கிறேன். உன் விரத மகிமையால் என்னைக் காணும் பேறு உனக்குக் கிட்டியிருக்கிறது' என்றாள்.
'அன்னையே! உங்கள் இருவரின் திவ்விய தரிசனத்தால் பிறவிப் பெருங்கடல் கடக்கும் பாக்கியம் பெற்றேன். உங்களை வணங்குகிறேன்' என்று, வார்த்தைகள் பிறழக் கதறினான் தனஞ்செயன்.
அன்னபூரணி புன்னகைத்தாள். 'தனஞ்செயா! அன்னபூரணி விரதத்தை இனி யார் மேற்கொண்டாலும், அவர்களுக்கு அன்னத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது. அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும். எந்த வீட்டில் என்னை பூஜிக்கிறார்களோ அந்த வீட்டில் நான் வந்து வாசம் புரிவேன். திரும்பிச் செல். அன்னபூரணி விரதத்தை மறுபடி நேம நியமங்களுடன் தொடங்கி, முடி. உனக்கு அருள்பாலிக்கும் ஆசையுடன் நான் கங்கைக்கரை காசிக்கே வருகிறேன். என் ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பு. அங்கே நான் வந்தமர்ந்து வாசம் புரிகிறேன்' என்று அன்னபூரணி அருள் வாக்கு அளித்தாள்.
தனஞ்செயன் மீண்டும் காசிக்கு வந்தான்; அன்னபூரணி விரதத்தை மேற்கொண்டான். அவனது இல்லத்தில் வறுமை தொலைந்தது. வாழ்வு வளம் பெற்றது. அன்னபூரணியின் ஆணைப்படி அவளுக்கு ஓர் ஆலயம் அமைத்தான். காசியின் ஆட்சிப்பீடத்தில் அன்னபூரணி வந்து அமர்ந்து அருள்பாலிக்கத் தொடங்கியது இவ்வாறுதான்!
காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கும் அதே வீதியின் முனையில்தான் அன்னபூரணி ஆலயம் அமைந்திருக்கிறது. அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த நுழைவாயில்.
ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தின் மேல் வடஇந்திய பாணியில் அமைந்த விமானத்தின் வெவ்வேறு அளவிலான கூம்புகள், உச்சியில் பறக்கும் கொடியுடன் கோலாகலமாகக் காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்ததும், கர்ப்பக்கிரகத்துக்கு நேர் எதிரில் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் இருந்துதான் கர்ப்பக்கிரகத்தில் அருள்பாலிக்கும் அன்னை அன்னபூரணியைத் தரிசிக்க இயலும்.
அன்னையின் பீடத்துக்குக் கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்ரம் கண்களுக்குப் புலப்படாது. எனினும், அன்னபூரணியின் அழகைக் கண்ணுறும்போது ஸ்ரீசக்ரத்தைத் தரிசிக்கமுடியாத குறை நிவர்த்தியாகிவிடும்.
இரண்டடி உயர கருங்கல் சிலையாக நிற்கும் அன்னபூரணி, இடது கையில் அன்னப் பாயசப் பாத்திரத்தையும், வலது கையில் வாரி வழங்கும் கரண்டியையும் ஏந்தி, காட்சி தருகிறாள்.
'காசிபுராதீஸ்வரி’ என்று ஆதிசங்கரர் தமது அன்னபூர்ணாஷ்டகத்தில் வாய் இனிக்க, நெஞ்சம் குளிர விளிக்கும் அன்னபூரணி, காசிமாநகரின் தன்னிகரில்லா நாயகியாக, அப்புனிதத்தலத்தின் நடுநாயக தேவியாக ஞானச் செங்கோல் ஏந்தி அருளாட்சி புரிந்து வருகிறாள்.
இந்த அன்னையைத்தான் ஆதிசங்கரர் 'இடைவிடாது அன்னமளித்துக்கொண்டு இருப்பவள், மோட்சம் அளிப்பவள், எப்போதும் நமக்கு நன்மையைத் தருபவள், புவி மாந்தருக்கெல்லாம் தலைவியாய்த் திகழ்பவள், வெற்றியை அளிப்பவள், கருணைக் கடலாகத் திகழ்பவள்’ என்றெல்லாம் பலவாறாகத் துதித்துப் பரவசமெய்தியிருக்கிறார்.
அன்னையைத் தரிசித்துவிட்டுப் பிராகாரத்தில் இறங்கினால், ஒரு பெரும் வெண்கல மணி இரு தூண்களுக்கு இடையில் அலங்காரமாக ஊசலாடுகிறது. அதன் உச்சியில் கோமுகம் வடிக்கப்பட்டிருக்கிறது.
கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே வலப்பக்கம் காளிங்க நர்த்தனமாடும் கண்ணன். இடப்பக்கம் கஜலக்ஷ்மி. ஆலயத்தின் வடகிழக்கில் குபேரர் குடிகொண்டிருக்கிறார். அடுத்தபடியாக கௌரிஷங்கர். அக்கினி பகவானுக்கு ஆஸ்தான இடமான தென்கிழக்கு மூலையில் சூரிய நாராயணர், நான்கு கரங்களுடன் ரதத்தில் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார். தேரோட்டி அருணன் ஏழு குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.
சிந்தாமணி கணபதி அடுத்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வாயு மூலையான வடமேற்கு மூலையில் துளசிதாசர் ஸ்தாபித்த ஆஞ்சநேயர் சந்நிதி. அருகில் ராமர் சந்நிதி.
அன்னபூரணியின் கருவறையை நோக்கியவாறு சத்தியநாராயணர் எழுந்தருளியிருக்கிறார். அவரைச் சுற்றிலும் சிறிய அளவில் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
அரசி அன்னபூரணி எழுந்தருளியிருக்கும் காசி மாநகரில் தீபாவளிக்கு இரட்டிப்புச் சிறப்பு உண்டு. நாம் வாழ்வதற்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் அவள் அளிப்பதாகவே மக்கள் நம்புகிறார்கள். அந்தச் செல்வச் செழிப்பை உருவகப் படுத்திக் காட்டுவதைப்போல், அன்னபூரணி தங்க விக்ரஹமாகக் காட்சி தருகிறாள். சர்வாலங்காரங்களுடன் நெஞ்சை அள்ளுகிறாள். அந்தக் கண்கொள்ளாக் காட்சி தீபாவளி சமயத்தில் மட்டுமே கிட்டுகிறது. தீபாவளியின்போது ஆலயம், தங்கக் குத்துவிளக்கில் நவரத்தினச் சுடரொளி படருவதுபோல் ஒளிர்கிறது.
கோயிலின் முதல்தளத்தில் தங்கியிருக்கும் தங்க அன்னபூரணி தீபாவளிக்கு முதல் நாள் நரகசதுர்த்தசி அன்று உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறாள்.
அபிஷேகம், ஆரத்தி அடங்கிய உச்சிக்கால பூஜைக்குப் பின்னர் திரைக்குப் பின்னால் மறைந்துவிடும் தங்க அன்னபூரணி, மறுநாள் தீபாவளி அன்று விடியற்காலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறாள். தீபாவளிக்கு அடுத்த நாளும் தரிசனம் தொடர்கிறது. அகிலத்துப் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அன்னபூரணியை தரிசிக்க வந்துவிட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு ஆலயத்தில் பெண்கள் கூட்டம். குதூகலமும், கோலாகலமுமாகக் காட்சி அளிக்கிறது கோயில்.
அன்னை கொலு மண்டபத்தின் மையத்தில் பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்க, அவள் அங்கமெங்கும் தங்க ஆபரணங்கள். தலையில் மணிமகுடம். அதற்கு மேல் தங்கக் குடை. மார்பிலும், கரங்களிலும் மின்னும் மணியாரங்கள். வைரம், வைடூரியம், மரகதம், புஷ்பராகம், கோமேதகம் என விலைமதிப்பற்ற அத்தனை கற்களும் ஆபரணங்களில் இழைக்கப்பட்டிருக்கின்றன. இடக்கரத்தில் தங்கக்கிண்ணம். வலக் கையில் தங்கக் கரண்டி. எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் வெள்ளி விச்வேஸ்வரருக்கு அன்னமிடுகிறாள் ஞானத்தாய்.
அன்னபூரணிக்கு வலது பக்கத்தில் தங்கத்திருமேனியுடன் ஐஸ்வர்ய நாயகி லக்ஷ்மி. இடது புறத்தில் வற்றாத செல்வங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பொன்னாலான பூமி தேவி. அவர்களும் வலக் கரங்களை உயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்.
சமைக்கப்பட்ட அன்னம், இனிப்புகள், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு சமைக்கப்பட்ட கூட்டு போன்ற பதார்த்தங்கள் அன்னைக்கு முன் அம்பாரமாகப் படைக்கப்பட்டுள்ளன.
அன்னையின் செவ்விதழில் புன்னகை தவழ்கிறது. 'என் குழந்தைகளின் பசியைப் போக்கத்தானே நான் இங்கு வீற்றிருக்கிறேன். இந்தா, பெற்றுக் கொள்!’ என்று அந்தக் கருணைநாயகி கூறுவது போல் தோன்றுகிறது.
அன்னபூரணியை ஆராதிப்போம்! அவள் அருளுக்குப் பாத்திரமாவோம்!
அன்னதோஷம் அன்னதோஷம் யாரையெல்லாம் பீடிக்கும்?
** கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை;
** பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை;
** உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை;
** தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் எறிபவர்களை;
** பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.
திருத்தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் : காசி என்னும் வாரணாசி
தலம் அமைந்திருக்கும் மாநிலம் : உத்தரப்பிரதேசம்
அன்னையின் திருநாமம் : அன்னபூரணி
எப்படிப் போவது? : சென்னையில் இருந்து காசிக்கு
ரயில் மூலம் செல்லலாம்.
எங்கே தங்குவது? : காசியில் நகரத்தார் சத்திரம், (பெயர்தான் சத்திரமே தவிர, கட்டில் மெத்தை, கழிப்பறை மற்றும் குளிர் சாதன வசதியுடன் தனித்தனியாக அறைகள் உள்ளன), சங்கர மடம் போல தங்கும் விடுதிகள் பல உள்ளன. தவிர, வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.
தரிசன நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 12.30 வரை; மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக