திங்கள், 30 மே, 2016

தர்பூசணி

கூல் கூல் காய் - கனிகள்... ஜில் ஜில் உணவுகள்!

த்தரி வெயில் கதகளி ஆடிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. வெயிலைக் கொடுக்கும் இயற்கை, அதை சமாளிக்க உதவும் காய் - கனிகளை வாரிவழங்குவதிலும் குறை வைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை, இளநீர், நுங்கு என்று சமய சஞ்சீவினிகளாக விளங்கும் காய் - கனி வகைகள், வெயிலின் தாக்கத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்க, கடைவீதிகளில் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அப்படியே சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், ஜூஸ், சர்பத், மில்க் ஷேக், லஸ்ஸி, சாலட், கூட்டு என தயாரித்து சாப்பிட்டால்... இரட்டை கொண்டாட்டம்தானே! இந்த இணைப்பிதழில் வெரைட்டியான, வித்தியாசமான கோடை உணவுகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
தர்பூசணி - ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன், சர்க்கரை  சிரப் - 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) - 10.
செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக  அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். 

குறிப்பு: 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.

இளநீர் - தர்பூசணி டிலைட்
தேவையானவை: இளநீர் - 2 கப், தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள், இளநீர் வழுக்கை - தலா ஒரு கப், சர்க்கரை - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாதி அளவு தர்பூசணியை மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி, 8 கட்டிகள் வரும் விதத்தில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் உறைய வைக்கவும். மிக்ஸியில் இளநீர் வழுக்கை, சர்க்கரை, தர்பூசணித் துண்டுகளை சேர்த்து அடித்து... இளநீர், எலுமிச்சைச் சாற்றுடன் நன்றாகக் கலந்து, கிளாஸ்களில் ஊற்றி, ஒவ்வொரு கிளாஸிலும் 2 தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டால்... இளநீர் - தர்பூசணி டிலைட் ரெடி.

தர்பூசணி ஷேக்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - அரை கப், புளிக்காத புதிய தயிர் - ஒரு கப், ஸ்ட்ராபெர்ரி - 5 (லேசாக தோல் சீவி, துண்டுகளாக்கவும்), சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், கிவிப்பழம் - 2, புதினா இலைகள் - தேவையான அளவு. 

செய்முறை: கிவிப்பழத்தை நறுக்கவும். 4 கிவிப்பழ துண்டுகள், 4 தர்பூசணி துண்டுகள் இவற்றை எடுத்துத் தனியே வைக்கவும். மீதியுள்ள தர்பூசணி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, தயிர், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அடித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, கண்ணடி டம்ளர்களில் ஊற்றவும். ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு துண்டு கிவி, ஒரு துண்டு தர்பூசணி, ஒன்றிரண்டு புதினா இலை சேர்த்து அலங்கரிக்கவும்.

தர்பூசணி - ரோஜா டிரிங்க்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் சிரப் - 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, சப்ஜா விதை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சப்ஜா விதைகளை 2 மணி நேரம்  ஊறவைக்கவும். மற்ற எல்லாவற்றையும் (ஐஸ்கட்டிகள் நீங்கலாக) நன்றாகக் கலந்து, ஊறிய சப்ஜா விதைகள், ஐஸ்கட்டிகள் சேர்த்து சுவைக்கவும்.

தர்பூசணி குல்ஃபி
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், க்ரீம் - 6 டேபிள்ஸ்பூன், ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - சிறிதளவு. 

செய்முறை: க்ரீமை பீட்டரில் (beater) போட்டு அடிக்கவும். தர்பூசணி, சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அடிக்கவும். இரண்டையும் கலந்து கோகோ பவுடர், ரோஸ் சிரப் சேர்த்துக் கலந்து குல்பி மோல்டில் ஊற்றி, `ஸ்டிக்’கை செருகி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசர் பகுதியில்) வைத்திருந்து, மறுநாள் காலை எடுத்து சுவைக்கவும். 

தர்பூசணி - இஞ்சி பானம்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், தோல் நீக்கி, மெல்லியதாக சீவிய இஞ்சித் துண்டுகள் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - 10, நறுக்கிய எலுமிச்சை வில்லைகள் - 2, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், இஞ்சித் துண்டுகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அடிக்கவும். கிளாஸ்களில் 2, 3 ஐஸ்கட்டிகள் போட்டு, தர்பூசணி ஜூஸை ஊற்றி... புதினா இலைகள், எலுமிச்சை வில்லை கொண்டு  அலங்கரிக்கவும்.

தர்பூசணி அடை
தேவையானவை: தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப், புழுங்கல் அரிசி - 2 கப், துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை  அடைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

தர்பூசணி சர்பத்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு, சாட் மசாலா, மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: புதினா இலைகளையும், ஐஸ்கட்டிகளையும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். கிளாஸ் டம்ளர்களில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, மேலே மிக்ஸியில் அடித்த சர்பத்தை ஊற்றி, சில புதினா இலைகளைத் தூவவும்.

தர்பூசணி ரசம்
தேவையானவை: புளித்தண்ணீர் - ஒரு கப், தர்பூசணி சாறு - 2 கப், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப்பொடிக்க: நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மிளகு, துவரம்பருப்பு, மல்லி (தனியா) - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க: நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்துப் பொடித்ததை சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் மசித்தபருப்பை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாற்றை ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து... ஒரு கொதி வந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

தர்பூசணி தோல் பொரியல்
தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய தர்பூசணியின் வெள்ளைத் தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  

செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய், இரண்டையும் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி... மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்துக் கிளறி, நறுக்கிய தர்பூசணி வெள்ளைத் தோலையையும் சேர்த்து மேலும் வதக்கவும். கால் கப் நீர் ஊற்றிக் கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தர்பூசணி ஸ்மூத்தி
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - இரண்டரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், வாழைப்பழம் - ஒன்று (துண்டுகளாக்கவும்), வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், தர்பூசணி ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு (தர்பூசணி சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்)

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், தேங்காய்ப்பால், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து... ஐஸ்க்ரீம், வாழைப்பழம் சேர்த்துக் கலக்கவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிடவும்.

கார்பூஜா ரசாயனா
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், துருவிய வெல்லம் - கால் கப், அவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பால் எடுக்கவும். தேங்காய்ப்ப் பாலுடன் துருவிய வெல்லம், அவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஊறியதும், ஃப்ரிட்ஜில் இருந்து கிர்ணிப்பழத் துண்டுகளை எடுத்து சேர்க்கவும். 

இது, ராஜஸ்தானில் மிகவும் பிரசித்தி பெற்ற டிஷ்.

கிர்ணிப்பழ லஸ்ஸி
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், பன்னீர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், புளிக்காத புதிய தயிர் - ஒரு கப், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் (ஐஸ்கட்டிகள் நீங்கலாக) சேர்த்து மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டுப் பருகவும்.

கிர்ணிப்பழ மில்க் ஷேக்
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், காய்ச்சி, ஆறவைத்த பால் - 2 கப், சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகள், பால், சர்க்கரை, தேன் ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, வெனிலா ஐஸ்க்ரீமையும் சேர்த்துப் பரிமாறவும்.

நுங்கு கீர்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய பனை நுங்கு - 2 கப், பால் - அரை லிட்டர், கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், சாரைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாதி அளவு நுங்கை சிறுசிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும். மீதி நுங்கை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும் கண்டன்ஸ்ட்டு மில்க் சேர்த்து இறக்கி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அரைத்த நுங்கு விழுது, துண்டுகளாக்கிய நுங்கு சேர்த்துக் கலந்து, ஏலக்காய்த்தூள், சாரைப்பருப்பு சேர்த்துப் பருகலாம்.

 நுங்கு சர்பத்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய பனை நுங்கு - ஒரு கப், நன்னாரி சிரப் (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: நுங்கை மிக்ஸியில் அடித்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்னாரி சிரப்பையையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து, ஐஸ்கட்டிகளையும் சேர்த்து (தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்) நீளமான கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிச் சுவைக்கவும்.

குறிப்பு: நன்னாரி சிரப் இல்லாவிட்டால், நாட்டு மருந்து கடையில் நன்னாரி வேரை வாங்கி 4, 5 துண்டுகளை ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். அது அரை கப் ஆக வற்றியதும் இறக்கி, ஆறியதும் வடிகட்டி, தேவையான சர்க்கரை சேர்த்து  உபயோகிக்கலாம்.

நுங்கு - கிர்ணி கஸ்டர்ட்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய நுங்கு - அரை கப், தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - கால் கப், துண்டுகளாக நறுக்கிய இளநீர் வழுக்கை - 4 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா - தலா 6 (ஊறவைக்கவும்), சர்க்கரை - கால் கப்.

செய்முறை: பாதாம், பிஸ்தா இரண்டையும் நைஸாக அரைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். மிதமான சூடு வந்ததும் கால் கப் பாலைத் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதி கொதிக்கும் பாலில் அரைத்த பாதாம் - பிஸ்தா விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து கொதிக்கும் பாலில் ஊற்றி ஓரிரு கொதிகள் வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு எடுத்து, துண்டுகளாக்கிய நுங்கு, கிர்ணிப்பழம், இளநீர் வழுக்கை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வெள்ளரி ராய்த்தா
தேவையானவை: மெல்லியதாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், கெட்டித் தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரையும் உப்பையும் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து தயிருடன் சேர்க்கவும். நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சையும் சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரிக்கவும்.

இந்த வெள்ளரி ராய்த்தாவை அப்படியே சாப்பிடலாம். கலந்த சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

வெள்ளரிப் பிஞ்சு சாட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய மாங்காய் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். அந்த சூட்டிலேயே குடமிளகாய், அரிசிப்பொரி, மாங்காய் சேர்த்து, இறுதியில் வெள்ளரிப்பிஞ்சையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வெள்ளரி -  தக்காளி சாலட்
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சிறியதாக நறுக்கிய தக்காளி - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய  கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து  நன்றாக கலந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

வெள்ளரி - வெங்காய சாலட்
தேவையானவை: வட்டமாக நறுக்கிய வெள்ளரி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (வட்டமாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கொத்தமல்லித் தழையையும் இதனுடன் சேர்க்கலாம்.

வெள்ளரி தயிர் பச்சடி
தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, முள்ளங்கி - 2, கேரட் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கெட்டி அவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கேரட் துருவியில் வெள்ளரியைத் தோலுடன் துருவி தனியே வைக்கவும். கேரட், முள்ளங்கியையும் துருவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... துருவிய முள்ளங்கியை சேர்த்து வதக்கி, ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, அவல் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி, நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், வெள்ளரித் துருவல், வதக்கிய முள்ளங்கித் துருவல் கலவை ஆகியவற்றை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கலந்துவிடவும்.

இளநீர் - கல்கண்டு பானம்
தேவையானவை: இளநீர் - முக்கால் கப், இளநீர் வழுக்கை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, கல்கண்டு - 75 கிராம்.

செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை இரண்டையும் மிக்ஸியில் அடித்து, தோல் சீவி நசுக்கிய இஞ்சியையும், பொடித்த கல்கண்டையும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். பிறகு, வடிகட்டி இஞ்சியை எடுத்துவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சுவைக்கவும்.

இளநீர் - பைனாப்பிள் ஜூஸ்
தேவையானவை: இளநீர் - 2 கப், இளநீர் வழுக்கை - ஒரு கப், பைனாப்பிள் துண்டுகள் - 2 கப், சுகர் சிரப் - 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: இளநீர் வழுக்கை, பைனாப்பிள் துண்டுகள், சுகர் சிரப் மூன்றையும் மிக்ஸியில் அடித்து, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இதை கிளாஸ்களில் ஊற்றி ஐஸ்கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

வெள்ளரிக்காய் கூட்டு
தேவையானவை: வெள்ளரிக்காய் - 2, வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 3 இலைகள், சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.

செய்முறை: அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய வெள்ளரியையும்  சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்). பிறகு, வேகவைத்த பயத்தம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து ஓரிரு கொதிகள் வந்ததும், தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

கிர்ணிப்பழ டேங்கோ
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - 2 கப், ஆரஞ்சு சுளைகள் - 8, இளநீர் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், புதினா இலைகள், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு. 

செய்முறை: ஆரஞ்சு சுளைகளை தோல், விதை நீக்கி மிக்ஸியில் அடித்து, அந்த ஜூஸை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் உறைய வைக்கவும். கிர்ணிப்பழம், இளநீர், சர்க்கரை, கறுப்பு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஆரஞ்சு ஐஸ்கட்டிகளை மிதக்கவிடவும். புதினா இலைகளை மேலே தூவவும்.

ட்ரிபிள் ஷாட் பானம்
தேவையானவை: பைனாப்பிள்பழத் துண்டுகள் - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - 2 கப், இளநீர் - ஒன்றரை கப், உப்பு - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து சுவைக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்).

இளநீர் - வெனிலா டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒன்றரை கப், பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், ஐசிங் சுகர் - ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் முதலில் பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு அடித்து... பிறகு, இளநீர், ஐசிங் சுகர், உப்பு, வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து, எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். நீளமான கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி, ஐஸ்கட்டிகள் சேர்த்து சுவைக்கவும்.

இளநீர் - எலுமிச்சை கூலர்
தேவையானவை: இளநீர் - 2 கப், தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 2 கப், எலுமிச்சைப் பழம் - 2, சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - தேவையான அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

செய்முறை: ஒரு கப் தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஒவ்வொரு குழியின் மேலேயும் ஒரு புதினா இலையை வைத்து, ஃப்ரீசரில் உறைய வைக்கவும். மீதியுள்ள ஒரு கப் தர்பூசணித் துண்டுகள், தோல் சீவிய இஞ்சி, இளநீர், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, வடிகட்டவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே புதினா வைத்த தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டு, பரிமாறவும்.  

இளநீர் - பப்பாளிப்பழ ஜூஸ்
தேவையானவை: இளநீர் - ஒன்றரை கப், இளநீர், வழுக்கை - ஒரு கப்,  தோல் சீவி, நறுக்கிய பப்பாளிப் பழத் துண்டுகள் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் அடித்து, பிறகு இளநீர் வழுக்கையை சேர்த்து அடித்து, கடைசியாக இளநீரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து சுவைக்கவும் (தேவைப்பட்டால், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்).

டாய்லெட் ஹைஜீன்


னிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். “இதெல்லாம் பெரிய விஷயமா?” என்று அசட்டையாக விட்டதால்தான் அந்தக் காலத்தில் காலரா முதல் ஏராளமான கொள்ளைநோய்கள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு கழிப்பறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறார்கள். நமது நாட்டில் “இதை எல்லாமா சொல்லித்தருவார்கள்?” எனக் கழிப்பறை சுத்தம் பற்றிப் பலரும் பேசத் தயங்குவதால், அங்கிருந்து கிருமிகள் பல்கிப் பெருகி, பல்வேறு நோய்களைப் பரப்புகின்றன. நமது ஊரில் பொதுக் கழிப்பறையின் நிலை மிகவும் மோசமாக இருக்க, மக்களும் ஒரு காரணம். நம் வீட்டுக் கழிப்பறையாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இருக்கும் கழிப்பறையாக இருந்தாலும் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

கழிப்பறையைக் கட்டும்போது கவனிக்க வேண்டியவை
காற்று வெளியே செல்லும் அளவுக்குக் காற்றோட்டமான வென்டிலேட்டர் இருக்க வேண்டும்.

கழிப்பறையில் பயன்படுத்திய நீர் வெளியேறும் வகையில், சிறப்பான கழிவு நீர் வழித்தடங்களை அமைக்க வேண்டும்.

மலம், சிறுநீர் கழிக்கத் தனி அறையும், குளியலுக்குத் தனி அறையும் அமைப்பதுதான் நல்லது.

ஒருவேளை இரண்டும் ஒரே அறையில் இருந்தால், கழிப்பறைக்கும் குளியலறைக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் அமைப்பது நல்லது.

கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கழிப்பறையில் ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.

கழிப்பறையைக் கழுவுங்கள் 
குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது 15 நிமிடங்கள் செலவுசெய்து கழிப்பறை முழுதையும் சுத்தம்செய்வது அவசியம். கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காகக் கடையில் விற்கப்படும் பிரத்யேகத் திரவங்கள் அல்லது பிளீச்சிங் பவுடர்கள் பயன்படுத்தலாம். திரவமாக இருந்தாலும், பிளீச்சிங் பவுடராக இருந்தாலும், தண்ணீரில் கலந்து தெளித்து, பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவ வேண்டும். அதிக அளவு பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தினால், பாக்டீரியா அதை எதிர்கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடும். எனவே, ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை சீராகக் கழிப்பறையைச் சுத்தம் செய்துவந்தாலே போதுமானது.

வீட்டிலேயே ஆன்டிபாக்டீரியல் ஸ்ப்ரே செய்வது எப்படி?
இரண்டு கப் தண்ணீர், கால் கப் டெட்டால் சொல்யூஷன், ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் மூன்றையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக்கொள்ளவும். வெஸ்டர்ன் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் இந்த ஸ்ப்ரேவை அடிக்க வேண்டும். பின்னர், சுத்தமான பருத்தித் துணியால் துடைத்துவிடலாம்.

கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னர் செய்ய வேண்டியவை என்னென்ன?
கை, கால்கள் மற்றும் சிறுநீர், மலம் கழித்த உறுப்புகளைத் தண்ணீரால் நன்றாகச் சுத்தம்செய்ய வேண்டும்.
சோப் அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி, மீண்டும் ஒரு முறை விரல் இடுக்குகளைச் சுத்தம்செய்ய வேண்டும்.
கழிப்பறையில் இருக்கும் டேப்பை, தண்ணீர் பயன்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டும்.
கழிப்பறையை விட்டு வெளியே வரும் முன், கை,கால்களின் ஈரத்தைத் தூயப் பருத்தித் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைக்க வேண்டும்.
டிஷ்யூ பேப்பர்களைச் சரியாகக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

கழிப்பறையில் என்னென்ன பாக்டீரியா இருக்கின்றன?
நன்கு சுத்தமான கழிப்பறையில் ஒரு சதுர இன்ச் பரப்பில் குறைந்தது 50 பாக்டீரியா இருக்கிறதாம். சரியான பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். கழிப்பறையில் பல வகையான பாக்டீரியா இருந்தாலும், அதில் மிக முக்கியமானவை...

மூளையின் நேரம் காலை 11 மணி!


''இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும்போதுதான், நம் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடலின் வெப்பமும், வானிலையும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கும். நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால் உணவு, தூக்கம், வேலை போன்றவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்" என்கிறார் இயற்கை மருத்துவர் கீர்த்தனா.
 
காலை 3-5 - நுரையீரலின் நேரம்

இந்த நேரத்தில் ஒசோன் அதிகமாக இருக்கும். இது உடலுக்கு பலவித நன்மைகளைத் தரக்கூடியது. இந்த நேரத்தில் கிடைக்கும் ஆற்றல், உணவின் மூலம் கிடைப்பதைவிட சிறப்பானது. மூச்சு பயிற்சிகள், தியானம் செய்ய சரியான நேரம். வெளியில் நின்று வானிலையை ரசித்து வெறும் மூச்சை கவனித்தாலே போதும் அன்றைய நாள்முழுவதும் தேவைப்படுகிற ஆற்றலை தந்துவிடும். நுரையீரல் பலம் பெறும்.  
 
காலை 5-7 - பெருங்குடலின் நேரம்

பெருங்குடலை சுத்தம் செய்து சிறுநீர், மலம் கழிப்பதற்கான சிறப்பான நேரம் இது. 7 மணிக்குள் மலம் கழித்துவிடும்படி நம் உடலை தயார் செய்துக் கொண்டால் எந்த நோயும் அருகில் வராது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் உடல் சுத்தமாகும். உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்.
 
காலை 7-9 - வயிற்றின் நேரம்

காலை 8 மணிக்குள், உணவை சாப்பிட்டு விட வேண்டும்.  9 மணிக்குள் உணவு செரிமானமாகும். இந்த நேரத்தில் வயிற்றுக்கு வேலை கொடுப்பதுதான் சரி. நேரம் கடந்து செல்லும் போது மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்த்து தடைபடும். அதாவது, சுழற்சி பாதிக்கப்படும்.
 
காலை 9-11 - மண்ணீரலின் நேரம்

இந்த நேரத்தில் அதிகமான உடலுழைப்பு தரக்கூடாது. திரவ உணவுகளை சாப்பிட வேண்டாம். அன்றாட வேலையை மட்டும் கவனித்தால் போதும். 11 மணிக்கு மேல் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
 
காலை 11-1 - மூளையின் நேரம்

மூளைக்கு வேலை தந்து, புத்தியை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய நேரம். உடலுழைப்பு குறைவாக செய்ய வேண்டும். 
 
மதியம் 1-3 - சிறுகுடலின் நேரம்

மதிய உணவை முடித்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் உணவை செரிக்கக் கூடிய உறிஞ்சும் தன்மை (absorption) அதிகமாக சுரக்கும். உணவு செரிமானமாகி அவை உடலில் கிரகிக்க உதவும்.
மாலை 3-5 - சிறுநீர்ப்பையின் நேரம்

இந்த நேரத்தில் சிறுநீர்ப்பை நன்றாக இயங்கத் தொடங்கும். அன்றைய நாளின் கழிவை உடலிருந்து எடுத்து, சிறுநீர்ப்பையில் தேக்கி வைக்கும். அதுபோல பித்த பையும் அதன் வேலையை செய்து கொண்டிருக்கும்.
 
மாலை 5-7 - சிறுநீரகத்தின் நேரம்

இளஞ்சூடான உணவுகள், திரவ உணவுகளை சாப்பிடலாம். போதுமான நீரும் அருந்தலாம். உடலுழைப்பு தரக் கூடிய பயிற்சிகளையும் செய்யலாம்.
  
இரவு 7-9 - இதயப்பை, இதய உறையின் நேரம்

இதயப்பைக்கு ஒய்வு தருவது அவசியம். அன்றைய நாள் முழுவதும் நம் உடலுழைப்புக்கு ஏற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம் மற்றும் இதயம் சார்ந்த பகுதிகள் ஓய்வெடுக்கும் நேரம். இந்த நேரத்தில் உணர்வுகள் தொடர்பான செயல்களை செய்யக் கூடாது. குறிப்பாக, நாடகம் பார்ப்பது, டென்ஷன், பதற்றம், அழுகை, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
 
இரவு 9-11 - மனம் தொடர்பான நேரம் (triple warmer)

இந்த நேரத்தில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். எண்ண ஒட்டங்கள் குறைந்து சாந்தமான நிலையில் உறங்க முயற்சிக்கலாம்.  உடலின் வெப்பத்தை சமன் செய்வதற்கு உடல் முயற்சித்துக் கொண்டிருக்கும்.
 
இரவு 11-1 - கல்லீரலின் நேரம், 1-3 பித்தப்பையின் நேரம்:

இது தூங்குவதற்கு ஏற்ற நேரம். அதாவது கோல்டன் ஹவர் ஆப் ஸ்லீப் (Golden hour of sleep) என்று சொல்வதுண்டு. கனவுகள் இல்லாத ஆழ்ந்த தூக்கத்தை இந்த நேரத்தில் தூங்கிவிட்டால் உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் வீரியம் குறைந்து குணமடையும் வாய்ப்புகள் அதிகம். பித்தம் தொடர்பான பிரச்னை, குழந்தையின்மைக்கான பிரச்னைக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று சரியாக தூங்காமல் இருத்தல்.  எனவே, இந்த நேரத்தில் சரியாக தூங்கி எழுந்தால் உடலின் பாதி நோய்கள் குணமாகிவிடும்.

சனி, 7 மே, 2016

சோழர்களின் நீர் மேலாண்மையும், நதி நீர் இணைப்பு திட்டமும்...!

(முன்குறிப்பு: ஆங்கிலத்தில்  'Romanticize' என்றொரு சொல் உண்டு. அதாவது இருக்கின்ற விஷயத்தை மிகைப்படுத்தி அதை சிறப்பாக கூறுவது. இந்த கட்டுரை அந்த வகையை சேர்ந்தது அல்ல. அதனால் இதை மற்றுமொரு தமிழ் பெருமை பீற்றல் என்று கடந்து விடாதீர்கள்.)

பெரிய திட்டங்களை கண்டு எப்போதும் வியப்பது, அந்த பெரிய திட்டங்கள் நமக்கு வேண்டும் என்று கேட்பது நம் பொதுவான இயல்பு. நீர் மேலாண்மை விஷயத்தில் எடுத்துக் கொண்டால் கூட, நமது கோரிக்கைகள் எப்போதும் பெரிய அணைகளாக, நதி நீர் இணைப்பாக இருந்துகிறது. இந்த இயல்பினால் தான் உலகின் பழமையான அணையை கட்டியவன் சோழன்  என்று பெருமை கொள்கிறோம். ஆனால், அதே சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளை  பற்றி பேச மறுக்கிறோம். 

கரிகாலனின் கல்லணை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்தான். இப்போது கட்டப்படும் அணைகள் போலானது அல்ல, சோழன் கட்டிய கல்லணை. சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்க்காமல், கல், மண் மற்றும் களிமண் கொண்டு கட்டப்பட்ட அணை அது. அதனால்தான், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் பொறியியலை கண்டு வியந்து கல்லணைக்கு ‘கிரான்ட் அணைகட்’ என்று பெயர் சூட்டினார். இது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், சோழர்கள்  அணைகளை மட்டும் கட்டவில்லை. கல்லணைக்கு நிகரான தொழிற் நுட்பம் அவர்கள் வெட்டிய ஏரிகளிலும் இருந்தது. 

ராஜகேசரி பெருவழியும், நொய்யல் ஆறும்:
பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடி.  

எழுத்தாளர் இரா. முருகவேளிடம் இந்த பெருவழி குறித்து பேசியபோது, “இந்த பெருவழியில் பெரும் வணிக குழுக்கள் பயணித்தன. வணிக குழுக்கள் என்றால் பத்து இருபது பேர் அல்ல. குறைந்தது 1000 மாட்டு வண்டிகளில் தானியங்கள், பஞ்சுகள் மற்றும் பிறச் செலவங்களை ஏற்றிக் கொண்டு வணிகர்கள் பயணித்து இருக்கிறார்கள். கொடுமுடி முதல் பாலக்காடு வரை இந்த பெருவழியை ஒட்டிய பகுதிகள் மிகவும் வறட்சியானதாக இருந்து இருக்கிறது. அதனால், அந்த பாதையில் பயணிப்பவர்களின் நலனுக்காக கோவை பகுதியில் மட்டும் 32 நீர் நிலைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது. 

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் அவர் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும்.

கோவை மாவட்டம் பீடபூமி பகுதி. அதனால் மற்ற ஆறுகளைவிட நொய்யலாற்றின் வேகம் அதிகமாக இருக்கும். பெரும் மழை பெய்தால் கூட வேகமாக பயணித்து காவிரி உடன் விரைவாக கலந்துவிடும். அதனால், இந்த ஆற்றின் பயன்களை அந்த பகுதி மக்கள், முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வெட்டபட்ட இந்த ஏரிகள், ஆற்றின் வேகத்தை ஆற்றுப்படுத்தியது மட்டும் இல்லாமல்,  அந்த பகுதியையும் எப்போதும் செழிப்பாக வைத்து இருந்து இருக்கிறது.

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரிகளையும் மெல்ல கொன்று வருகிறோம். அதன் மூலமாக நொய்யலையும். ஆம் நொய்யல் அழிவிற்கு சாயப்பட்டறைகள் மட்டும் காரணம் அல்ல. இந்த ஏரிகளின் அழிவும்தான். முன்பு ஒரு காலத்தில் நொய்யலில் ஏராளமான நீர் நாய்கள் இருந்து இருக்கின்றன. ஆனால், இப்போது ஒன்றை கூட பார்க்க முடியவில்லை. அந்த நிலை நாளை அதனை ஒட்டி வாழும் நமக்கும் ஏற்படலாம்...” என்கிறார் முருகவேள்.  

நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் வேலையா...?
இந்த நீர் நிலைகளை காக்க வக்கற்ற இந்த அரசும் நாமும்தான் இப்போது நதி நீர் இணைப்பை பற்றி அதி தீவிரமாக பேசி வருகிறோம்.  அனைத்து கட்சிகளும் நம்மை கவர்வதற்காக நதி நீர் இணைப்பு திட்டத்தையும் தம் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து இருக்கிறது. உண்மையில் இந்த நதி நீர் இணைப்பு சாத்தியமா...பயன் தருமா...? என்ற நம் கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் சூழலியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பதிலாக இருக்கிறது. 

சூழலியலாளர் பியூஷ், “நதி நீர் இணைப்பு நன்மைகளை தருவதை விட மாநிலங்களுக்கிடையே  பிரச்னையைதான் உண்டாக்கும். இது போல் பெரிய திட்டங்களை நாம் யோசிப்பது மூலமாக, தீர்வை நோக்கி பயணிக்காமல் பிரச்னைகளை மேலும் மேலும் நாம் சிக்கலாக்குகிறோம்.” என்கிறார். 

“ஒரு வேளை இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவுக்கு மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், டன் கணக்கில் கான்கீரீட் கலவைகள் ஆற்றில் கொட்ட்டப்படும். இது மேலும் மேலும் ஆற்றை மாசுப்படுத்துமே தவிர, எந்த நல் பயன்களையும் தராது...” என்கிறார் பியூஷ். 

ஏற்கெனவே, மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் கர்நாடக வனப்பகுதிகளில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், பியூஷின் கருத்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

ஏறத்தாழ இதே கருத்தை வழிமொழியும், பூவுலகு அமைப்பைச் சேர்ந்த சுந்தராஜன்,  “இன்றைய மதிப்பில், இந்த திட்டத்தை செயல்படுத்த 20 லட்சம் கோடி தேவை. பராமரிக்க வருடத்திற்கு 2 லட்சம் கோடி தேவை. இவ்வளவு நிதி எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பி ஏமாற்றும் திட்டம்”  என்கிறார். 

அரசின் வாதம்:
இந்தியாவில் சில நதிகளில் மிகவும் செழிப்பாக வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கிறது. சில நதிகளில் பருவகாலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் போது, அனைத்து நதிகளிலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்க செய்து விட முடியும். அதனால் நமது விவசாய பரப்பு 175 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விரிவடையும்,  34000 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்க முடியும். -  இது அரசின் வாதம்.

ஆனால், இந்த அடிப்படை புரிதலே தவறு என்கிறார் இந்திய நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டெல்லி ஐஐடி பேராசிரியர் கோசைன்.
“பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த திட்டத்தை முன்வைக்கிறார்கள். வற்றாத நதிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பது இமயமலை பனிப்பாறைகள். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இன்னும் சில காலத்தில்  முழுவதுமாக உருகிவிடும் பட்சத்தில், வற்றாத நதிகள் என்று ஒன்று இல்லாமலேயே ஆகிவிடும். பின்பு, நதிகளை இணைத்து என்ன பயன்...?” என்று அவர் வைக்கும் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

நதிகள் இணைப்பிற்கு அரசு சொல்லும் இன்னொரு காரணம், தேவையில்லாமல் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும் என்பது. ஆனால், இந்த வாதமும் தவறு என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

சுந்தராஜன், ”கடல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் நதிகள் அதன் இயல்பில் கடலில் கலக்க வேண்டும். அதை தடுத்தால் கடல் மரணித்துவிடும். அதற்கு நம் சமகால உதாரணம்  'Dead Sea'. ஜோர்டான் நதியை கடலில் கலக்க விடாமல் செய்ததுதான் அந்த கடல் மெல்ல இறக்க காரணம். அது மட்டுமல்லாமல், நதி கடலில் கலக்கும் கழிமுகத்தில்தான், மீன்கள் குஞ்சு பொறிக்கும், அந்த பகுதியில்தான் அலையாத்தி காடுகள் உண்டாகும். நாம் நதி, கடலில் கலப்பதை தடுக்கிறோமென்றால், இவை அனைத்தையும் அழிக்கிறோம் என்று அர்த்தம்”


பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலேயே தீர்வு காணுங்கள்...?
சரி நம் நீர் பிரச்னைக்கு தீர்வென்ன...? நம் வரலாற்றை மீள்வாசிப்பது மூலமே நம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும். ஆம். சோழர்களின் நீர் மேலாண்மை.  

இவர்கள் பெரிய அணைகள், நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்காக திட்டமிடும் பணத்தில் பத்து சதவீதத்தைக் கொண்டே, நம் அனைத்து குளங்கள், ஏரிகளையும் மீட்டுவிட முடியும் மற்றும் ஆயிரக்கணக்கில் புது நீர் நிலைகளையும் உண்டாக்கிவிட முடியும். அதன்  மூலம் அந்தந்த பகுதியில் நீர் வளம் பெருகும். அந்த பகுதி பிரச்னை அந்த பகுதியிலேயே தீர்க்கப்படும்.

நாம் ஒரு பொருளை ஒரு இடத்தில் தொலைக்கிறோமேன்றால், தொலைத்த இடத்தில் தேடுவோமா அல்லது நமக்கு விருப்பமான இடத்தில் தேடுவோமா...? அது போலதான் நீர் பிரச்னையும். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் அதிக நீர் நிலைகளை உண்டாக்கி தீர்க்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிந்து நீர் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது.
 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நான்கு ஆண்டுகளுக்கு  முன் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வந்தது. அப்போது திருவள்ளூரிலிரிந்து தண்ணீர் எடுக்க அரசு முடிவு செய்கிறது. இரண்டு, மூன்று முறை தண்ணீர் எடுக்க அந்த பகுதி விவசாயிகளும் அனுமதித்தார்கள். ஆனால், அதன் பின் எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் எடுக்க சென்ற வண்டியை சிறைப்பிடித்து வைத்து விட்டார்கள். பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே இவ்வளவு சிக்கல் உண்டென்றால், பல மாநிலங்களின் சம்மதம் கோரும் இந்த திட்டத்தில் எவ்வளவு சிக்கல் இருக்கும்....?

இவர்கள் பெரிய அணைகள், நதி நீர் இணப்புகளை முன் வைக்க இன்னொரு காரணம் அதில் விளையாடும் பெரும் பணம் மற்றும் அதை ஒட்டிய ஊழல். அதனால்தான் சுலபமான தீர்வை கண்டு கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள். நாம் எளிய தீர்வை முன் வைத்து, அதை செயல்படுத்த அரசை நிர்பந்திக்கும் போது, இவர்களின் ஊழல்களையும் தடுத்து விட முடியும். இனியாவது நாம், கங்கையையும் காவிரியையும் இணைக்க கோராமல், நம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரியையும், கண்மாயையும் மீட்க, புனரமைக்க, புதுப்பிக்க அரசை நிர்பந்திப்போம்.

தீர்வு எளிமையான ஒன்றாக இருக்கிறது. நாம் எந்த பாதையில் பயணிக்க போகிறோம்...
?