திங்கள், 30 மே, 2016

மூளையின் நேரம் காலை 11 மணி!


''இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும்போதுதான், நம் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடலின் வெப்பமும், வானிலையும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கும். நம் உடலை இயக்கும் உறுப்புகளின் நேரத்தை நாம் அறிந்து கொண்டால் உணவு, தூக்கம், வேலை போன்றவற்றை சரியான நேரத்தில் செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்" என்கிறார் இயற்கை மருத்துவர் கீர்த்தனா.
 
காலை 3-5 - நுரையீரலின் நேரம்

இந்த நேரத்தில் ஒசோன் அதிகமாக இருக்கும். இது உடலுக்கு பலவித நன்மைகளைத் தரக்கூடியது. இந்த நேரத்தில் கிடைக்கும் ஆற்றல், உணவின் மூலம் கிடைப்பதைவிட சிறப்பானது. மூச்சு பயிற்சிகள், தியானம் செய்ய சரியான நேரம். வெளியில் நின்று வானிலையை ரசித்து வெறும் மூச்சை கவனித்தாலே போதும் அன்றைய நாள்முழுவதும் தேவைப்படுகிற ஆற்றலை தந்துவிடும். நுரையீரல் பலம் பெறும்.  
 
காலை 5-7 - பெருங்குடலின் நேரம்

பெருங்குடலை சுத்தம் செய்து சிறுநீர், மலம் கழிப்பதற்கான சிறப்பான நேரம் இது. 7 மணிக்குள் மலம் கழித்துவிடும்படி நம் உடலை தயார் செய்துக் கொண்டால் எந்த நோயும் அருகில் வராது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் உடல் சுத்தமாகும். உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்.
 
காலை 7-9 - வயிற்றின் நேரம்

காலை 8 மணிக்குள், உணவை சாப்பிட்டு விட வேண்டும்.  9 மணிக்குள் உணவு செரிமானமாகும். இந்த நேரத்தில் வயிற்றுக்கு வேலை கொடுப்பதுதான் சரி. நேரம் கடந்து செல்லும் போது மற்ற உறுப்புகளின் இயக்கமும் சேர்த்து தடைபடும். அதாவது, சுழற்சி பாதிக்கப்படும்.
 
காலை 9-11 - மண்ணீரலின் நேரம்

இந்த நேரத்தில் அதிகமான உடலுழைப்பு தரக்கூடாது. திரவ உணவுகளை சாப்பிட வேண்டாம். அன்றாட வேலையை மட்டும் கவனித்தால் போதும். 11 மணிக்கு மேல் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
 
காலை 11-1 - மூளையின் நேரம்

மூளைக்கு வேலை தந்து, புத்தியை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய நேரம். உடலுழைப்பு குறைவாக செய்ய வேண்டும். 
 
மதியம் 1-3 - சிறுகுடலின் நேரம்

மதிய உணவை முடித்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் உணவை செரிக்கக் கூடிய உறிஞ்சும் தன்மை (absorption) அதிகமாக சுரக்கும். உணவு செரிமானமாகி அவை உடலில் கிரகிக்க உதவும்.
மாலை 3-5 - சிறுநீர்ப்பையின் நேரம்

இந்த நேரத்தில் சிறுநீர்ப்பை நன்றாக இயங்கத் தொடங்கும். அன்றைய நாளின் கழிவை உடலிருந்து எடுத்து, சிறுநீர்ப்பையில் தேக்கி வைக்கும். அதுபோல பித்த பையும் அதன் வேலையை செய்து கொண்டிருக்கும்.
 
மாலை 5-7 - சிறுநீரகத்தின் நேரம்

இளஞ்சூடான உணவுகள், திரவ உணவுகளை சாப்பிடலாம். போதுமான நீரும் அருந்தலாம். உடலுழைப்பு தரக் கூடிய பயிற்சிகளையும் செய்யலாம்.
  
இரவு 7-9 - இதயப்பை, இதய உறையின் நேரம்

இதயப்பைக்கு ஒய்வு தருவது அவசியம். அன்றைய நாள் முழுவதும் நம் உடலுழைப்புக்கு ஏற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம் மற்றும் இதயம் சார்ந்த பகுதிகள் ஓய்வெடுக்கும் நேரம். இந்த நேரத்தில் உணர்வுகள் தொடர்பான செயல்களை செய்யக் கூடாது. குறிப்பாக, நாடகம் பார்ப்பது, டென்ஷன், பதற்றம், அழுகை, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
 
இரவு 9-11 - மனம் தொடர்பான நேரம் (triple warmer)

இந்த நேரத்தில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். எண்ண ஒட்டங்கள் குறைந்து சாந்தமான நிலையில் உறங்க முயற்சிக்கலாம்.  உடலின் வெப்பத்தை சமன் செய்வதற்கு உடல் முயற்சித்துக் கொண்டிருக்கும்.
 
இரவு 11-1 - கல்லீரலின் நேரம், 1-3 பித்தப்பையின் நேரம்:

இது தூங்குவதற்கு ஏற்ற நேரம். அதாவது கோல்டன் ஹவர் ஆப் ஸ்லீப் (Golden hour of sleep) என்று சொல்வதுண்டு. கனவுகள் இல்லாத ஆழ்ந்த தூக்கத்தை இந்த நேரத்தில் தூங்கிவிட்டால் உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் வீரியம் குறைந்து குணமடையும் வாய்ப்புகள் அதிகம். பித்தம் தொடர்பான பிரச்னை, குழந்தையின்மைக்கான பிரச்னைக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று சரியாக தூங்காமல் இருத்தல்.  எனவே, இந்த நேரத்தில் சரியாக தூங்கி எழுந்தால் உடலின் பாதி நோய்கள் குணமாகிவிடும்.

கருத்துகள் இல்லை: