திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் அனல் கிளப்பிய வேலு நாச்சியார்!



முதல் முதலில் பெண்கள் ராணுவம், உடையாள் படையை உருவாக்கியவர்.

 முதல் மனித வெடிகுண்டு குயிலியை உருவாக்கியவர்.

பூமராங் என்ற வளரிக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.

இந்தியாவின் முதல் கெரில்லா படையணி, கூராள் படை வைத்திருந்தவர்.

வெள்ளையர்களால் தோற்கடிக்க படாத ஒரே ராணி.

வெள்ளையர்கள் மன்னிப்புப் பட்டயம் எழுதிக்கொடுத்த ஒரே மகாராணி.

- இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்தான், வீரத்தாய் வேலு நாச்சியார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில், வேலுநாச்சியாரின் பங்கு மிகப்பெரியது. வெள்ளையரை எதிர்த்து வீரத்துடன் போரிட்டுத் தோல்வி அடைந்த ஜான்ஸி ராணியைப் போற்றும் அளவுக்கு, வரலாறு வேலு நாச்சியாரைப் போற்றியது இல்லை. அந்த மறைக்கப்பட்ட கறுப்பு வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது 'வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம்.



ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முயற்சியால் கடந்த ஆண்டு சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது வேலு நாச்சியார் நாடகம். வழக்கமான நாட்டிய நாடகங்களில், நடைமுறைக்குப் பொருந்தாத புராண, இதிகாசக் கதைகள் மட்டுமே உள்ளடக்கமாக இருக்கும். அதைக் கடந்து, முதன்முறையாக வரலாற்றை மீட்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த நாட்டிய நாடகத்துக்கு அப்போதே அமோக வரவேற்பு கிடைத்தது. ஸ்ரீராம் சர்மாவால் எழுதி இயக்கப்பட்டு, அவரது மனைவி மணிமேகலை, வேலு நாச்சியாராக நடித்த இந்த நாடகம், அதன்பிறகு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரப் பிரிவு, வீரத்தாய் வேலு நாச்சியார் நாடகத்தை அரங்கேற்ற இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவில் நாடகம் முடித்து திரும்பிய ஸ்ரீராம் சர்மா, மணிமேகலை இருவரிடமும் பேசினோம். ''வரலாற்றை மீட்டெடுக்கும்

முயற்சியாகவே இந்த நாடகத்தை ஆரம்பித்தோம். இதற்காக வேலு நாச்சியார் வாழ்ந்த பகுதிகளில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்தோம். நாடக வடிவம் பெற்றுவிட்ட பிறகு, அதற்குப் பொருள்உதவி செய்ய ஆள் இல்லாமல் தவித்தபோதுதான், வைகோ உதவி செய்து ஆதரித்தார்.

வெள்ளையரை எதிர்த்த மன்னர்கள் இந்தி​யாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் குறைவு. 1796, டிசம்பர் 25-ம் தேதி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார். அவருக்கு முன், மன்னராக இருந்த அவரது கணவர் முத்துவடுகநாதரை வெள்ளையர்கள் கொன்றனர். வேலு நாச்சியாருக்குப் பிறகு வந்த மருது பாண்டியர்களையும் கொன்றனர். ஆனால், இடையில் 20 ஆண்டு காலம் மகாராணி​யாக இருந்த வேலு நாச்சியாரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

பூமராங் என்று சொல்லப்​படும் எய்தவரிடமே திரும்பி வரும் ஆயுதப் போர்க்கலைக்கு தமிழ்நாடுதான் தாயகம். வளரி என்று சொல்லப்படும் இந்தக் கலையில் வேலு நாச்சியார் வல்லவர். காற்று வீசும் திசைக்கு எதிரியை வரவைத்து, வளரி அடித்தால் அது இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பி வரும். துப்பாக்கிகள், பீரங்கித் தொழில்நுட்பத்துடன் இருந்த வெள்ளையர்களை இந்த வளரி அச்சுறுத்​தியது.

வேலு நாச்சியாருக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது உட்பட ஆறு மொழிகள் தெரியும். திண்டுக்கல் கோட்டை உச்சியில் முகாமிட்டு இருந்த ஹைதர் அலியைத் தன் படை பரிவாரங்களுடன் சந்தித்து, உருது மொழியில் பேசி ஆயுதங்கள் கேட்டார். கணவனை இழந்த ஒரு பெண் இத்தனை தைரியத்துடன் வந்து, அதுவும் உருது மொழியில் பேசியதைக் கண்டு ஹைதர் அலி திகைத்தார்.



சாமி கும்பிடச் சென்ற தன் கணவன் முத்துவடுக​நாதனை இறைவன் சன்னதியில் நிராயுதபாணியாக சுட்டுக் கொன்ற ஆங்கிலேய கவர்னர் பாஞ்ஜோரை கத்தி முனையில் மடக்குகிறார் வேலுநாச்சியார். பாஞ்ஜோரின் கழுத்தில் வாள். அதுவரை ராணியாக இருந்த வேலு நாச்சியார் அந்தக் கணத்தில்தான் மகாராணி ஆகிறார். ஆம், தன் சொந்தப் பகை மறந்து கவர்னரை மன்னிக்கிறார். அந்த மன்னிப்பையும் பட்டயமாக எழுதித் தரச் சொல்கிறார். வெள்ளைக்கார கவர்னர் எழுதித் தந்த மன்னிப்புப் பட்டயம் இப்போதும் ஆவணமாக நம்மிடம் இருக்கிறது.

இந்த உண்மைகளை நாங்கள் நாட்டிய நாடகமாக நடத்தினோம்.. இதில் கதக், மைமிங், இண்டியன் ஃபோக், வெஸ்டர்ன், பரதம் எல்லாம் கலந்து கொடுத்ததால் நாடகம் விறுவிறுப்பாக இருக்கிறது'' என்றார்.
·                                                                                                                                                                    nandri vikatan

கருத்துகள் இல்லை: