திங்கள், 24 ஆகஸ்ட், 2015

அத்திப்பழம் பலன்கள் .

அத்திப்பழம் பலன்கள் .

அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.
பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம்-200 மி.கி,அதிக நார்ச்சத்து, புரதம்-4 கிராம்,இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி,வைட்டமின் பி 12, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும்.நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.)அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
2.)உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
3.)அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
4.) அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும்.
5.) அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும்.
6.)நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்.
7.) அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
8.)போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
9.)தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
10.)தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
**நீர்வியாதிக்குச் செந்தூர வகைகளில் ஒரு வகையுடன் அல்லது ஒன்றோடொன்று கூட்டி நெய்யில் அனுபானம் செய்துக் கொடுத்தப் பிறகு கொஞ்சம் வேகவைத்துப் பிழிந்தெடுத்த அத்திப்பழச் சாறு கால் அல்லது அரை அவுன்ஸ் கொடுத்தால் உட்சூடு,அதிகமாக சிறுநீர் போதல், தாகம் ஆகியவை நீங்கும்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
பசுமை காப்பாளர்கள்
ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் ,மழை பெறுவோம்.,மகிழ்ச்சியாக வாழ்வோம்.

வியாழன், 16 ஜூலை, 2015

"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும்.  சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.

மூளை - வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
 

 
கண்கள் - கேரட், பாதாம்

ண்களை ஆன்மாவின் ஜன்னல் என்பார்கள். கண்களைப் பாதுகாக்க  சன் கிளாஸ், கண்ணுக்கான பயிற்சிகள், அடிக்கடி கண்களைக் கழுவுதல், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது நல்லது.
பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.

காது - காளான்
காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2  சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.
உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது.  மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.

நுரையீரல் - திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.
திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

மார்பகம் - ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது. சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும். சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இதயம் - தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

கணையம்   - சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்)  குறைவு. சர்க்கரை நோயாளிகள் இதை  அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.

வயிறு - இஞ்சி

யிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.' மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும். 
 
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

சிறுநீரகம் - கிட்னி பீன்ஸ்
யர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது. சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.

கருமுட்டை (ஓவரி) - ஆலிவ்

ருமுட்டையின் வடிவத்தில் ஆலிவ் காய்கள் இருக்கின்றன. ஆலிவ்வில் உள்ள சத்துக்கள் எள், மஞ்சள் போன்ற நம் ஊர் உணவுகளிலும் நிறைந்துள்ளன. ஓலிக் (Olic) ஆசிட் நிறைந்தது ஆலிவ். நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், முட்டை, நட்ஸ், மீன் போன்றவற்றிலும் ஓலிக் ஆசிட் கிடைப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஓவரியன் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை அடிப்படையாக மாற்றிக்கொண்டாலே, கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

கர்ப்பப்பை  - அவகேடோ

வகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன.  இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.

செல்கள் - வெங்காயம்

டல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் தேவையற்ற கழிவுகள் படிந்திருக்கலாம். செல்களின் ஆரோக்கியத்தை, வலுவைக் கெடுக்கும் கழிவுகளை, நச்சுக்களை நீக்கும் சக்தி, வெங்காயத்துக்கு உண்டு.
கழிவுகளை வெளியே தள்ளி, டீடாக்சிஃபையிங் ஏஜென்டாக (Detoxifying agent) வெங்காயம் செயல்படுகிறது.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

எலும்பு - கொத்தமல்லி
கொத்தமல்லியின் தண்டுகள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் எனக் கிளைபிரியும் மனித எலும்புகளைப் போன்றவை. கொத்தமல்லியில் சிலிக்கான், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது வைட்டமின் டி, கால்சியம் சத்துக்கள்தான். மேலும், சிலிக்கானும் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவை. கொத்தமல்லியின் இலைகளில், குறிப்பாக இலையின் மையப்பகுதியில் அதிக அளவில் கால்சியம் உள்ளது.  எலும்புகளின்  நெகிழ்வுத்தன்மைக்கும், உடைந்த எலும்புகள் மீண்டும் வளரவும், நீண்ட நாட்கள் வலுவாக இருக்கவும், எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்கவும், தினமும் 30 கிராம் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தம் - பீட்ரூட்


ன்று பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதின் பருவப் பெண்களுக்கு வரும் தலையாய பிரச்னை ரத்தசோகை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதால், ரத்தசோகை ஏற்படுகிறது. பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகளைப் பின்பற்றாததால், கருவுறும்போது ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்தத்தின் நிறத்தில் இருக்கும் பீட்ரூட், ஒரு வகையில் ரத்த உற்பத்தித் தொழிற்சாலை.
பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான நைட்ரேட், ஆக்சிஜன் போன்றவற்றை பீட்ரூட் சாறு கொடுக்கும்.
தினமும் பீட்ரூட் சாறு குடித்தால், மலம், சிறுநீர் ஆகியவை ரத்தம் போல சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை. பீட்ரூட் சாறு, உடலுக்குள் சென்று சரியாக வேலை செய்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி இது.

புற்றுநோய் செல்கள் - புரோகோலி

ம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவு பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. பைடோகெமிக்கல்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. `அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம்' புரோகோலியில் புற்றுநோயை அழிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன   எனக்கண்டறிந்திருக்கிறது.
புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், கந்தகம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும். கணையம், பிராஸ்டேட், மார்பகம், வயிறு, நுரையீரல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.
வாரத்தில் மூன்று நாட்கள், 100 கிராம் அளவுக்கு புரோகோலியைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் திறன் மேம்படும். ஆரோக்கியம் பெருகும்.



 கல்லீரல் பலப்பட

குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகள் கிரீன் ஆப்பிள், முட்டைகோஸ், அஸ்வகந்தா, அக்ரூட், சாமை, குதிரைவாலி, முள்ளங்கி, கீழாநெல்லி, நெல்லி. இந்த உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பற்களின் நண்பன்
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள், ஆப்பிள், கேரட், கீரைகள் ஆகியவை பற்களைப் பாதுகாக்கும். ஊறுகாய், சோடா, குளிர் பானங்கள், மது, சிகரெட், காபி ஆகியவை பற்களுக்கு எதிரி.

ஆரோக்கியமான தசைக்கு

சைகளை ஆரோக்கியமாக்குவதில் ஒமேகா3 ஃபேட்டி அமிலங்களின் சத்து முக்கியமானது. மீன், ஃப்ளக்ஸ் விதைகள், அக்ரூட், புரோகோலி, பால் பொருட்கள், நல்லெண்ணெய், இஞ்சி, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களைச்சாப்பிடலாம்.

தசைநார்கள் வலுவாக

சைநார்களை உறுதிப்படுத்தும் உணவுகளான புரத உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடமிளகாய், மீன், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுகுடல், பெருங்குடலுக்கு

பெருங்குடல் மற்றும் சிறுகுடலை ஆரோக்கியமாக்கும் உணவுகளான ப்ரோபயாடிக் உணவுகள் (தயிர், மோர், யோகர்ட், இட்லி மாவு), மீன், கீரைகள், அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பித்தப்பைக்கு

பித்தப்பைக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு, பயறு வகைகள், மீன், ஆடை நீக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானி
யங்கள், சிறுதானியங்கள் ஆகியவை நன்மை தரக்கூடியவை. 

அழகிய கூந்தலுக்கு

கூந்தல் வளர புரதமும் வைட்டமின்களும் அவசியம். மீன், கீரைகள், பாதாம், அக்ரூட், சிவப்பு கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை நிறக் காய்கறிகள், முட்டை, சோயா, முழு தானியங்கள், கறிவேப்பிலை, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நகங்கள் நலம்பெற

கங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காண்பிக்கும் கண்ணாடி. நகங்கள் பலவீனமாகி உடைந்தாலே ஆரோக்கியமின்மையை உணர்த்துகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இதற்கு, முந்திரி, வாழை, முட்டை, ஆரஞ்சு, பாதாம், தோல் நீக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

நோய்களை எதிர்க்கும் ரெயின்போ காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தை அளிப்பவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு  போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்த உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தைப் பளபளபாக்கும். உட்புறத்தை வலுவாக்கும்.
உணவுகள்எலுமிச்சை, மாம்பழம், அன்னாசி, ஆரஞ்சு, கேரட், பப்பாளி, பரங்கிக்காய், உருளை, சர்க்கரைவள்ளிக்  கிழங்கு, வாழை, மக்காசோளம், கருணைக் கிழங்கு.
கறுப்பு, கருநீல நிறம் கொண்ட உணவுகளில் ஃபிளேவனாய்ட்ஸ், ஆந்தோசைனின் மற்றும் ஐசோஃப்ளேவன்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை, நினைவாற்றல் குறைவு முதல் புற்றுநோய் வரை, பல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
உணவுகள்: கறுப்பு உளுந்து, பீட்ரூட், திராட்சை, கருஞ்சீரகம், கறுப்பு எள், கறுப்பு அரிசி, கத்தரிக்காய், மிளகு, பிளாக் டீ, நாவல் பழம், கறுப்பு உப்பு, பேரீச்சை.
சிவப்பு மற்றும் அடர்சிவப்பு நிறக் காய்கறி பழங்களில் ஆந்தோசைனின், லைகோபீன்  ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக, லைகோபீன் சத்து, பிராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதனால், இந்தக் காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்ளும்படி, அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆந்தோசைனின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உணவுகள்: மாதுளை, தக்காளி, சிவப்பு மிளகாய், ஆப்பிள், தர்பூசணி, சிவப்பு கொய்யா, ஸ்ட்ராபெர்ரி
அன்றாட உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றைத் தயக்கமின்றிச் சாப்பிடலாம். செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக்கூடியவை. வெள்ளை உணவுகளில் இதயத்துக்கு நன்மைகளைச் செய்யும் சத்துக்கள் இருக்கின்றன. மேலும், பூண்டு, வெங்காயம் போன்றவை புற்றுநோயைக்கூட தடுக்கும் என்கிறது தேசிய புற்றுநோய் நிறுவனம்.
உணவுகள்: முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், காளான், தேங்காய், முட்டைகோஸ்.
உடலில் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் இம்யூன் செல்கள் பச்சை நிறக் காய்கறிகளில் நிறைந்துள்ளன. இவை, கெட்ட பாக்டீரியாக்களை குடலிருந்து நீக்குகிறது. உடல் எடையைக் குறைக்கும் சக்தி பச்சை நிற உணவுகளுக்கு உண்டு. வயிறு தொடர்பான புற்றுநோய்களை அழிக்கவல்லது. செரிமானச் சக்தியை மேம்படுத்தும். அதிகமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்திருக்கும்.
 
உணவுகள்: வெள்ளரி, அவரை, கொத்தமல்லி, குடமிளகாய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், கீரைகள், கறிவேப்பிலை, நூல்கோல், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பச்சை மிளகாய்.

புதன், 10 ஜூன், 2015

ரக்‌ஷா தாண்டவம் !
ஜூன்:24 - ஆனித்திருமஞ்சனம்

லகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் நன்கு வாழவும், வினைப்பயன்களால் விளையும் இன்பதுன்பங்களை வென்று மேன்மை பெறவும் சிவபெருமான் நிகழ்த்தும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையே அவரது தாண்டவகோலம் உணர்த்தும் என்பார்கள் பெரியோர்கள். இவற்றுள், சிவனாரின் காத்தல் தொழிலை இரண்டாக வகைப்  பிரித்து விளக்குவர். அவை: அருளிக் காத்தல் மற்றும் அழித்துக் காத்தல்.
உயிர்களுக்குத் துன்பம் நேரும்போது சிவபெருமான் தானே முன்வந்து அத்துன்பத்தை நீக்கி உயிர்களுக்கு அருள்புரிகிறார். இது அருளிக்காத்தல் அல்லது இன்பக் காத்தல் எனப்படும்.
உதாரணமாக, தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  உண்டான ஆலகால விஷத்தை அருந்தி, உயிர்களைக் காத்தருளிய சிவனார் சூலத்தைச் சுழற்றித் தாண்டவம் ஆடினார். அதுவே சந்தியா தாண்டம் (பிரதோஷ தாண்டவம் என்றும் சொல்வர்) என்று போற்றப்படுகிறது. சிவபெருமான் அருளிக்காத்தல் தாண்டவராக எழுந்தருளியிருக்கும் தலம் மதுரை. அங்குள்ள வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவராக அவர் விளங்குகிறார்.

சனி, 11 ஏப்ரல், 2015

நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..

'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்
''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள்.
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன்.

சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம். 

பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. 

'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று. 

எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,

''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர்,  தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.
நன்றி விகடன்

ஞாயிறு, 22 மார்ச், 2015

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!


வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரழிவு நோயைத் தடுக்கும் :

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பைக் கல்லைக் கரைக்கும் :

நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும் :

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.

இளமையைப் பராமரிக்கும் :

இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும் :

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும் :

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பைக் குறைக்கும் :

ஆம், உண்மைதான். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி :

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
------------------------------------------------------------------------------------

புதன், 4 மார்ச், 2015

ஈஷா சிவராத்திரி - விகடன்

ஈஷா சிவராத்திரியில்... லட்சம் பக்தர்கள்!
'சிவா என்றால் 'எது இல்லையோ அது’ என்று பொருள். பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய இருப்பு எதுவென்றால், அது எங்கும் காணப்படும் பிரமாண்டமான வெற்றிடம்தான்! இந்த வெறுமையில் எல்லாம் ஒடுங்குகின்றன. இதை விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது'' என்று சத்குரு அந்த நள்ளிரவில் பேசிய உரையை, கிடுகிடுக்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்தனர் லட்சக்கணக்கான மக்கள். ஆம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷாவின் மகா சிவராத்திரி வைபவம் அது! 
திருவையாறு ஆராதனைபோல தினமும் இசைக் கச்சேரி. பரதம் (கீதா சந்திரன்), ஹிந்துஸ்தானி (தேஜேந்திர நாராயண மஜும்தார்), வாய்ப்பாட்டு (டி.வி.சங்கர நாராயணன் மற்றும் ராஜன்  சாஜன் மிஸ்ரா), வயலின் (கணேஷ்  குமரேஷ்) மற்றும் பாம்பே ஜெயயின் வாய்ப்பாட்டுக் கச்சேரி என தினமும் இசை ராஜாங்கம்.
மகா சிவராத்திரியான பிப்ரவரி 17ம் தேதி, பாடகி ஜிலாகான், பாடகர் பார்த்திவ் கோஹிலின் இசை, கூடி நின்ற கூட்டத்தை ஆட்டம் போட வைத்தது. விக்கு விநாயக் ராமின் கச்சேரி முடிந்தும், கைத்தட்டலும் ஆரவாரமும் அடங்க நேரம் பிடித்தது, அந்த மகா கலைஞனுக்குக் கிடைத்த மெகா பாராட்டு!
பொதிகை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு. தமிழகம் முழுவதும் 104 இடங்களில், பெரிய திரையில்... என  அன்பர்கள் சத்குருவின் சத்சங்கத்துக்காகக் காத்திருந்தனர். மலையடிவாரத்தில் கூடியவர்களோ ஒன்றரை லட்சத்துக்கும் மேலே!
ஏழு மணிக்கு மேடைக்கு வந்த சத்குரு, அவ்வப்போது சொன்ன கதைகள், பாமரனுக்கும் புரியும் ஆன்மிக விதைகள். நள்ளிரவு 12 மணியளவில், அவர் உள்ளங்கைகளை உரசியபடி, சட்டென்று கை தட்டி உச்சரிக்க... அந்த மந்திரச் சொல்லை லட்சக்கணக்கான அன்பர்கள் மீண்டும் சொல்ல... வெள்ளியங்கிரியின் உச்சியை உரசிவிட்டு வந்தது நமசிவாய கோஷம்!
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தமிழர்களின் இசை கலவை.......

புதன், 4 பிப்ரவரி, 2015

மறக்க முடியாத மக்கள் கலெக்டர்

மறக்க முடியாத மக்கள் கலெக்டர்
மேற்கு வங்கத்தைக் கலக்கிய ஸ்ரீபிரியா
பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினம். பிப்ரவரி முதல் தேதி, எளியவர்​களுக்காகப் போராடிய ஸ்ரீபிரியாவைப் புற்றுநோய் பலிவாங்கிவிட்டது.
 2004-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற இவர், மதுரை சட்டக் கல்லூரியில் படித்தவர். சட்டக் கல்லூரியில் பல்வேறு போராட்டங்களுக்குத்  தலைமை​தாங்கியவர். போராட்ட குணமிக்கவர். சட்டக் கல்லூரிகளில் இருந்த ப்ரேக்கிங் சிஸ்டத்தை அகற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வு ஆகாமல் போனால், அந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியாது என்ற அந்த சிஸ்டத்தை உடைக்க உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தமிழ் மொழி மீது ஆர்வம் மிக்கவராக இருந்தார். முதுகலை சட்டப் படிப்பை முடித்ததும் டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் தொழிலை நடத்தி, அங்கு நடைபெறும் அதிகாரப் போக்கை பார்த்து ஐ.ஏ.எஸ் படிப்புக்கு மாறினார்.
தனது கல்லூரி நண்பரான லஜபதிராயை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னும் தொடர்ந்து படித்தார். சட்டப் பாடத்தை முதன்மையாகவும் தமிழை விருப்பப் பாடமாகவும் படித்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று, மேற்கு வங்க மாநிலத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியில் அமர்ந்தார்.
அப்போது அங்கே நானோ கார் தொழிற்​சாலைக்காக நிலம் ஆக்கிரமிப்பு செய்த  விவ​காரம் பரபரப்பாக இருந்தது. நானோ கார் தொழிற்சாலையை சிங்கூர், நந்தி கிராமத்தில் தொடங்க, அங்கு இருந்த ஏழை விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பிடுங்கி கையகப்படுத்தி வந்தபோது ஸ்ரீபிரியா அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை துணிச்சலாகச் செய்தார். விவசாயிகளின் பக்கம் நின்று பேசியதால், போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுகிறார் கலெக்டர் என்று டாடா நிறுவனம் புகார் சொன்னது. இருந்தாலும் அதிகார மையத்துக்கு வளைந்து கொடுக்காமல் மக்களின் பக்கம் நின்றார். உயிருடன் போகமாட்டாய் என்று பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளது.  ஸ்ரீபிரியா மிரளவில்லை.
மேதா பட்கர் அங்கு உள்ள மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை முடக்கச் சொல்லி ஸ்ரீபிரியாவுக்கு குடைச்சல் கொடுத்தனர். 'மக்களின் உரிமைகளை நிலை நாட்ட போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உரிமை இருக்கிறது’ என்று சொல்லிவிட்டார். மாவோயிஸ்ட்களுக்கு சப்போர்ட் பண்ணும்விதமாக கலெக்டர் நடந்துகொள்கிறார் என்று பிரச்னை செய்தனர். எல்லா எதிர்ப்புகளையும் துணிச்சலாக சமாளித்தார்.
ஒரு கட்டத்தில் முதல்வரான மம்தா பானர்ஜியே ஸ்ரீபிரியாவை அழைத்து, 'எப்படியாவது நிலத்தைமீட்க வேண்டும். அது மக்களின் சொத்து’ என்று கட்டளை போட்டதும் போலீஸ் பரிவாரங்களுடன் போய் நிலத்தை மீட்கும் பணியில் இறங்கினார்.
'மிகவும் பழைய பேருந்துகளைத் தூக்கிப் போடுங்கள். அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பேருந்துக் கட்டணங்கள் தாறுமாறாக இருக்கின்றன. மக்களின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கிறது’ என்று முதல்வரான மம்தாவிடம் ஸ்ரீபிரியா துணிச்சலாகப் பேசியதை மேற்கு வங்கப் பத்திரிக்கள் புகழ்ந்து எழுதின.
ஒருமுறை ராமேஸ்வரத்துக்கு வங்காளத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பேருந்து ஒன்று மதுரை அருகே விபத்தில் சிக்கியது. அதில் ஆறு பேர் பலியாகி, பலர் படுகாயம் அடைந்தனர். அப்போது மதுரையில் சிகிச்சை பெற்று வந்த  பிரியா உடனடியாக களத்தில் இறங்கி, காயம்பட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தார். காயம்பட்ட ஒரு நபரின் உடைகள் அழுக்காக இருந்த காரணத்தினால் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அந்த நபரை விமானம் புறப்படும் முன்பு இறக்கிவிட்டது. கோபம் அடைந்த ஸ்ரீபிரியா கடும் வாக்குவாதம் செய்து அவருக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஸ்ரீபிரியாவுக்குப் புற்றுநோய் தாக்கியதைக் கேள்விப்பட்டு மம்தா ஆறுதல் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் சென்றும் பயனில்லாமல் ஸ்ரீபிரியாவின் உயிர் பிரிந்தது.
 ஸ்ரீபிரியாவின் மரணம் அவரது குடும்பத்துக்கு மட்டும் இழப்பு இல்லை.  எளியோர் அனைவருக்கும்தான்!